சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை அரசு பல் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசு பல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று புதிதாக பல் மருத்துவ சேவைக்கென்று ஒரு வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று நேரடியாகவே மக்களை தேடி மருத்துவம் என்பதுபோல ‘மக்களை தேடி பல் மருத்துவம்’ என்ற வகையில் மருத்துவ சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நவம்பர் 1-ந்தேதி பள்ளிகள் திறப்புக்கு பிறகு பள்ளி தலைமை ஆசிரியரிடத்தில் பேசி பெற்றோர்களை ஒருங்கிணைத்து பள்ளிகளுக்கும் இந்த வாகனத்தை அனுப்பி பள்ளி மாணவர்களுக்கும் இந்த சேவையை செய்ய இருக்கிறது.
தமிழகத்தில் 6-வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. தடுப்பூசி சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை இதுவரை நடைபெற்று வந்தது.
இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக சனிக்கிழமை தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும்.
இனி சனிக்கிழமைகளில் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்ற வதந்தி தானாக பரவிவிட்டது. அசைவ பிரியர்களும், மது பிரியர்களும் ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி போட ஆர்வம் காட்டவில்லை. அதனால் சனிக்கிழமை மெகா தடுப்பூசி சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சனிக்கிழமைகளில் முகாம்களுக்கு வரும் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும்.
பெரும்பாலான நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டார்களா என்பது குறித்து நிர்வாகம் சார்பாக கேட்கப்படுவதால் பலர் ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார்கள்.
அவ்வாறு தடுப்பூசி போட தவறியவர்கள் இந்த சனிக்கிழமையில் முகாமை பயன்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி 67 சதவீதம் பேருக்கு முதல் தவணையும், 25 சதவீதம் பேருக்கு 2-வது தவணையும் செலுத்தப்பட்டுள்ளது. இந்த இடைவெளியை சரி செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. சுமார் 30 லட்சம் பேருக்கு 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.
5-வது முகாமில் 11 லட்சம் பேருக்கும், 4-வது முகாமில் 10 லட்சம் பேருக்கும் 2-வது தவணை செலுத்தப்பட்டுள்ளது. எனவே 2-வது தவணை போட்டுக்கொள்ளாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளும் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்
No comments:
Post a Comment