இளைஞர் எழுச்சி நாள்: பேரணி, கலை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்; முதல்வர் உத்தரவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, October 15, 2015

இளைஞர் எழுச்சி நாள்: பேரணி, கலை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்; முதல்வர் உத்தரவு

குடியரசு முன்னாள் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாமின் பிறந்த தினத்தை ஒட்டி, மாணவ-மாணவிகளின் பேரணிகள்-கலைநிகழ்ச்சிகள், அறிவியல் கண்காட்சிகளை நடத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் பிறந்த தினமான அக்டோபர் 15 ஆம் தேதி, இளைஞர் எழுச்சி நாளாகக் கடைப்பிடிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவுப்படி, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வியாழக்கிழமை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களிலும் கல்லூரி-பள்ளி மாணவ மாணவியர், நாட்டு நலப்பணித் திட்டத்தினர் ஆகியோர் பங்கேற்கும் இளைஞர் பேரணி காலை 9 மணிக்கு நடத்தப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் 500 பேர் இந்தப் பேரணியில் பங்கேற்பர். அவர்கள் இளைஞர் எழுச்சி நாள் தொடர்பான பதாகைகளை ஏந்தி ஊர்வலமாகச் செல்வர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி-கல்லூரி மாணவ-மாணவியருக்கு அறிவியல் தொடர்பான பேச்சு-கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. அதில், முதலிடம் பெற்ற மாணவ-மாணவியருக்கு சென்னையில் நடைபெறும் அரசு விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.
மாவட்ட அளவில் பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டு, அதில் தேர்வானவர்கள் மாநில அளவில் சென்னையில் இரண்டு நாள்கள் நடத்தப்படும் கண்காட்சியில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள எம்.சி.சி. பள்ளி வளாகத்தில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. அதில், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 102 அறிவியல் பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
சென்னை பிர்லா கோளரங்கத்தில் வியாழக்கிழமை புகழ்பெற்ற விண்வெளி விஞ்ஞானிகள் விண்வெளியியல் குறித்து உரையாற்றுகின்றனர்.
மேலும், வியாழக்கிழமை பிற்பகல் அனைத்து பள்ளிகள்-கல்லூரிகளில் அப்துல் கலாமின் நாட்டு வளர்ச்சி குறித்த முன்னேற்றச் சிந்தனைகள் பற்றிய உரைகள் நிகழ்த்தப்படும்.
ராமேசுவரத்தில் பேரணி: அப்துல் கலாமின் சொந்த ஊரான ராமேசுவரத்தில் அவர் படித்த பள்ளியில் இருந்து அவர் வசித்த இல்லம் வரை மாணவ-மாணவியர் பங்கேற்கும் பேரணி நடத்தப்படும்.
வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழக அரசின் சார்பில் விழா நடத்தப்படும்.
இந்த விழாவில், கட்டுரை-பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment