கல்வித் துறையை மேம்படுத்த முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கையால், உயர்கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை இரு மடங்கைத் தாண்டியுள்ளது என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.
சென்னையை அடுத்த கொளப்பாக்கத்தில் தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. இதில், வீரமணி மேலும் பேசியது:
கடந்த ஆட்சிக் காலத்தில் கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.36 ஆயிரம் கோடியாகும். இப்போது கல்வித் துறைக்கு ரூ.85 ஆயிரம் கோடியை வழங்கி, 14 வகை சிறப்புத் திட்டங்கள் மூலம் பள்ளிக் கல்வி பெறும் அடுத்த தலைமுறையினர் முன்னேற்றத்தில் அக்கறையை முதல்வர் ஜெயலலிதா செலுத்தி வருகிறார்
இடைநிற்றலைத் தவிர்த்து, மாணவிகளை உயர்கல்விக்கு மேம்படுத்தும் நோக்கில் 2011-இல் ரூ.5 ஆயிரம் வைப்புத் தொகையை வழங்கி, கல்லூரியில் சேர வட்டியுடன் ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார். இதன் பலனாக உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை, அகில இந்திய அளவான 17 சதவீதத்தைவிட இரு மடங்குக்கும் அதிகமாக 42 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி தந்த பள்ளிகளின் எண்ணிக்கை 830. இந்த ஆண்டு 1,150 ஆக உயர்ந்துள்ளது. இந்த வெற்றிக்கு ஆசிரியர்களின் உழைப்பு பாராட்டத்தக்கது என்றார்.
விழாவில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தமிழில் அதிக மதிப்பெண் பெற்ற சேலையூர் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்றவரும், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவியுமான எம்.லாவண்யாவை பாராட்டி அமைச்சர் கேடயம் வழங்கினார்.
கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை, இடைநிலை கல்வித் திட்ட இயக்குநர் ஜி.அறிவொளி, மெட்ரிக். பள்ளிகளின் ஆய்வாளர்கள் எஸ்.எம்.மனோகரன், சந்திரசேகர், செண்பகவல்லி, தமிழ்நாடு தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்புச் செயலர் டி.சி.இளங்கோவன், சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தாளாளர் என்.விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment