நவீன சினிமாக்களின் புராதன வேர் நாடகங்கள்: இன்று சர்வதேச நாடக தினம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, March 27, 2016

நவீன சினிமாக்களின் புராதன வேர் நாடகங்கள்: இன்று சர்வதேச நாடக தினம்

தமிழ் மொழி இயல், இசை, நாடகம் எனும் முப்பெரும் பிரிவுகளை கொண்டது. இயல் தமிழ் இலக்கணத்துடன் கூடியது. இசை தமிழ் இசையுடன் இணைந்தது. நாடக தமிழ் கதை, கூத்து என்பன கலந்து வருவது. தமிழ் நாடக வரலாற்றில் சங்கரதாஸ் சுவாமி காலம் மிகவும் குறிப்பிடத்தக்கது என்றால் மிகையல்ல. இவருடைய நாடக அமைப்புத் திறன், அந்த அமைப்பிலே காணப்படும் நுணுக்கம், நாடகப் போக்கிலே வெளிப்படும் அழகு, நாடகப் பாத்திரங்களின் வாயிலாகப் பாடல்களிலும் உரையாடல்களிலும் அவர் வெளியிட்ட கருத்துகளும் இன்றும் தொன்று தொட்டு தொடர்கின்றன.

அதேபோல பம்மல் சம்மந்த முதலியார், மோசூர் கந்தசாமி முதலியார், ஏகை சிவ சண்முகம் பிள்ளை, கிருஷ்ணசாமி பாவலர் ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர் கள் ஆவர். கிருஷ்ணசாமி பாவலரின் தேசிய படைப்புகளான கதர் பக்தி, பஞ்சாப் கேசரி, தேசியக் கொடி, பம்பாய் மெயில் உள்ளிட்டவை தமிழ் நாடக வரலாற்றில் மறக்கமுடியாதவை. மேலும், தமிழ் நாடகக் கலையின் வளர்ச்சியில் இளம் நடிகர்கள் பலரை கொண்டிருந்த சபைகளின் பங்கு குறிப்பிடத்தக்கது.

மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி மற்றும் மதுரை பாலமீன ரஞ்சனி சங்கீத சபா ஆகியவற்றில் எம்.ஜி.ஆர், பி.யு.சின்னப்பா, காளி என்.ரத்தினம், கே.சாரங்கபாணி, நவாப் ராஜ மாணிக்கம், பி.டி.சம்பந்தம், எம்.எஸ்.முத்துக் கிருஷ்ணன், டி.பி.பொன்னுசாமி, எம்.ஆர்.ராதா, சிதம்பரம் ஜெயராமன், ஏ.எம்.மருதப்பா ஆகியோர் உருவாகினர்.

அமெச்சூர் நாடக சபாக்கள் எனும் பெயரில் இயங்கி வந்த பல சபைகள் மேடை நாடகங்களை நடத்தின. திரைப்பட இயக்குநர் கே.பாலச்சந்தர், மேடை நாடகங்களை திரைப்படங்களாக இயக்கினார். நகைச்சுவை நாடகப் புகழ் கோமல் சுவாமிநாதன் நாடகங் களும், சோ எழுதிய முகம்மது பின் துக்ளக் உள்ளிட்ட பல நாடகங்கள் இன்றும் பேசப்படுகின்றன.

உடுமலை முத்துசாமிக் கவிராயர், நடிகமணி விஸ்வநாத தாஸ், மதுரகவி பாஸ்கர தாஸ், நவாப் ராஜமாணிக்கம், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் 20-ம் நூற்றாண்டில் நாடகப் பணியை நிலைபெறச் செய்தவர்கள் என்றால் மிகையல்ல.

ஆங்கிலேயருக்கு வரி கொடுக்க மறுத்து தூக்குக்கயிற்றில் தொங்கிய வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு இந்தியா வில் விடுதலை வேட்கைக்கான நாடகமாக உருவானது. கட்ட பொம்மு கூத்து என்னும் நாட்டுப்புறப் பாடல் வடிவிலும் பின்னர் நாடக வடிவிலும் கட்டபொம்மன் கதை உருவானது.

நடிக மணி விஸ்வநாத தாஸ், எம்.எம்.சிதம்பரநாதன், எஸ்.ஜி.கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள், பி.யு.சின்னப்பா, எம்.பி.அப்துல் காதர், பி.எம்.கமலம், டி.ஆர்.கோமளம், தி.க.சண்முகம் போன்ற பலரும் விடுதலை இயக்கப் பாடல்களை நாடக மேடையில் பாடி மக்களை எழுச்சி கொள்ளச் செய்தனர். பாவேந்தர் பாரதிதாசன், அண்ணா, கருணாநிதி, ஏ.கே.வேலன், திருவாரூர் கே.தங்கராசு, ஏ.வி.பி.ஆசைத்தம்பி, இராம.அரங்கண்ணல், இரா.செழியன் எனப் பலரும் திராவிட இயக்க நாடகங்களை எழுதியுள்ளனர்.

தற்போது திரைப்படங்களில் கவனம் செலுத்தினாலும் நாடகத்தை தொடர்ந்து இயக்கி வருபவர்களான மவுலி, எஸ்.வி.சேகர், கிரேஸி மோகன், காத்தாடி ராமமூர்த்தி, விசு போன்றோர் முழுக்க முழுக்க நகைச்சுவை நாடகங் களிலேயே கூடுதலாகக் கவனம் செலுத்தி வருகின்றனர். மனிதர்களோடு பின்னிப் பிணைந்துள்ள நாடகக் கலை, வாழ்க்கையோடு இணைந்த காரண காரியத் தொடர்புகளை விளக்கி, மனிதகுல மேம்பாட்டுக்கு உறுதுணையாக விளங்குகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 27-ம் தேதி உலக நாடக தினம் கொண்டாடப்படுகிறது. அரங்கக் கலைஞர்களுக்கு இடையில் கூட்டுணர்வை உருவாக்குவதிலும் வளர்ப்பதிலும் ஆக்கத்திறன் மீதான அக்கறையை விருத்தி செய்வதற்கும், கலைப் படைப்பு மீதான அபிப்பிராயத்தை மக்கள் மத்தியில் விழிப்புணர்வுடன் உருவாக்கவும் உலக நாடக தினம் கொண்டாடப்படுகிறது.

நாடகக் கலைஞர்களை மிகுந்த மரியாதைக்குரியவர்கள் எனக் கூறும் நடிகர் எஸ்.வி.சேகர், “தற்போது நாடகக் கலையை முன்னேற்றுவதைக் காட்டிலும், அவற்றை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில் அவைதான் இன்றைய நவீன சினிமாக்களின் புராதன வேர்கள்” என்றார்.

No comments:

Post a Comment