"போடுவோம் ஓட்டு; வாங்கமாட்டோம் நோட்டு'':சென்னையில் 10 லட்சம் பேர் நாளை உறுதிமொழி ஏற்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, May 9, 2016

"போடுவோம் ஓட்டு; வாங்கமாட்டோம் நோட்டு'':சென்னையில் 10 லட்சம் பேர் நாளை உறுதிமொழி ஏற்பு

         நேர்மையான வாக்குப் பதிவை வலியுறுத்தும் வகையில், ""போடுவோம் ஓட்டு; வாங்க மாட்டோம் நோட்டு'' எனும் வாசகங்களை கூறி, 10 லட்சம் பேர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி சென்னையில் செவ்வாய்க்கிழமை (மே 10) நடைபெறுகிறது.

இது குறித்த விவரம்:

                          சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிப்பதற்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட தேர்தல் அலுவலகம் நடத்தி வருகிறது. அந்தவகையில், ""போடுவோம் ஓட்டு; வாங்க மாட்டோம் நோட்டு'' எனும் வாசகங்களை 10 லட்சம் பேர் உறுதிமொழியாக ஏற்கும் நிகழ்ச்சி சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

                  மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், ஊடகத்துறை, மருத்துவமனைகள், அரிமா சங்கம், ரோட்டரி சங்கம், உயர் நீதிமன்றம், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் இதர தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் உள்ளிட்டோர் அந்தந்த அலுவலகங்களில் உறுதிமொழி ஏற்க உள்ளனர்.

தமிழகம் முழுவதும் ஒருகோடி பேர்:

                     இதேபோல தமிழகம் முழுவதும் 66 ஆயிரம் வாக்குச் சாவடிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒரு கோடி பேர் நேர்மையான வாக்குப்பதிவுக்கு உறுதிமொழி எடுக்க உள்ளனர் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவித்திருந்தார்.

உறுதிமொழி வாசகம்:

                "ஜனநாயகத்தின் மீது இணங்கி நடக்கும் நம்பிக்கையுடைய இந்திய குடிமக்களாகிய நாம், நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான, அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம், ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு துண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என உறுதி அளிக்கிறோம்' என்ற உறுதிமொழியை தேர்தல் ஆணையம் முன்மொழிந்துள்ளது.

மேலும், உறுதிமொழி எடுக்கும் நிகழ்வின் புகைப்படம், உறுதிமொழி எடுத்தவர்கள் எண்ணிக்கை போன்றவற்றை 9445190997, 9445190473, 9884534765 உள்ளிட்ட கட்செவி அஞ்சல் எண்களுக்கும் (அ) dceducation@chennaicorporation.gov.in என்ற இணையதள முகவரிக்கும் அனுப்பி வைக்குமாறு சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் பி.சந்திரமோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment