தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் மே 9-ஆம் தேதி எம்பிபிஎஸ் விண்ணப்ப விநியோகம் தொடங்கும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் அறிவித்திருந்தார்.
ஆனால், பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே 17-ஆம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, விண்ணப்ப விநியோகத்தை சில நாள்கள் தள்ளிப்போட மருத்துவக் கல்வி இயக்ககம் முடிவு செய்தது. இதனிடையே, தேசிய தகுதிக்காண் தேர்வின் மூலம் மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு மீதான தீர்ப்பு திங்கள்கிழமை மாலை வெளியாகியுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அம்சங்களை முழுமையாக ஆய்வு செய்த பின்பு, தமிழக அரசு உயர் அதிகாரிகளோடு கலந்து ஆலோசித்த பின்னர் விண்ணப்ப விநியோகம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment