வட மாவட்டங்களில் பலத்த, மிகப் பலத்த மழை பெய்யும் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, May 17, 2016

வட மாவட்டங்களில் பலத்த, மிகப் பலத்த மழை பெய்யும்

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள தீவிரகுறைந்த  காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது அதே இடத்தில் நீடிப்பதால், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பலத்த, மிகப் பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால், நிகழாண்டு மார்ச் மாதத்திலேயே வெப்பம் தகித்தது.இந்த நிலையில், தென் மேற்கு வங்கக் கடல், இலங்கை கடற்கரைக்கு அருகே உருவான தீவிர குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியானது, திங்கள்கிழமை வட மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது.இது, தற்போது இலங்கை, அதையொட்டிய மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தீவிர குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாகவே நிலை கொண்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, செவ்வாய்க்கிழமை வட தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் பலத்த, மிகப் பலத்த மழையும், தென் தமிழகத்தில் ஆங்காங்கே பலத்த மழையும் பெய்யும். இதேபோல் புதன்கிழமையும் வட தமிழகம், புதுச்சேரியில் ஆங்காங்கே பலத்த மழை பெய்யும் வாய்ப்புள்ளது.மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்தில் புயல் காற்று வீசக்கூடும். குறிப்பாக, தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் அதிகபட்சமாக 70 கி.மீ வரை பலத்த காற்று வீசக்கூடும்.மேலும் அடுத்த 72 மணி நேரத்துக்கு தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் இருக்கும். ஆகையால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆழ் கடலுக்குள் சென்ற மீனவர்கள் உடனே கரைக்கு திரும்புமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.சென்னை மாநகரைப் பொருத்தவரை, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில நேரங்களில் லேசான மழை, இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் வாய்ப்புள்ளது.கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பதிவாகியது. அதிகபட்சமாக நாகைமாவட்டம் வேதாரண்யத்தில் 100 மி.மீ, ராமேஸ்வரத்தில் 90, பாம்பனில் 80, நாகையில் 70, காரைக்குடி, இளையான்குடி, திருப்பத்தூர், தொண்டியில் தலா 60, காரைக்கால், பரமக்குடி உள்ளிட்ட இடங்களில் 50 மி.மீட்டர் மழை பதிவாகியது.

வெப்பத்தைப் பொருத்த வரை, தமிழகத்தில் திங்கள்கிழமை திருப்பத்தூரில் மட்டும் 102 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் பதிவாகியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment