தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக வருகிற திங்கட்கிழமை தேர்தல் நடைபெறுகிறது.
அதிகாரிகள் மும்முரம்
தேர்தல் பிரசாரம் இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணியுடன் முடிவடைகிறது.
234 தொகுதிகளிலும் மொத்தம் 3,776 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் 320 பேர் பெண்கள். 1,566 பேர் சுயேச்சை வேட்பாளர்கள்.
இந்த தேர்தலில் 5 கோடியே 82 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுப்போட இருக்கிறார்கள். வாக்குப்பதிவுக்கான இறுதிக்கட்ட பணிகளில் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் மும்முரமாக உள்ளனர்.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஏற்பாடுகள் தயார்
தமிழகத்தில் இதுவரை 86.44 சதவீத ‘பூத் சிலிப்’புகள் வினியோகிக்கப்பட்டு உள்ளன. ‘பூத் சிலிப்’ கிடைக்காதவர்கள் தேர்தல் கமிஷன் ஏற்கனவே அறிவித்துள்ள 11 ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம்.
தேர்தலுக்காக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. சட்டசபை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவுக்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
தமிழகம் முழுவதும் மொத்தம் 66 ஆயிரத்து ஒரு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. வாக்குப்பதிவுக்காக ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 500 மின்னணு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. இவை தவிர 20 சதவீத எந்திரங்கள் கூடுதலாக வைக்கப்பட்டு உள்ளன.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் தேர்தலுக்கு தேவையான மை, ஆவணங்கள் உள்பட அனைத்து பொருட்களும் ஞாயிற்றுக்கிழமை (நாளை) காலை முதல் இரவு வரை அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும்.
மழை பெய்தால்...
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தற்போது லேசாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளும் கட்டிடங்களில்தான் அமைக்கப்பட்டு உள்ளன.
இருந்தபோதிலும் வாக்குப்பதிவு தினத்தன்று மழை பெய்தால் அதை சமாளிக்க வாக்குச்சாவடி முன்பு பிளாஸ்டிக் கூரை போட உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்காக போதிய நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
செல்போனுக்கு தடை
பதற்றமான வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை, கடந்த தேர்தலை விட இப்போது குறைவாக இருந்தாலும் அவை தீவிரமாக கண்காணிக்கப்படும்.
வாக்குச்சாவடிகளுக்குள் வாக்காளர்கள் செல்போன்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மீறி கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும். ஆனால் வாக்குச்சாவடி தேர்தல் அதிகாரி மட்டும் செல்போன் வைத்துக்கொள்ளலாம். ஆனால் அதையும் வாக்குப்பதிவு குறித்து தேர்தல் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு யாருக்கும் தகவல் கொடுக்க பயன்படுத்தக்கூடாது.
இதேபோல் தேர்தல் முகவர்களும் செல்போன்களை கொண்டு செல்லக்கூடாது. வாக்குப்பதிவின் போது இடையில் அவர்கள் வெளியே வர அனுமதி இல்லை.
வாக்குப்பதிவு தினமான 16-ந் தேதி மாலை 6 மணி வரை மின்வெட்டு ஏற்படாமல் கவனமுடன் செயல்படுமாறு மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
பொம்மை வாக்குப்பதிவு எந்திரங்கள் பறிமுதல்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் என்ற இடத்தில் அரசியல் கட்சியினர் கொண்டு வந்த 50 பொம்மை மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன. இவை புதுச்சேரியில் தயாரிக்கப்பட்டு உள்ளன.
இவை பிரசாரத்துக்காக தான் கொண்டு வரப்பட்டு உள்ளன. அது தவறு கிடையாது. ஆனால் அதுபற்றி முன்கூட்டியே தேர்தல் கமிஷனுக்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் தகவல் தெரிவிக்காததால் பொம்மை வாக்குப்பதிவு எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அந்த எந்திரங்கள் கொண்டு வரப்பட்ட வாகனத்தில் பிரசாரத்துக்கு தேவையான பொருட்கள் இருந்தன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
சூதாட்டம்
சென்னை எழும்பூரில் ஒரு லாட்ஜில் சூதாட்டம் நடப்பதாக வந்த தகவலை தொடர்ந்து, பறக்கும் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது அங்கு ரூ.2 லட்சம் இருந்தது.
ஆனால் விசாரணையில் அங்கு தேர்தல் தொடர்பான சூதாட்டம் நடக்கவில்லை என்பதாலும், அந்த பணத்துக்கு சரியான கணக்கு காட்டப்பட்டதாலும் அந்த பணம் திருப்பி கொடுக்கப்பட்டது. கடந்த 12-ந் தேதி ஒரே நாளில் ஒரு கோடியே 43 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு ராஜேஷ் லக்கானி கூறினார்.
No comments:
Post a Comment