ஓட்டுச்சாவடிகளில் கழிப்பறை, துாங்கும் இடம், உணவு போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால், சட்டசபை தேர்தல் பணிக்குச் செல்ல அரசு ஊழியர்கள், குறிப்பாக பெண்கள் அஞ்சுகின்றனர்.
ஒவ்வொரு தேர்தலின் போதும், ஓட்டுச்சாவடிகளுக்கு தேர்தல் பணிகளுக்காக செல்லும், ஒரு லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் ஏராளம். அவர்கள் வசிக்கும் தொகுதிக்குள் தேர்தல் பணி ஒதுக்க முடியாது.
அதனால், வேறு தொகுதியில் தான் தேர்தல் பணி தரப்படுகிறது. பெரும்பாலான ஓட்டுச்சாவடிகளில், அடிப்படை வசதிகள் இருப்பதில்லை.
அதனால், இரவு துாக்கத்தை இழந்தும், காலைக்கடன்களை கூட கழிக்க முடியாமலும், குளிக்காமலும் தேர்தல் பணியை மேற்கொள்ளும் அவலம் தொடர்கிறது.
பெரும்பாலான ஓட்டுச்சாவடிகளுக்கு, போக்கு வரத்து வசதி கிடையாது. காலையில், ஒரு பஸ்; மாலையில், ஒரு பஸ் சேவை மட்டுமே உள்ள ஊர்கள் ஏராளம். 700 - 800 ரூபாய் செலவழித்து, வாடகை வண்டிகளில் ஓட்டுச்சாவடி உள்ள ஊர்களுக்கு சென்ற அனுபவம் ஏராளம், என அரசு ஊழியர்கள் புகார் கூறுகின்றனர்.
தேர்தல் பணி புறக்கணிப்பு
தமிழகத்தில், 7,000 பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என, மத்திய அரசு ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஓட்டுச்சாவடிகள், அந்த பள்ளிகளில் அமைக்கப்படுகின்றன. குக்கிராமங்களில், இயற்கை உபாதைகளை திறந்தவெளியில் கழிக்க வேண்டியிருக்கும். ஆண்கள் எப்படியோ சமாளிப்பர்; பெண் ஊழியர்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது. எனவே, பெண் ஊழியரின் கணவரும், தேர்தல் பணிக்கு உடன் செல்ல வேண்டி உள்ளது. இதனால் குடும்பமே தவிக்கும் நிலை உள்ளது.
சில இடங்களில் உட்கார நாற்காலி இருக்காது; உணவும் கிடைக்காது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு வேண்டும். வேறு தொகுதிகளில் பணி தரப்படுவதால், 50 கி.மீ.,க்கு அப்பால் உள்ள இடங்களுக்கு செல்வதில் பல சிரமங்கள் உள்ளன. எனவே, அவரவர் பணி செய்யும் ஒன்றியத்துக்குள்ளாகவே, தேர்தல் பணி தர வேண்டும். வட மாவட்டங்களில் சில இடங்களில் தேர்தல் பணியை புறக்கணிக்க ஆசிரியர்கள் முடிவெடுத்து உள்ளனர். சுந்தர், தேனி மாவட்டம், கம்பத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர், தமிழ்நாடு அறிவியல் மன்ற மாநில செயலர்.
'திட்டமிடுங்கள்'
கிராமங்களில் பல பள்ளிகளின் கதவுகளில் தாழ்ப்பாள் கூட இருக்காது. தங்குமிடம், உணவுக்கு, அரசியல்வாதிகளை அணுக வேண்டியுள்ளது. அதை மற்ற கட்சியினர் எதிர்ப்பர். ஓட்டுப்பதிவு முடிந்ததும் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை அனுப்பி விட்டு அங்கேயே மீண்டும் தங்க நேரிடும். அதுபோன்ற நேரத்தில் பெண்களை, பாதுகாப்பாக அனுப்பி வைக்க வேண்டும். தேர்தல் பணியை ஓராண்டுக்கு முன் திட்டமிட்டால் நன்றாக இருக்கும்.
நன்றி:
தமிழ்செல்வி,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவி.
No comments:
Post a Comment