இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் கணிதம், இயற்பியல் பாடங்களில் 200-க்கு 200 மதிப் பெண் (சென்டம்) பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருப்பதால் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிப்பில் சேருவதற்கான கட் ஆப் மதிப்பெண் குறையும்.
பொறியியல் படிப்பில் சேர பிளஸ் 2 கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய 3 பாடங்களில் பெற்ற மதிப்பெண் கணக்கிடப்படுகிறது. கட் ஆப் மார்க் கணக்கீட்டுக்கு கணித மதிப்பெண் 100 சதவீதமும், இயற்பியல் 50 சதவீதமும், வேதியியல் 50 சதவீதமும் (மொத்தம் 200 சதவீதம்) பார்க்கப்படுகிறது. எனவே, பொறியியல் மாணவர் சேர்க்கையில் கணித மதிப்பெண் மிகவும் முக்கியமானது.
பிளஸ் 2 தேர்வில் கணித பாடத்தில் 3,361 பேர் 200-க்கு 200 மதிப்பெண் எடுத்துள்ளனர். கடந்த ஆண்டு 9,710 பேர் கணிதத்தில் சென்டம் வாங்கினர். கணித தேர்வு வினாக்கள் கடினமாக இருந்ததால் சென்டம் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. அதேபோல், கடந்த ஆண்டு இயற்பியலில் 124 பேர் 200-க்கு 200 பெற்ற நிலையில், இந்த ஆண்டு வெறும் 5 பேர் மட்டுமே இயற்பியல் பாடத்தில் 200-க்கு 200 எடுத்துள்ளனர். அதேநேரத்தில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, வேதியியல் பாடத்தில் சென்டம் வாங்கியவர்களின் எண் ணிக்கை இந்த ஆண்டு கணிசமாக அதிகரித் துள்ளது. கடந்த ஆண்டு 1,049 பேரும், இந்த ஆண்டு 1,703 பேரும் வேதியியலில் 200-க்கு 200 மதிப்பெண் வாங்கியுள்ளனர்.
கணிதம், இயற்பியல் பாடங்களில் சென்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருப்பதால் இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிப்பில் சேருவதற்கான கட் ஆப் மதிப்பெண் குறையும்.
இதுகுறித்து ஈரோட்டைச் சேர்ந்த கல்வியாளர் பேராசிரியர் மூர்த்தி செல்வகுமரன் கூறும்போது, “சென்டம் எண்ணிக்கையை கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால் இந்த ஆண்டு பிளஸ் 2 கணித பாடத்தில் 53 சதவீதமும், இயற்பியலில் 96 சதவீதமும் குறைந்துள்ளது. இதன் காரணமாக, இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் 1 முதல் 1.5 மார்க் குறையும். 200 முதல் 195 வரையிலான கட் ஆப் மதிப்பெண்ணில் 1 மதிப்பெண்ணும், அதேபோல், 194 முதல் 185 வரையிலான கட் ஆப் மதிப்பெண்ணில் 1.5 சதவீதமும் குறைய வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு 192.25 கட் ஆப் மதிப்பெண்ணுக்கு மேல் 2,017 மாணவர்களும், 194.25 கட் ஆப் மதிப்பெண்ணுக்கு மேல் 11,845 பேரும் இருந்தனர்” என்றார்.
கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறும்போது, “இந்த ஆண்டு கணிதத்திலும், இயற்பியலிலும் சென்டம் எண்ணிக்கை குறைந்துள்ளது. வேதியியல் பாடத்தில் சென்டம் எண்ணிக்கை 1049-லிருந்து 1703 ஆக அதிகரித்துள்ளது. சென்டம் குறைவான இயற்பியல் பாடத்தில் 198 மதிப்பெண் பெற்றுள்ள மாணவ, மாணவிகள் கணிசமான எண்ணிக்கையில் இருப்பார்கள் என்பது தெரிய வருகிறது. இருப்பினும் பொறியியல் படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் 0.5 முதல் 0.75 மதிப்பெண் வரை குறைய வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment