டெபிட் கார்டு தகவல்கள் திருடப்பட்டு பண மோசடி நடைபெறுவது குறித்து வாடிக்கையாளர்கள் பதற்றமடைய வேண்டாம் என்று நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்.பி.சி.ஐ) கேட்டுக் கொண்டுள்ளது.
கார்டு மோசடிகளை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் பதற்றமடைய வேண்டாம் என்று என்.பி.சி.ஐ. கேட்டுக் கொண்டுள்ளது.
அதாவது, 19 வங்கிகளிலிருந்து 641 வாடிக்கையாளர்களிடமிருந்து கார்டு மோசடி குறித்து புகார் வந்துள்ளது என்றும், மொத்தத் தொகை ரூ.1.3 கோடி என்றும் என்.பி.சி.ஐ. அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
ஆர்பிஐ விதிமுறைகளின்படி மோசடி வங்கி நடவடிக்கைகளுக்கு வாடிக்கையாளர்கள் பொறுப்பல்ல; எனவே, வங்கிகள் அந்தத் தொகைக்கு பொறுப்பேற்க வேண்டும்.
சுமார் 32 லட்சம் கார்டு வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளதால் நிதியமைச்சர் அருண் ஜேட்லி இது குறித்து வங்கிகள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தியுள்ளார். அதாவது, தரவு மோசடி மூலம் பண மோசடி விவரங்களும் சைபர் குற்றங்களைத் தடுக்க வங்கிகளின் தயார் நிலை குறித்தும் விளக்கம் கேட்டுள்ளார் அருண் ஜேட்லி.
இந்தியாவில் சுமார் 60 கோடி டெபிட் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. அதில் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட ருபே கார்டுகள் 19 கோடியாகும். மற்றவை விசா மற்றும் மாஸ்டர் கார்டுகள் என்பது குறிப்பிடத்தக்கவை.
சீனா மற்றும் அமெரிக்காவிலிருந்துதான் இந்திய வாடிக்கையாளர்களின் பெரும்பாலான கார்டு மோசடி பணத் திருட்டுகள் நடைபெறுவதாக வங்கிகள் கூறுகின்றன.
எஸ்பிஐ வங்கி சுமார் 6 லட்சம் கார்டுகளை வாபஸ் பெற்றுள்ளது. பேங்க் ஆஃப் பரோடா, ஐடிபிஐ, சென்ட்ரல் வங்கி, ஆந்திரா வங்கி ஆகியவை வாடிக்கையாளர்களின் ஏற்கெனவே உள்ள டெபிட் கார்டுகளை மாற்றி கொடுத்துள்ளன,
தனியார் வங்கிகளில் ஐசிஐசிஐ, எச்.டி.எப்.சி. மற்றும் யெஸ் வங்கிகள் ‘பின்’ எண்-ஐ மாற்றுமாறு தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.
எஸ்பிஐ வங்கி இது பற்றி கூறும்போது, “கார்டு நெட்வொர்க் நிறுவனங்களான என்பிசிஐ, மாஸ்டர் கார்டு, விசா ஆகியவை நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளுக்கு தரவு மோசடி செய்து பணத்திருட்டு நடைபெறுவது குறித்து மேலும் சில கார்டுகளும் சிக்கலாம் என்று எச்சரிக்கை அனுப்பியுள்ளது. எனவே எஸ்பிஐ, கார்டு நெட்வொர்க் நிறுவனங்கள் அடையாளப்படுத்திய சில வாடிக்கையாளர்களின் அட்டைகளை எஸ்பிஐ பிளாக் செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கார்டு நெட்வொர்க் நிறுவனங்கள் கார்டு மோசடி விவகாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் வாடிக்கையாளர்கள் பதற்றமடைய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
No comments:
Post a Comment