அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அங்கீகாரம் இல்லாமல் இயங்கிவரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் 15 உறுப்பு கல்லூரிகளில், மாணவர்களை சேர்க்க தடை கோரிய
மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை டிஆர்ஓ காலனியைச் சேர்ந்த எஸ்.உமர்பாரூக் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: அண்ணா பல்கலைக்கழகத்தின் 16 உறுப்பு பொறியியல் கல்லூரிகளில், திருச்சியைத் தவிர்த்த 15 உறுப்புக் கல்லூரிகள், பல ஆண்டுகளாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வருவது தெரியவந்துள்ளது.
நடப்பு கல்வி ஆண்டுக்கான (2017-18) ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகள் பட்டியலிலும், திருச்சி பொறியியல் கல்லூரி மட்டுமே இடம்பெற்றுள்ளது. மற்ற 15 உறுப்பு கல்லூரிகள் பட்டியலில் இல்லை. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 688 பொறியியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. இதில், பல்கலைக்கழகம் நேரடியாக நடத்தும் 15 உறுப்பு கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ அங்கீகாரம் பெறாததன் மூலம் மாணவர்களை அண்ணா பல்கலைக்கழகம் ஏமாற்றியுள்ளது.
நடப்பு கல்வி ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு வரும் 27-ம் தேதி தொடங்குகிறது. இந்த கலந்தாய்வில், ஏஐசிடிஇ அங்கீகாரம் பெறாத பல்கலைக்கழகத்தின் 15 உறுப்பு கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க தடை விதிக்க வேண்டும். இந்த கல்லூரிகளில் தற்போது பயின்று வரும் மாணவர்களை ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலர், ஏஐசிடிஇ தலைவர், தமிழக உயர் கல்விச் செயலர், தொழில் கல்வி ஆணையர், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர், அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் ஆகியோர் ஜூலை 6-ம் தேதிக்குள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment