மேல்நிலைப் பொதுத்தேர்வு இனி எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது குறித்த” தேர்வுத் திட்டத்தை வெளியிட்டது பள்ளிக்கல்வித் துறை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, June 22, 2017

மேல்நிலைப் பொதுத்தேர்வு இனி எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது குறித்த” தேர்வுத் திட்டத்தை வெளியிட்டது பள்ளிக்கல்வித் துறை

மேல்நிலைப் பொதுத்தேர்வு இனி எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது குறித்த” தேர்வுத் திட்டத்தை வெளியிட்டது பள்ளிக்கல்வித் துறை
தமிழகத்தில் மாணவர்கள் நீட், ஐ.ஐ.டி உள்ளிட்ட பவ்வேறு போட்டித் தேர்வுகளை
எதிர்கொள்ளும் வகையில் பிளஸ் ஒன், பிளஸ்-டூ தேர்வுத் திட்டத்தை மாற்றி அமைத்து பள்ளிக் கல்வித்துறை அரசாணை பிறப்பித்து, அதை அரசிதழில் வெளியிட்டுள்ளது. 

இந்த ஆண்டில் இருந்து மேல்நிலை இரண்டாம் ஆண்டு போலவே, மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களும் மாநில அளவிலான பொதுத்தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேர்வு நேரம், மதிப்பெண், தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, புதிய தேர்வுத்திட்டத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மத்திய அரசால் 1964-ம் ஆண்டு அமைக்கப்பட்ட கோத்தாரி கல்விக் குழுவின் (1964-66) நாடு முழுவதும் பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வியில் 10+2+3 என்ற அளவில் ஒரே மாதிரியான கல்வி முறை அமைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை வழங்கியது. அக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று ‘‘தேசியக் கல்விக் கொள்கை’’ (1968) வகுக்கப்பட்டது. 
இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் 10 ஆண்டு இடைநிலைக் கல்வி முறையும், இரண்டு ஆண்டு மேல்நிலைக் கல்வி முறையும், மூன்று ஆண்டு உயர் கல்வி பட்டப்படிப்பு முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் மேல்நிலைக் கல்வி முறை பள்ளி அளவில் நடத்தப்பட்டு வருகிறது.
1978-79-ல் தொடங்கப்பட்ட தற்போதைய மேல்நிலைக் கல்வி முறையில், அன்றைய சூழல்களைக் கருத்தில் கொண்டு இரண்டாம் ஆண்டில் மட்டும் மாநில அளவில் அரசுப் பொதுத் தேர்வு நடத்திடலாம் எனவும் முதலாம் ஆண்டை பொறுத்தவரை (பிளஸ் ஒன்) மாவட்ட அளவில் மட்டும் தேர்வு நடத்திடலாம் எனவும் முடிவு செய்யப்பட்டது. 
1980-ம் ஆண்டு மார்ச் மாதம், முதல்முறையாக மாநில அளவில் மேல்நிலை இரண்டாம் ஆண்டில் மாணவர்கள் மேல்நிலைப் பொதுத் தேர்வு எழுதினர். அப்போது, தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கை 1.25 லட்சம். பல மாநிலங்களும், மேல்நிலை வகுப்பைத் தனியாக இளங்கல்லூரிகளாக நடத்த திட்டமிட்ட நிலையில், தமிழ்நாட்டில் மேல்நிலை வகுப்புகள் பள்ளிகளுடன் இணைத்து நடத்தப்பட்டது.
இதன் விளைவாக, மேல்நிலைக் கல்வி வசதி, தமிழ்நாட்டில் பல்வேறு உள்புற கிராமப் பகுதிகளுக்கும் சென்றடைந்தது. இதன்தொடர்ச்சியாக 2017-ம் ஆண்டு மேல்நிலைப் பொதுத் தேர்வில் 8.75 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். மேல்நிலைக் கல்வி பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டபோது, முழு பாடத்திட்டத்தை இரு சமமான தனித்தனிப் பகுதிகளாக பிரித்து, முதலாம் ஆண்டுப் பாடத்திட்டமும், இரண்டாம் ஆண்டுப் பாடத்திட்டமும் வகுக்கப்பட்டன. 
ஆனால், மாநில அளவிலான பொதுத்தேர்வு, மேல்நிலை இரண்டாம் ஆண்டில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. இரண்டாம் ஆண்டுப் பாடப்பகுதியில் நடத்தப்பட்டப் பொதுத்தேர்வில் மாணவர் பெறும் மதிப்பெண்களே மருத்துவம், பொறியியல், வேளாண்மை, சட்டம், கலை, அறிவியல் உள்ளிட்ட பல்வேறு உயர்கல்வி படிப்புகளுக்கான அடிப்படையாக அமைந்தன.
இதில் மருத்துவம், பொறியியல் போன்ற உயர்கல்வி படிப்புகள் அதிமுக்கியத்துவம் பெற்றதால் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வின் மதிப்பெண்களும் அதிமுக்கியத்துவம் பெற்றன. தனியார் சுயநிதிப் பள்ளிகள் பெருகிய நிலையில் பொதுத் தேர்வு மதிப்பெண்களுக்கான போட்டிச் சூழலும் வெகுவாக அதிகரித்து பள்ளிகளில் பாடங்கள் கற்பிக்கும் முறையில் மேல்நிலை முதலாம் ஆண்டு பாடங்களைக் கற்பிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்காமல் இரண்டு ஆண்டுகளுமே பிளஸ் டூ பாடங்களுக்கே முக்கியத்துவம் அளித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனால் பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்று, உயர்கல்விப் படிப்புகளில் சேரும் மாணவர்களும்கூட கல்லூரிகளின் முதலாம் ஆண்டில் தடுமாறும் நிலையும் தேர்வுகளில் தோல்வியுறும் நிலையும் உருவாகியுள்ளதை அண்ணா பல்கலைக்கழகம் போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களும் கல்வியாளர்களும் சுட்டிக்காட்டினர். இந்நிலை, தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம், கேரளா போன்ற மாநிலங்களிலும் உணரப்பட்டதால், அந்தமாநில அரசுகள் மேல்நிலை முதலாம் ஆண்டில் பொதுத்தேர்வு நடத்த முடிவெடுத்து நடைமுறைப்படுத்தி விட்டனர். ஆந்திரப் பிரதேசம் 1978-79-ம் ஆண்டும், கேரள மாநில அரசு 2008-ம் ஆண்டில் இருந்தும் பிளஸ் ஒன் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்தும் நடைமுறையை அமல்படுத்தியுள்ளது.
அதாவது, தமிழகத்தில் 11-ம் வகுப்பு  பாடத்திட்டத்தை முறையாக படிக்காததால், அகில இந்திய அளவில் நடத்தப்பெறும் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பல்வேறு போட்டி நுழைவுத் தேர்வுகளிலும், திறனறித் தேர்வுகளிலும் தமிழக மாணவர்கள் பின்னுக்குத் தள்ளப்படும் நிலை உருவானது. இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வியின் தரத்தை ஆய்வுசெய்து முன்னேற்ற வழிவகைகளைக் கண்டறிய, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில் மூத்த கல்வியாளர்கள் அடங்கிய வல்லுநர் குழு ஒன்று சமீபத்தில் அமைக்கப்பட்டது. அக்குழுவிற்கு அளிக்கப்பட்டப் பணிகளில், "மேம்படுத்தப்பட்ட கல்வி முறைக்கேற்ப தேர்வு முறையில் சீர்த்திருத்தங்கள் பரிந்துரை செய்தல்" என்ற பணியும் ஒதுக்கப்பட்டது. வல்லுநர் குழு பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு மூன்று துணைக் குழுக்களை அமைக்க முடிவு செய்தது. அவற்றில் ஒன்று தேர்வுகள் சீர்த்திருத்தக் குழு. இந்தக் குழு தனது அறிக்கையில் மேல்நிலை முதலாம் ஆண்டிலும் பொதுத்தேர்வு முறையை நடைமுறைப்படுத்துவது அவசியம் என்று பரிந்துரை செய்தது.
துணைக்குழுவின் ஆலோசனையை ஆழ்ந்த பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட ‘வல்லுநர்குழு’ அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 11-5-2017 அன்று கூடி,‘‘பல பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகங்கள் மேல்நிலை முதலாம் ஆண்டு பாடங்களைக் கற்பிப்பதில், முழுகவனம் செலுத்தாத சூழ்நிலை உள்ளது. ஆனால், நீட் போன்ற போட்டித்தேர்வுகளில் மேல்நிலை முதலாம் ஆண்டு பாடத்திட்டத்திலிருந்து ஏறத்தாழ 50 விழுக்காடு வினாக்கள் கேட்கப்படுகின்றன. தமிழக மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு மேல்நிலை முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும் பொதுத்தேர்வினை இந்த கல்வி ஆண்டில் இருந்து (2017-18) தேர்வுத் துறை நடத்தலாம்’’ என்று தீர்மானம் நிறைவேற்றியது.
இதையடுத்து, தற்கால பரிணாமம், இன்றைய உலகளாவிய கல்விச் சூழல், தேசிய அளவிலான போட்டிச் சூழல், மாணவர்களின் எதிர்காலக் கல்வி வளர்ச்சி இவற்றையெல்லாம் அரசு கருத்தில்கொண்டு, அரசுத் தேர்வுகள் இயக்குநர், 'தமிழகத்தில் 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தலாம்' என்று பரிந்துரை வழங்கினார். அதன்படி, பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ பொதுத்தேர்வு குறித்து ஏற்கெனவே உள்ள தேர்வு முறைகளில் சில மாற்றங்களைச் செய்து பள்ளிக் கல்வித்துறை அரசாணை (ஆணை: எண் 100, பள்ளிக் கல்வி (அ.தே.1) தேர்வுத் துறை 22 மே 2017) பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணை தமிழக அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:
2017-18-ம் ஆண்டில் இருந்து மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் மாநில அளவில் அரசு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும். மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்விற்கு 600 மதிப்பெண்களும், மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்விற்கு 600 மதிப்பெண்களும் என இரண்டு ஆண்டுகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மொத்தம் 1200 மதிப்பெண்கள் வழங்கலாம். மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வில் சில பாடங்களில் தோல்வியுறும் மாணவர்கள், ஆண்டு விரயமின்றி இரண்டாம் ஆண்டுக்குச் செல்லவும், தோல்வியுற்ற பாடத்தை / பாடங்களை ஜூன்/ஜூலை மாதத்தில் நடைபெறும் உடனடி சிறப்புத் தேர்விலோ அல்லது இரண்டாம் ஆண்டு இறுதித் தேர்வின்போதோ அல்லது இரண்டிலுமோ பின்னடைவுப்பாடமாக (அரியர்) கல்லூரிகளில் உள்ளது போன்ற நடைமுறையில் தேர்வு எழுதிக் கொள்ளலாம்.
அனைத்துப் பாடங்களிலும் மாணவர்கள் தொடர் கற்றலை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் ஒவ்வொரு பாடத்திலும் 10 விழுக்காடு மதிப்பெண் அகமதிப்பீடாக அளிக்கப்படும். மேலும், தற்போது நடைமுறையில் உள்ள மூன்று மணி நேர பொதுத்தேர்வின் கால அளவானது, தேர்வு முறையில் கொண்டு வந்துள்ள புதிய மாற்றத்தை கருத்தில் கொண்டு, வினாக்களைக் குறைத்து இரண்டரை மணி நேரமாகக் குறைக்கப்படுகிறது. ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்ச தேர்ச்சி விழுக்காடு 35 சதவிகிதமாக நிர்ணயம் செய்யப்படுகிறது. முதலாம் ஆண்டு செய்முறைத் தேர்வினை இரண்டாம் ஆண்டு நடைபெறும் செய்முறைத் தேர்வுடன் இணைத்து நடத்தப்படும்.
இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்விற்குப் பின்னர் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த சான்றிதழ் (Consolidated Markstatement) வழங்கப்படும். மேல்நிலை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மதிப்பெண் வழங்கும் முறை, அதாவது தேர்வுத் திட்டம் இணைப்பு-1ல் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வரசாணை வருகின்ற 2017-18-ம் கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. "இந்தப் புதிய தேர்வுத்திட்ட வழிமுறைகளை 2017-18-ம் கல்வியாண்டிலிருந்து நடைமுறைப்படுத்துவற்கு உரிய தொடர்நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசுத் தேர்வுகள் இயக்குநர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்" என்று பள்ளிக் கல்வித்துறை செயலாளர் த.உதயச்சந்திரன் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment