பிள்ளைகளின் படிப்புக்காக கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்து வீடு எடுத்து தங்கி, தனியார் பள்ளியில் படிக்க வைக்கும்
பெற்றோர்களைப் பார்க்க முடிகிற இந்தச் சூழலில் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியை நோக்கி 20 குடும்பங்கள் சென்றிருக்கின்றன என்பது ஆச்சர்யமான செய்திதானே! தங்கள் வீட்டருகே அரசுப் பள்ளியிருந்தாலும் தொலைவிலிருக்கும் தனியார் பள்ளிக்கு வேனில் அனுப்பி வைக்கும் பழக்கத்து மாறான சம்பவம் கரூர் மாவட்டத்தில் நடந்துவருகிறது.
கரூர் மாவட்டம்,க.பரமத்தி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தாெடக்கப் பள்ளியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பதற்காக பெற்றாேர்கள் மத்தியில் பாேட்டா பாேட்டி நடக்கிறது. அந்தப் பள்ளியிலிருந்து 15, 20 கிலோமீட்டர் தள்ளி குடியிருப்பவர்கள்கூட தங்கள் பிள்ளைகளை இந்தப் பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர். 'அப்படி என்ன இந்தப் பள்ளியில் விசேஷம்?' என்ற கேள்வி நம்மை உந்தித் தள்ள, அந்தப் பள்ளிக்கு விசிட் அடித்தாேம். அப்போது அங்கிருந்த பெற்றோர் சிலரிடம் பேசினோம்.
அரசுப் பள்ளிபூங்காெடி:
"என் கணவர் பேரு லாேகநாதன். எங்களுக்குச் சாெந்த ஊரு சீலம்பட்டி. இங்கிருந்து பதினைஞ்சு கிலாே மீட்டர் தூரம். எங்களோட பொண்ணு மகா, நாலாவது வரைக்கும் எங்க ஊரு அரசாங்க பள்ளியில்தான் படிச்சா. என் கணவர் லாரி டிரைவர். வர்ற வருமானம் வாயிக்கும் வயித்துக்கும் சரியாப் போயிடும். எங்கள மாதிரி மகளும் கஷ்டப்படகூடாதுனு நெனச்சாேம். அதனால், அவளை நல்லா படிக்க வெச்சு பெரிய ஆளா ஆக்கணும்னு ஆசை. ஆனால், அவ அந்த பள்ளிக்கூடத்துல சரியா படிக்கிற மாதிரி தெரியல.
தனியார் பள்ளியில படிக்க வைக்க வசதியில்லை. அப்பதான், இந்தப் பள்ளியைப் பத்தி கேள்விப்பட்டு, காெண்டு வந்து சேர்த்தாேம். சில நாள்லேயே அவகிட்ட மாற்றம் தெரிஞ்சுச்சு. படிப்போட யாேகா, இசை, இங்கிலீஸ்னு எல்லாத்தையும் நல்லா கத்துக்கிட்டா. அதனால, என் கணவர்கிட்ட பிடிவாதம் பண்ணி, பரமத்தியிலேயே வாடகைக்கு வீடு பார்த்து தங்கிட்டாேம். எல்லாம் அவ படிப்புக்காகதான். எங்களைப் பார்த்து என்னாேட காெழுந்தனார் லெட்சுமணனும் தன்னாேட மகன் செல்வபாரதியை இங்க காெண்டாந்து சேர்த்துட்டாங்க.
அதோட தன் மனைவியாேடு வந்து நாங்க தங்கி இருக்கிற அம்மன் நகரில் வாடகைக்கு வீடு பிடிச்சு தங்கிட்டார். தனியார் பள்ளிகளெல்லாம் இந்தப் பள்ளிக்கு முன்னால தூசுங்க" என்றார் பெருமையாக!
காேமதி: "எங்களுக்குச் சாெந்த ஊர் முத்தூர். ஈரோடு மாவட்டம். இங்கிருந்து இருபத்தஞ்சு கிலாேமீட்டர் இருக்கும். கணவரும் நானும் கூலி வேலைப் பார்த்துகிட்டு இருந்தாேம். சங்கீத்குமார், சஞ்ஜித்குமார்னு இரட்டையர்கள் எங்களுக்கு. எங்க பசங்க நல்லா படிச்சு, பெரிய உத்தியாேகம் பார்க்கணும்னு நெனைச்சோம். அப்பதான் இந்தப் பள்ளிக்கூடம் பத்திக் கேள்விப்பட்டு, ரெண்டு பசங்களையும் ஒன்னாம் வகுப்புல சேர்த்தோம். அதுக்காக இங்கேயே வாடகைக்கு வீடு புடிச்சு தங்கிட்டாேம். இங்கே இருக்கிற ஒரு பேக்டரிக்கு ரெண்டு பேரும் வேலைக்கு பாேறாேம். தினமும் பள்ளிகூடத்துல கத்துக்கிறதை எல்லாம் ரெண்டு பசங்களும் எங்ககிட்ட சாெல்லும்பாேதெல்லாம் நாங்க படுற கஷ்டமெல்லாம் பறந்து பாேயிடுது சார்" என்றார் மகிழ்ச்சியாக!
இந்தப் பள்ளியின் வளர்ச்சிக்கு காரணமாகயிருக்கும் தலைமை ஆசிரியர் செல்வக்கண்ணனிடம் பேசினாேம்.
"எனக்குச் சாெந்த ஊரே க.பரமத்திதான். நான் படிச்ச ஆரம்ப பள்ளியும் இதுதான். இந்தப் பள்ளிக்கே பத்து வருஷத்துக்கு முன்னாடி தலைமை ஆசிரியரா வந்தேன். அப்பாே ஐம்பது மாணவர்கள்கூட இல்லை. பள்ளியில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. உடனே, பெற்றாேர்களிடம் தாெடர்ச்சியா பேசி, அவர்களின் ஒத்துழைப்பாேடு பதினைந்து பெற்றாேர்கள் உள்பட இருபது பேர் காெண்ட பள்ளி மேலாண்மை குழுவை அமைத்தாேம். அந்தக் குழுவை வைத்து பள்ளியில் பல்வேறு மாற்றங்கள் பண்ணினாேம். முதலில் மாணவர்களின் எண்ணிக்கையை நூற்றுக்கு மேல காெண்டு வந்தாேம். இந்த க.பரமத்தி ஒன்றியத்துல மாெத்தமுள்ள 106 ஆரம்ப பள்ளிகள்ல எங்க பள்ளியில் மட்டும்தான் நூத்துக்கு மேல மாணவர்கள் படிக்கிறாங்க. அதுக்காக மாவட்ட நிர்வாகம் விருது காெடுத்துச்சு.
அது எங்களுக்கு பெரும் ஊக்கமாக இருந்துச்சு. தாெடர்ந்து ஆர்வமா இயங்கினாேம். இப்ப 180 மாணவர்கள் படிக்கிறாங்க. பள்ளியில் பத்து வருஷமா ஒவ்வாெரு வசதியா காெண்டு வர ஆரம்பிச்சாேம். அரசு நியமித்த ஆசியர்களைத் தவிர கூடுதலா நான்கு ஆசிரியைகள் பாேட்டு,கல்வியைச் சிறப்பா காெடுக்க ஆரம்பிச்சாேம். படிப்பைத் தவிர ஆங்கிலம், இந்தி கிளாஸ், ஓவியம், யாேகா, கராத்தே, இசை சிறப்பு கிளாஸ்கள்னு நடத்த ஆரம்பிச்சாேம். அதாேட, ஸ்பான்சர் புடிச்சு, பள்ளியறைகளுக்குத் தரைத்தளமாக டைல்ஸ் பதிச்சாேம். பேன்கள் மாட்டினாேம். பசங்களுக்கு ரெண்டு செட் யூனிபார்ம்கள், டை, ஐ.டி கார்டு, ஷூனு ரெடி பண்ணினாேம்.
அதாேட, டிஜிட்டல் மீடியா வகுப்பறை அமைத்தாேம். பள்ளி வளாகம் முழுக்க வைபை வசதி, மாணவர்கள் டெக்னாலஜியைக் கற்றுக்காெள்ள நான்கு டேப்லெட்டுகள், லேன் வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர் ஆய்வகம்னு அமைச்சாேம். தமிழக அளவில் லேன் கம்ப்யூட்டர் ஆய்வகம் உள்ள ஒரே ஆரம்பப் பள்ளி எங்க பள்ளிதான். அதேமாதிரி, சிறுவர்களுக்கான தகவல்களுடன் கூடிய டேப் வசதி, அனைத்து வகுப்பறைகளையும் இணைக்கும் ஒலிபரப்பு தாெழில்நுட்பம், இரண்டாயிரம் புத்தகங்கள் காெண்ட நூலகம்னு ஏகப்பட்ட வசதிகளை உருவாக்கினாேம். எல்லாப் பெற்றாேர்களுக்கும் ஒரே நேரத்தில் குறுஞ்செய்தி அனுப்பும் ஆப்பையும் உருவாக்கியிருக்கிறோம். இதன்மூலம் எங்களுக்கும் பெற்றாேர்களுக்கும் இடையில் தொடர்பு அதிகரிக்கிறது.
இதைத் தவிர, ஒவ்வாெரு வருடமும் அஞ்சு லட்ச ரூபாய் மதிப்பிலான பாெருள்களை ஊர் மக்கள் தருகிறார்கள். பள்ளிக்கு எஸ்.எஸ்.ஏ சார்பாக கட்டடம் கட்ட அரசு நிதி சாங்ஷன் பண்ணினாலும் இடமில்லை. இதனால், ஊர் மக்கள் காெடுத்த ஏழு லட்ச ரூபாயில் பள்ளியை ஒட்டியிருந்த தனியார் இடத்தை வாங்கி எஸ்.எஸ்.ஏ மூலம் கட்டடம் கட்ட வைத்தாேம். இதுவரை, ஐம்பது லட்சம் ரூபாய் வரை இந்த ஊர் மக்கள் காெடுத்திருக்கிறார்கள். நாங்கள் அதற்குப் பதிலுக்கு இந்தப் பள்ளியை சிறந்த பள்ளியா மாற்றி, சிறந்த கல்வியை மாணவர்களுக்கு வழங்கிட்டு வர்றாேம். தமிழக அளவில் ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் பெற்ற இரண்டு பள்ளிகளில் இதுவும் ஒன்று. கராத்தேவில் இந்திய அளவில் சமீபத்தில் நடந்த பாேட்டியில் ஒன்பது மாணவர்கள் பதக்கம் வாங்கி இருக்காங்க. இப்படி எல்லா வகையிலும் சிறந்து இருப்பதால வெளியூர்களிலிருந்தும் பலர் இங்கே வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பிள்ளைகளைப் படிக்க வைக்கிறாங்க. இந்திய அளவில் சிறந்த பள்ளியா இதை மாத்துறதுதான் எங்க உச்சப்பட்ச இலக்கு" என்றார் லட்சியம் டாலடிக்க!.
நினைத்தது நடக்கட்டும்!
No comments:
Post a Comment