அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதங்களுக்குள் மூடுக; வெளிநாட்டு மணல் இறக்குமதியை அனுமதிக்கவும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆணை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, November 29, 2017

அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதங்களுக்குள் மூடுக; வெளிநாட்டு மணல் இறக்குமதியை அனுமதிக்கவும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆணை

மக்கள் நலன், இயற்கை வளம் மற்றும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மணல்
குவாரிகளையும் 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என்றும் புதிய மணல் குவாரிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை ஆவுடையார்கோவில் எம்.ஆர்.எம் ராமையா எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிர்வாக இயக்குனர் ராமையா, தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் கிளை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கு இன்று (நவம்பர் 29 2017) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி ஆர்.மகாதேவன், "மக்கள் நலன், இயற்கை வளம் மற்றும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதங்களுக்குள் மூட வேண்டும். புதிய மணல் குவாரிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது. மேலும், மணல் தேவையை எதிர்கொள்ள வெளிநாட்டிலிருந்து மணலை இறக்குமதி செய்யலாம். மணல் சுரண்டலைத் தடுக்க வேண்டியது அவசியம்" என்று தீர்ப்பு வழங்கினார்.
உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விவரம்:
வெளிநாடுகளிலிருந்து மணல் இறக்குமதி செய்ய மத்திய அரசிடம் உரிமம் பெற்று, மலேசியாவில் இருந்து 53334 மெட்ரிக் டன் மணல் இறக்குதி செய்தோம். இந்த மணல் தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு மணல் விற்பனையை அதிகாரிகள் தடுத்து வருகின்றனர். மத்திய வார்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்திடம் முறையாக அனுமதி பெற்றே மணல் இறக்குமதி செய்துள்ளோம். இதை விற்பனை செய்யக்கூடாது என அதிகாரிகள் தடுப்பது சட்டவிரோதம்.
எனவே மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை வாடிக்கையாளர்களுக்கு வழங்க அனுமதி வழங்கவும், அதிகாரிகள் பறிமுதல் செய்த 6 லாரிகளையும் அதிலிருந்த மணலையும் திரும்ப ஒப்படைக்கவும் உததரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது,  மனுதாரர் தரப்பில் தூத்துக்குடி துறைமுகத்தில் இருக்கும் மணலை சாலை மார்க்கமாக கேரளா கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு அரசு வழக்கறிஞர் ஆட்சேபம் தெரிவித்தார். அவர் வாதிடுகையில், இறக்குமதி மணலை சுமார் 3500 லாரிகளில் கொண்டுச் செல்லப்படும். இதற்கு ஒரே நாளில் அனுமதி வழங்குவதும், இதனை கண்காணிப்பதும் சிரமமானது. இதனால் சாலை மார்க்கமாக மணலை கேரளாவுக்கு கொண்டு் செல்ல அனுமதி வழங்க முடியாது என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, மத்திய அரசிடம் முறையாக அனுமதி பெற்று வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை, ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகள் வசூலித்த நிலையில் சாலை வழியாக எடுத்துச் செல்ல அனுமதி மறுப்பது சரியல்ல.
இறக்குமதி செய்யப்பட்ட தடை செய்யப்படாத பொருளை விற்பனைக்காக ஒரு மாநிலத்திற்கு வேறொரு மாநிலத்துக்கு கொண்டு செல்ல மத்திய அரசு அனுமதிக்கிறது. இதற்கு தடை விதிக்க முடியாது என்றார்.
தொடர்ந்து அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், இறக்குமதி செய்யப்பட்ட பொருளை தமிழகம் வழியாக வேறொரு மாநிலத்திற்கு எடுத்துச்செல்லும் போது தமிழகத்தை சேர்ந்த முகவர் சங்கங்களில் மனுதாரர் உறுப்பினராக இருக்க வேண்டும். ஆனால் மனுதாரர் தமிழக முகவர் சங்கங்களில் உறுப்பினராக இல்லை. இதனால் மணலை சாலை மார்க்கமாக எடுத்துச்செல்ல அனுமதி வழங்க முடியாது. மணல் கடத்தலை தடுக்கவே இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன என்றார்.
இதற்கு நீதிபதி, உண்மையில் மணல் கடத்தலை தடுப்பதாக இருந்தால் மாநிலத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் மூடிவிடலாம். அப்படி செய்தால் தமிழகத்தின் இயற்கை வளம் பாதுகாக்கப்படும். அனுமதி பெற்று இறக்குமதி செய்த மணைலை விற்பனை செய்வதற்கு மனுதாரருக்கு தற்காலிக உரிமம் வழங்க வேண்டும். இது தொடர்பாக அரசிடம் தகவல் கேட்டு  தெரிவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மக்கள் நலன் கருதி நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்தது.
அவை:
1. தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதங்களுக்குள் மூட வேண்டும்.
2. புதிய மணல் குவாரிகளுக்கு அனுமதி கொடுக்கக்கூடாது.
3. மணல் கடத்தலைத் தடுக்க சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்
4. மணல் தேவையை பூர்த்தி செய்ய வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்யலாம்.
5. வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்வதற்குத் தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்
6. சுற்றுச்சூழல் சமநிலையை கருத்தில் கொண்டு ஜல்லி குவாரி தவிர்த்து கிரானைட் மற்றும் கனிமவள குவாரிகளையும் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த உத்தரவுகளை பொதுமக்கள் நலன் கருதி தமிழக அரசு விரைவில் செயல்படுத்தும் என இந்த நீதிமன்றம் நம்புகிறது.

No comments:

Post a Comment