ஆசிரியர், மாணவர் பிரச்சினை: உண்மையான காரணங்களும் உளவியல் ஆலோசனைகளும்
பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்களுக்கும்
மாணவர்களுக்கும் இடையிலான உறவுமுறை சீர்குலைந்துவருகிறது.
உதாரணமாக, சரியாக படிக்காததால் பெற்றோரை அழைத்து வருமாறு தலைமை ஆசிரியை கூறியதால், அரக்கோணம் அருகே அரசுப் பள்ளியின் 4 மாணவிகள், கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக 2 ஆசிரியைகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
திருவள்ளூரில் பள்ளிக் கழிப்பறையை மாணவிகளே சுத்தம் செய்ததாக எழுந்துள்ள புகாரை அடுத்து, தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
அதிக முடி வளர்த்து பள்ளிக்கு வந்த திருவாரூர் அரசுப்பள்ளி மாணவனின் தலைமுடியை வெட்ட வைத்த ஆசிரியை கைது செய்யப்பட்டார். இத்தகைய சம்பவங்கள் எதை உணர்த்துகின்றன, இவற்றுக்கு என்ன தீர்வு இருக்க முடியும்?
இன்றைய மாணவர்களின் மனநிலைக்கு ஆசிரியர்களும் பெற்றோர்களுமே காரணம். முன்னரெல்லாம் பெரும்பாலான இருதரப்பினருமே குழந்தைகளை அடித்து, கண்டித்து வளர்த்தார்கள். ஆனால் இன்று அது சாத்தியமில்லை.
கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுக்கும் பெற்றோர்களைத்தான் இன்று பார்க்க முடிகிறது. வீட்டில் எல்லையற்ற சுதந்திரம், கையில் செல்போன் என்று கட்டற்ற மனநிலையில் குழந்தைகள் வளர்கிறார்கள்.
அவர்களிடம் ஆசிரியர்கள் எவ்வளவு தூரத்துக்குத்தான் அன்பாகவே இருக்க முடியும்? இவ்வளவு சம்பளம் வாங்குகிறீர்களே, மாணவர்களை எழுதவைக்க, தேர்ச்சிபெற வைக்க முடியாதா என்ற அதிகாரிகளின் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டுமே!
இன்னொரு முக்கியப் பிரச்சினை மதிப்பெண் எல்லை. இத்தனை மதிப்பெண் பெற்றால்தான் தேர்ச்சி என்ற அமைப்பு முறை. ஏன், யாருக்காக இந்த அளவுகோல்? மனப்பாடம் செய்ய முடியாத மாணவன் மோசமானவனா? இதுமாதிரியான கேள்விகளுக்கு நம்முடைய கல்வித்திட்டம் பதிலளிக்க வேண்டும்.
கழிப்பறையைச் சுத்தப்படுத்திய மாணவிகள் விவகாரம் என்னுள் சில கேள்விகளை எழுப்புகிறது. நம்முடைய வேலையை நாமே செய்துகொள்ளப் பழக்கப்படுத்துவது தவறா?, நம்முடைய அம்மாவோ, அப்பாவோ அந்த வேலைகளைச் செய்தால் நாம் ஏற்றுக்கொள்வோமா, அதேபோலத்தானே அப்பணியாளர்களின் குழந்தைகளும் யோசிப்பார்கள்.
ஆசிரியர்களின் கழிப்பறைகளை ஆசிரியர்களும், மாணவர்களின் கழிவறைகளை அவர்களே சுத்தப்படுத்துவதிலும் என்ன தவறு?
பெற்றோர்களின் முதலீடா குழந்தைகள்?- ஆயிஷா நடராசன் - எழுத்தாளர், கல்வியாளர்
ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் உணர்த்துவது ஒரேயொரு விஷயத்தைத்தான். அவர்கள் பேசுவதை, பேச விரும்பதை யாரும் கவனித்து, காது கொடுத்துக் கேட்பதில்லை. அதிகாரிகள் கேட்கும் 'அனைவரும் தேர்ச்சி' அழுத்தம் தலைமை ஆசிரியருக்கும் அவர் வழியாக ஆசிரியர்களுக்கும் அவர்கள் மூலம் மாணவர்களுக்கும் கடத்தப்படுகிறது. மையப்புள்ளியான மாணவர்கள் இதில் கண்டுகொள்ளப்படுவதே இல்லை.
இன்றைய காலத்தில் ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு விட்டார்கள். முற்காலங்களில் ஊரின் முக்கியப் புள்ளியாக ஆசிரியர் இருப்பார். அவரிடம் ஆலோசனை பெற்றுத்தான் அனைத்து முக்கியக் காரியங்களும் மேற்கொள்ளப்படும். அந்த உறவு இப்போது அறுக்கப்பட்டுவிட்டது. பெற்றோர்களும் ஆசிரியர்களுடன் தொடர்பில் இருப்பதில்லை.
பெற்றோர், ஆசிரியர், மாணவர் என்ற முக்கோணத்தில் பெற்றோர் விடுபடுகின்றனர். பள்ளி மட்டுமே ஒரு மாணவருக்கு கல்வி கற்பிக்காது. காலை எழுந்ததில் இருந்து இரவு உறங்கச் செல்லும்வரை ஒரு குழந்தை மேற்கொள்ளும் அனைத்துமே அவருக்கான பாடம்தான். முன்னெல்லாம் குழந்தைகளிடம் கண்பார்த்து, மனம் விட்டுப் பேசப் பெரியோர்கள் இருந்தார்கள். இப்போது காலம் மாறிவிட்டது. குழந்தைகளைப் பெற்றோர்கள் தங்கள் சொத்தாக.. முதலீடாக நினைக்கிறார்கள். அதுதான் இப்போதைய பிரச்சினைக்கான ஆணிவேர்.
என்ன செய்யலாம்?
* வகுப்பறை விதிகளை மாணவர்களே உருவாக்க ஆசிரியர் வழிவகை செய்யவேண்டும்.
* சின்னச் சின்ன (silly) விஷயங்களில் முடிந்தளவு ஆசிரியர் விட்டுக்கொடுக்க வேண்டும்.
* வகுப்பறைக்குள் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்ட மாணவர் குழுக்களை அமைக்க வேண்டும். அவ்வப்போது குழுவிலுள்ள மாணவர்களை மாற்றவேண்டும்.
* ஆசிரியர்கள் பொதுவாக மாணவர்களுக்கிடையே பாகுபாடு, வேறுபாடு காட்டாமல் பழக வேண்டும்.
* ஒழுக்கம் சார்ந்த பிரச்சினைகளை வகுப்பறைகளில் ஆரோக்கியமான முறையில் விவாதிக்க வேண்டும்.
அச்சத்தால் ஒடுக்கப்படும் ஆசிரியர்கள்: ஜான் ஆரோக்கிய பிரபு, தனியார் பள்ளிகள் சங்க துணைத் தலைவர்
மாணவர் உரிமையைப் பற்றிப் பேசும் நாம், ஆசிரியரின் பாதுகாப்பு குறித்தும் உரிமை பற்றியும் பேசுவதில்லை. பலமுறை அறிவுறுத்தியும் முடிவெட்டாமல் வந்த மாணவனுக்கு முடி வெட்டிவிட சொன்னது தவறா? இதற்காக சம்பந்தப்பட்ட ஆசிரியரை இடை நீக்கம் செய்வீர்களா?
இன்னும் கொஞ்ச நாட்கள் ஆனால், ஆசிரியர்கள் மாணவரைப் பார்த்தே பேசக்கூடாது என்ற நிலை ஏற்படும் போலிருக்கிறது. மாணவர் ஒருவர் ஆசிரியரைக் கத்தியால் குத்திய சம்பவம் யாருக்காவது நினைவில் இருக்கிறதா? அதைப்பற்றி யாராவது இப்போது பேசுகிறோமா? அந்த மாணவர் இப்போது வெளிநாட்டில் சுதந்திரமாக இருக்கிறார்.
இன்றைய காலகட்டத்தில் புத்தரும் ஏசுவுமே ஆசிரியராக இருக்கமுடியும். சாதாரண மனிதர்களால் முடியாது. இப்போது ஆசிரியர்கள் அச்சத்தால் ஒடுக்கப்படுகின்றனர். சத்தமாக ஒரு வார்த்தைகூடப் பேச முடியாத நிலையில்தான் அவர்கள் இருக்கின்றனர்.
இந்நிலை மாற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு முறையான உளவியல் ஆலோசனை வழங்கப்பட வேண்டும். அதே நேரத்தில் மாணவர்கள் மீதான ஆசிரியர்களின் பாலியல் மற்றும் உடல்ரீதியான துன்புறுத்தல்களைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்.
நுரைக்குமிழ் மனநிலையில் மாணவர்கள்: அசோகன், மனநல ஆலோசகர்
இந்த நவீன காலகட்டத்தில் மாணவர்களைத் திட்டுவதே தவறா என்ற கேள்வி எழுகிறது. இன்றைய இளைய சமுதாயமே நுரைக்குமிழ் (Bubble) மனதைக் கொண்டிருக்கிறது. சுமுகமாக விஷயங்கள் நடக்கும்வரை எதுவும் பிரச்சினையில்லை. ஆனால் சின்னத் தோல்வி ஏற்பட்டால்கூட மாணவர்கள் உடைந்துபோகின்றனர். இதற்கு பொத்தாம்பொதுவாக பெற்றோரைக் குறை சொல்வது சரியல்ல. குழந்தைகளை நாம் வளர்க்கவில்லை. அவர்களாகவே வளர்கிறார்கள்.
முன்னெச்சரிக்கைகள் இல்லாமல் புதிதுபுதிகாகக் கற்றுக்கொள்வது, ஆடம்பரமான வாழ்க்கை, அனைத்துமே எளிதில் கிடைத்துவிடும் தன்மை ஆகியவை இன்றைய தலைமுறையின் முக்கியப் பிரச்சினை. நாம் குழந்தைகளுக்கு எதிர்மறைப் பார்வையைக் கற்பிக்க மறந்துவிட்டோம்.
முன்னெல்லாம் அனைத்து சுப, துக்க காரியங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வார்கள். அப்போது அவர்கள் உறவின் அருமையை, இழப்பின் வலியை உணர்ந்தார்கள். ஆனால் இன்றைய சமுதாயம் அதை அவர்களுக்கு அளிப்பதில்லை.
கடுமையாகிவிட்ட பணி
இன்றைய காலகட்டத்தில் ஆசிரியப் பணி மிகவும் கடுமையாகிவிட்டதாகத் தோன்றுகிறது.
ஆசிரியரின் கண்டிப்பு எல்லை மீறக் கூடாது என்பதற்காக அவர் மாணவரைக் கண்டிக்கவே கூடாதா? இந்த நேரத்தில் பாம்பு- முனிவர் கதை நினைவுக்கு வருகிறது. முன்னொரு காலத்தில் ஓர் ஊரில் இருந்த பாம்பைக் கண்டு அனைவருமே நடுங்கினர். அந்த ஊருக்கு வந்த முனிவரிடம் பாம்பு பற்றிய அச்சத்தை வெளியிட்டனர். முனிவர் பாம்பிடம் சென்று, 'இனிமேல் மக்கள் யாரையும் கடிக்காதே' என்று அறிவுரைத்துச் சென்றார். சில காலங்கள் கழித்து அதே ஊருக்கு வந்தார் முனிவர். அப்போது பாம்பு அடிபட்டு, சோர்வாகப் படுத்திருந்தது. காரணம் கேட்ட முனிவரிடம், 'நீங்கள் யாரையும் கடிக்காதே என்று சொன்னீர்கள், நானும் அதைக் கேட்டு அமைதியானேன். ஆனால் நான் கடிப்பதில்லை என்று உணர்ந்த மக்கள், என்னை அடிக்கத் துவங்கினார்கள். உங்களின் பேச்சை மதித்து அமைதி காக்கிறேன்' என்றது பாம்பு.
அப்போது முனிவர் அமைதியாகச் சொன்னார், 'உன்னைக் கடிக்க வேண்டாம் என்றுதானே சொன்னேன். சீற்றம் கொள்ள வேண்டாம் என்றேனா?' என்றார்.
அதேநிலைதான் இன்றைய ஆசிரியர்களுக்கும். ஆசிரியர்கள் நிச்சயம் சீறவேண்டும். ஆனால் துன்புறுத்தக் கூடாது. பொதுவாகப் பெரும்பாலான ஆசிரியர்கள் அளவுக்கு மீறித் தங்கள் மாணவர்களைக் கையாள்வதில்லை. ஒருசிலர் செய்யும் தவறுக்கு ஒட்டுமொத்த ஆசிரிய சமுதாயத்தின் மீது களங்கம் ஏற்படுகிறது.
மாணவர்களின் தற்கொலைக்கு என்ன காரணம்?
ஆசிரியர்கள் அவமானப்படுத்தினர் என்று கூறித் தற்கொலை செய்வதற்குப் பின்னால் பல்வேறு உளவியல் காரணங்கள் இருக்கின்றன. தனது உயிரைத் துச்சமாக மதிக்க பிறரால் ஏற்பட்ட அவமானம், வெட்கம், ஏழ்மை, உணர்ச்சி மிகுந்த நிலை, அழுத்தம், மனவருத்தம் ஆகிய உணர்வுகள் முக்கியக் காரணிகளாக அமைகின்றன.
பிரச்சினையில் இருந்து தப்பிக்க இதுதான் தீர்வு என்று தீர்க்கமாக நம்புவது, பிரச்சினையைத் தள்ளிப்போடும் மனநிலையை உருவாக்காமல் இருப்பது, கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சிகளுக்கு அடிமையாவது ஆகியவையும் தற்கொலைக்கான முக்கியக் காரணங்கள்.
பிரச்சினையில் சம்பந்தப்பட்டவர்களையும் பெற்றோரையும் மிரட்ட, விளையாட்டாகத் தற்கொலைக்கு முயற்சிப்பதும் விபரீதத்துக்கு வழிவகை செய்கிறது.
ஆசிரியர்கள் என்ன செய்யலாம்?
* ஆசிரியர்கள், மாணவர்கள் செய்யும் தவறைக் கண்டிப்பதற்கு முன்னால், அவர்களின் குடும்ப சூழ்நிலையையும் கவனிக்க வேண்டும்.
* பாலியல் சார்ந்த விவகாரங்களைக் குறிப்பாக திருமணம், ஆசை, உணர்வுகள், எதிர்பார்ப்பு ஆகியவை குறித்து, எல்லை மீறாத அளவுக்கு மாணவர்களிடம் விவாதிக்கலாம்.
* இப்போது குழந்தைகள் அனைவரும் பெரியவர்களைப் (adult) போல நடந்துகொள்கிறார்கள். அவர்களின் மனநிலைக்கு ஏற்றவாறு ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.
* பெற்றோர்களிடம்கூடக் கூற முடியாததை ஆசிரியர்களிடம் மாணவர்கள் பகிர்ந்துகொள்ளும் பழைய கலாச்சாரத்தை மீட்டெடுக்க வேண்டும்
No comments:
Post a Comment