அரசு பள்ளிகளில் சமூக விரோதிகளை விரட்ட ஒத்துழைப்பு அவசியம்!பெற்றோருக்கு கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, November 26, 2017

அரசு பள்ளிகளில் சமூக விரோதிகளை விரட்ட ஒத்துழைப்பு அவசியம்!பெற்றோருக்கு கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தல்

அரசுப்பள்ளிகளில் அத்துமீறும் சமூக விரோதிகளை விரட்ட, பெற்றோரின் ஒத்துழைப்பும் அவசியம் என கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் ஒன்றியத்தில் மொத்தமாக, 29 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன.
நான்கு பள்ளிகளைத் தவிர மீதமுள்ள அனைத்து பள்ளிகளும் கிராமப்புற பள்ளிகள்தான்.
தேவனுார்புதுார், திருமூர்த்திநகர், ஜல்லிபட்டி உள்ளிட்ட பகுதி பள்ளிகளின் சுற்றுச்சுவர் சிதிலமடைந்து உள்ளது. அரசின் சார்பில், பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் அமைப்பதற்கென, அனைவருக்கும் கல்வி இயக்ககம் மற்றும் இடைநிலை கல்வி இயக்ககம் சார்பில் கல்வியாண்டு தோறும், நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளாக, அதற்கென தனியான நிதி ஒதுக்கீடு இல்லை.அத்துமீறல் தொடர்கிறதுஇதனால், பல அரசுப்பள்ளிகளும், மாலை நேரத்தில் சமூக விரோதிகளின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன. பள்ளிகளில்அத்துமீறி நுழைவதும், மது அருந்துவதற்கு, வகுப்பறைகளை பயன்படுத்தும் அவலங்கள் தொடர்ந்து வருகின்றன.இதனால், பள்ளிக்குழந்தைகள் பெரிதளவில் பாதிக்கப்படுகின்றனர் என்பதை அறிந்தும், அரசு இதுவரை எந்த கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பது பெற்றோரின் அதிருப்தியாக உள்ளது. சுற்றுச்சுவர் இல்லாததால், வெளியாட்கள் பள்ளிக்குள் எளிதாக நுழைந்து பொருட்களை சேதப்படுத்துகின்றனர்.கிராமப்புற பள்ளிகளில்தான் இப்பிரச்னை தொடர்ந்து நடக்கிறது. இதற்கு, தீர்வு காண்பதால் மட்டுமே, குழந்தைகள் நிம்மதியாக படிக்க முடியும் என பள்ளி மேலாண்மை வளர்ச்சி திட்டக் குழு கூட்டத்தில் பெற்றோர் ஆவேசமடைந்தனர்.

அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்ககத்தின் மூலம், கல்வியாண்டு தோறும், இக்கூட்டம் நடத்தப்படுகிறது. இதில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், உதவி தலைமையாசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழுவில் உள்ள பெற்றோர்கள் என மொத்தம் ஒரு பள்ளியை சேர்ந்து ஐந்துபேர் பங்கேற்கின்றனர்.பள்ளிகளில், உள்ள பிரச்னைகளை கேட்டறிந்து, அதற்கான நடவடிக்கைகள் குறித்தும், பள்ளியின் வளர்ச்சிக்கான தேவைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் ஒன்றியங்களில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த குழுவினருக்கு, பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் பள்ளி தலைமையாசிரியர் விஜயலட்சுமி, உதவி தலைமையாசிரியர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். திருப்பூர் மாவட்ட அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கக திட்ட அலுவலர் கணேஷ்வரி, பெற்றோர் மற்றும் தலைமையாசிரியர்களிடம் கலந்துரையாடினார். கூட்டத்தில் பள்ளிகளில் சுற்றுச்சுவர் இல்லாததால். குழந்தைகளின் பாதுகாப்புக்கு உறுதி இல்லை, என பெற்றோர் புகார் தெரிவித்தனர்.

சுற்றுச்சுவர் அமைக்கவில்லை
தேவனுார்புதுார் மேல்நிலைப்பள்ளி மாணவியர் மட்டுமே படிக்கும் பள்ளி. இப்பள்ளியிலும், பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்புக்கு, சுற்றுச்சுவர் அமைப்பதற்கான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை.இதனால் பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினாலும், அச்சத்துடனேயே இருக்க வேண்டியுள்ளது. அரசுப்பள்ளிகளின் சுற்றுச்சுவர் இல்லாதது முக்கிய பிரச்னையாக இருந்தும் அரசு அலட்சியமாக இருப்பதுதான் வேதனையளிக்கிறது என கூட்டத்தில் பெற்றோர் தெரிவித்தனர்.

அரசிடம் புகார் தெரிவிப்பு
திட்ட அலுவலர் கணேஷ்வரி கூறியதாவது: சுற்றுச்சுவர் அமைப்பது குறித்து, அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்ககம் மூலம் தொடர்ந்து பரிந்துரை செய்து வருகிறோம். இதனால், பள்ளிகளில் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் அரசிடம் புகார் தெரிவிக்கப்படுகிறது. அரசுப்பள்ளிகளை பாதுகாக்க, அரசை மட்டுமே நம்பி இல்லாமல், பெற்றோரும் ஒத்துழைக்க வேண்டும்.

தங்கள் குழந்தைகள் படிக்கும் இடத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் பொறுப்பு பெற்றோருக்கும் உள்ளது. சமூக விரோதிகளாக வருபவர்கள், அந்தந்த ஊரிலேயே இருப்பவர்கள்தான். அதனால், பள்ளிகளில் சமூக விரோத செயல்கள் நடக்காமல், பெற்றோரும் கண்காணிக்க வேண்டும். பள்ளிகளுக்கு என்னென்ன அடிப்படை வசதிகள் தேவை, அதற்கு எவ்வாறு நடவடிக்கை எடுக்கலாம் என முயற்சி செய்யலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment