பேருந்துகளில் மாணவர்கள் தொங்கிச் செல்லும் அவலம்: தானாக முன் வந்து உயர் நீதிமன்றம் வழக்கு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, November 23, 2017

பேருந்துகளில் மாணவர்கள் தொங்கிச் செல்லும் அவலம்: தானாக முன் வந்து உயர் நீதிமன்றம் வழக்கு

பேருந்துகளில் மாணவ மாணவிகள் தொங்கிச் செல்லும் ஆபத்தான நிலையைக்கண்ட சென்னை உயர் நீதிமன்றம் தானாக
முன் வந்து வழக்கை கையிலெடுத்து தமிழக அரசுக்கும், போக்குவரத்து கழகத்துத்தும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகம் முழுதும் பேருந்துகளில் பயணம் செய்யும் மாணவ மாணவியர்கள் பள்ளி, கல்லூரி செல்ல அரசுப் பேருந்துகளையே நம்பி உள்ளனர். அரசும் மாணவர்களுக்கான இலவசப் பேருந்து திட்டம், குறைந்த விலையில் பஸ்பாஸ் போன்ற திட்டங்களை அறிவித்து நடைமுறையில் உள்ளது.
கிராமப்புறங்களில் பல கிலோ மீட்டர்கள் பயணம் செய்யும் மாணவ மாணவிகளுக்கு பெரிதும் பயனாக இருப்பது அரசுப் பேருந்துகளே. பேருந்துகள் சரியான நேரத்தில் வராவிட்டாலோ,வராமல் போனாலோ அன்றைய படிப்பு அவ்வளவுதான்.
இதனால் பள்ளிக்கு, கல்லூரிக்கு நேரத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக கிடைக்கும் பேருந்துகளில் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான நிலையில் தொங்கிச் செல்லும் அவல நிலைக்கு மாணவ-மாணவிகள் தள்ளப்பட்டுள்ளனர். நெல்லையில் பள்ளி மாணவிகள் பேருந்துகளில் தொங்கிச் செல்லும் படம் வாட்ஸ் அப் வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று ஆங்கில நாளேடு ஒன்றில் தண்டையார்பேட்டையில் 56 சி பேருந்தில் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் தொங்கிக் கொண்டும், கூரை மீது பயணம் செய்யும் புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியானது.
இதையடுத்து வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் இந்தத் தகவல்களை வைத்து தலைமை நீதிபதி அமர்வு முன்பு முறையிட்டார். சென்னையில் தினசரி பேருந்து பயணத்தை நம்பி 5000 மாணவர்கள் உள்ள நிலையில் பேருந்துகள் உரிய எண்ணிக்கையில் விடப்பட வேண்டும் என்று முறையீடு வைத்தார்.
இதற்கு பதிலளித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர் அவர் மனுவாக தாக்கல் செய்தால் பதில் மனு தாக்கல் செய்வதாக தெரிவித்தார். நாங்களே இந்த வழக்கை சுயமோட்டோவாக ( தானாக முன் வந்து வழக்குப்பதிவு) செய்வதாக தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு அரசு இது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டனர்.
வரும் திங்கட்கிழமை பதில் அளிப்பதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவிக்க, ஆயிரக்கணக்கில் மாணவர்கள் அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் நிலையில் தனிப்பேருந்து ஏன் விட வில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் நாளையே பதிலளிக்க தமிழக அரசுக்கும், சென்னை போக்குவரத்து கழகத்திற்கும் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment