பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத ஒதுக்கீடு: தமிழகத்தில் வங்கிப் பணி தேர்வில் அறிமுகம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, July 24, 2019

பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத ஒதுக்கீடு: தமிழகத்தில் வங்கிப் பணி தேர்வில் அறிமுகம்

பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத ஒதுக்கீடு: தமிழகத்தில் வங்கிப் பணி தேர்வில் அறிமுகம்
பொதுப் பிரிவினரில் (முற்பட்ட வகுப்பினரில்) நலிந்த பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு தமிழகத்தில் முதல் முறையாக வங்கிப் பணித் தேர்வில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரெப்கோ வங்கி நடத்தும் இளநிலை உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பதவிகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு இதுவரை எந்தப் போட்டித் தேர்விலும் அறிமுகப்படுத்தப்படவில்லை. 


இப்போது ரெப்கோ வங்கி நடத்தும் தேர்வில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதுவரை முடிவில்லை: தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளில் மட்டும் 10 சதவீத இடஒதுக்கீடு அளிப்பது குறித்து விவாதிக்க, அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டம் தமிழக அரசின் சார்பில் அண்மையில் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் அரசியல் கட்சிகள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தாலும் அதன் மீது தமிழக அரசு இறுதி முடிவை அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை. 


இதனால், மருத்துவ இடங்களில் முற்பட்ட வகுப்பினரில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு கிடைக்குமா இல்லையா என்பது குறித்து இதுவரை தெளிவாகவில்லை. வங்கிப் பணித் தேர்வு: மருத்துவ இடங்களில் தமிழக அரசு முடிவெடுக்காத நிலையில், ரிசர்வ் வங்கியின் பட்டியலில் இடம்பெற்றுள்ள ரெப்கோ வங்கி, தமிழகத்தில் உள்ள வங்கிக் கிளைகளில் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் பொதுப் பிரிவினரில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. 


அதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 40 காலியிடங்களில் 10 சதவீதம் அதாவது நான்கு இடங்களை முற்படுத்தப்பட்ட நலிந்த பிரிவினருக்கு ஒதுக்கியுள்ளது. இந்த 10 சதவீத இடஒதுக்கீடு, இதுவரை தமிழகத்தில் வேறெந்த துறைகளிலும் ஒதுக்கப்படவில்லை. தற்போது, வங்கிப் பணித் தேர்வில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment