பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, July 27, 2019

பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவு

பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவு
அனைத்து பள்ளி வாகனங்களிலும் கண்காணிப்புக் கேமரா மற்றும் ஜிபிஎஸ் கருவிகளை ஒரு மாதத்துக்குள் பொருத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் எஸ்.கோபிகிருஷ்ணன் தாக்கல் செய்த பொது நல மனுவில், கோவை மேட்டுப்பாளையத்தில் தனியார் பள்ளி வாகனத்தில் சென்ற 4 வயது குழந்தைக்கு ஓட்டுநரும், உதவியாளரும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதுபோன்ற கொடூரச் சம்பவங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாத்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பள்ளி வாகனங்களைச் சோதித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் இயந்திரங்கள் போல செயல்பட்டு சான்றிதழ்களை வழங்கி வருகின்றனர். தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இன்றைய காலக்கட்டத்துக்கு ஏற்ற வகையில் பள்ளி வாகனங்களில் கண்காணிப்புக் கேமரா மற்றும் ஜிபிஎஸ் கருவிகளைப் பொருத்த வேண்டும். 

இந்தக் கருவிகளை பள்ளியின் இணையதளத்துடன் இணைத்து, வாகனத்தின் செயல்பாடுகளை பெற்றோர்கள் அறிந்து கொள்ளும் வசதிகளை பள்ளி நிர்வாகங்கள் ஏற்படுத்தி தர வேண்டும். இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரும் மனுவை பரிசீலிக்குமாறு தமிழக கல்வித்துறைச் செயலாளர், போக்குவரத்துத்துறை இயக்குநர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பள்ளிக் கல்வித் துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. 

இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம்பிரசாத் ஆகியோர் கொண்ட அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளிக்கல்வித் துறை சார்பில், இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் கடந்த ஜூலை 22-ஆம் தேதி பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் உத்தரவு பிறப்பித்ததாக தெரிவித்து, அதன் நகல் தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து பள்ளி வாகனங்களிலும் கண்காணிப்புக் கேமரா மற்றும் ஜிபிஎஸ் கருவிகளை ஒரு மாத காலத்துக்குள் பொருத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்

No comments:

Post a Comment