மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் மீது பெற்றோர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி அறிவுரை..
மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் மீது பெற்றோர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி பெற்றோர்களிடம் அறிவுரை வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் மூலம் மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் அறந்தாங்கி டி.இ.எல்.சி நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி பேசியதாவது:மாற்றுத்திறனாளி குழந்தைகளை உடைய பெற்றோர்கள் மருத்துவர்கள் கூறும் பயிற்சியினை தினமும் தங்கள் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும்.மாற்றுத்திறனாளி குழந்தைகளின் தனித் திறமையை கண்டறிந்து அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு முறையாக பயிற்சி அளித்தோம் என்றால் அவர்களால் அனைத்து வேலைகளையும் செய்ய முடியும்.எனவே மாற்றுத் திறனாளி குழந்தைகள் மீது பெற்றோர்கள் தனிக்கவனம் செலுத்தி சிறந்த முறையில் வளர்க்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாமானது ஆகஸ்ட் 1 ஆம் தேதி அரிமளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,6 ஆம் தேதி புதுக்கோட்டை வட்டார வளமையம்,7 ஆம் தேதி திருவரங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி,8 ஆம் தேதி ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,9 ஆம் தேதி கந்தர்வக்கோட்டை வட்டார வளமையம்,13 ஆம் தேதி மணல்மேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,14 ஆம் தேதி இலுப்பூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி,16 ஆம் தேதி திருமயம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ,20 ஆம் தேதி பொன்புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி,21 ஆம் தேதி கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,22 ஆம் தேதி விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,27 ஆம் தேதி கறம்பக்குடி அரசு பெண்கள் மேல்நிலையிலும் காலை 9 மணி முதல் 2 மணி வரை மருத்துவ முகாம் நடைபெறும்.மருத்துவ முகாமில் பார்வையற்றவர்கள்,குறைபார்வையுடையவர்கள்,காதுகேளாத மற்றும் வாய் பேசாதவர்கள் ,மனவளர்ச்சி குன்றியவர்கள்,கைகால் குறைபாடு உடையவர்கள்,மூளை முடக்குவாதமுடையோர் ,புற உலக சிந்தனையற்றோர் ஆகியோர் கலந்து கொள்ளலாம்.
கலந்து கொள்ளும் பொழுது தேசிய அடையாள அட்டை,ஆதார் அட்டை,வருமானச் சான்றிதழ்,பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 4, பேங்க் பாஸ் புக் ஆகியவை கொண்டு வர வேண்டும்.
மருத்துவ முகாமில் தேசிய அடையாள அட்டை பெறாதோருக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.உதவி உபகரணங்களுக்கான பதிவு,மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக பராமரிப்பு உதவித் தொகை பெற பதிவு,மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பாக கல்வி உதவித் தொகை பெற பதிவு செய்யப்படும் எனவே இந்த அரிய வாய்ப்பை பெற்றோர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.பின்னர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் முகாமிற்கு வந்திருந்த மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.
முகாமில் மருத்துவர்கள் இராதாகிருஷ்ணன், வெங்கடேஷ், முத்தமிழ்ச்செல்வி,முகமதுரபி,சிவபாலநேசன் ஆகியோர் அடங்கிய குழுவினர் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.
முகாமில் அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் கு.திராவிடச்செல்வம்,ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் உதவி திட்ட அலுவலர் இரவிச்சந்திரன்,மாவ8்ன உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல், அறந்தாங்கி வட்டாரக் கல்வி அலுவலர்கள் அருள்,முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை அறந்தாங்கி வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிவயோகம் தலைமையில் சிறப்பாசிரியர்கள்,இயன்முறை மருத்துவர்கள்,வட்டார வளமைய பயிற்றுநர்கள் செய்திருந்தார்கள்.
No comments:
Post a Comment