பள்ளிகளில் சத்துணவு பணியாளர்கள் நியமனம் எப்போது?
மதுரை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலி பணியிடங்களை நிரப்ப நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் நியமனம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. நேர்முகத்தேர்வில் பங்கேற்றவர்களில் தகுதியானவர்களை நியமிக்க கலெக்டர் வினய் நடவடிக்கை எடுக்க வேண்டும். இம்மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் உள்ளிட்ட பள்ளிகளில் 1668 சத்துணவு மையங்கள் உள்ளன. அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என 4100 பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. 900க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. காலியிடங்களை நிரப்ப 2016 செப்டம்பரில் அறிவிப்பு வெளியானது. நாலாயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கு 2017 மே நேர்முகத்தேர்வு அப்போதைய கலெக்டர் வீரராகவ ராவ் மேற்பார்வையில் இரு நாட்கள் நடந்தன.
தங்களுக்கு வேண்டியவர்களை நியமிக்க அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் தரப்பில் தனித்தனி பட்டியல்கள் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது. ஒரு பணியிடத்திற்கு தங்களுக்கு வேண்டியவர்களை நியமிக்க ஆளுங்கட்சியினர் கேட்டதால் நியமனம் தள்ளிபோனது. இந்நிலையில் லோக்சபா தேர்தலின் போது கலெக்டராக நியமிக்கப்பட்ட நாகராஜன், கிடப்பில் போடப்பட்டிருந்த அங்கன்வாடி காலி பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வில் பங்கேற்றவர்களில் தகுதியானவர்களை தேர்வு செய்து நியமித்தார். சத்துணவு காலிபணியிடங்களை நிரப்ப அவர் நடவடிக்கை எடுத்த நிலையில் ஆளுங்கட்சியினர் நெருக்கடியால் மாற்றப்பட்டார். சத்துணவு மையங்களில் காலி பணியிடங்கள் அதிகரித்துள்ளதால் கூடுதல் பணி சுமை நிலவுவதுடன், மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதிலும் சிரமம் ஏற்படுகிறது. எனவே நேர்முகத்தேர்வில் பங்கேற்றவர்களில் தகுதியானர்களை தேர்வு செய்து நியமிக்க கலெக்டர் வினய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சத்துணவு ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்
No comments:
Post a Comment