இன்று தேசிய சட்ட தினம் (இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது(1949)) - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, November 26, 2014

இன்று தேசிய சட்ட தினம் (இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது(1949))

சட்டங்களை மதிப்போம்;சரிநிகர் சமமாய் வாழ்வோம்!
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நாம் ஏற்று கொண்ட நாள், தேசிய சட்ட தினமாக கடைபிடிக்கப்படுகிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற விதி இந்தியர் அனைவருக்கும் பொதுவானது என ஏற்று கொள்ளப்பட்ட தினம். அதற்கு காரணமாக இருந்த 207 சிறந்த நபர்களை நினைவு கூறும் தினமும் ஆகும். நீதிபதிகள், வக்கீல்கள், சட்ட மாணவர்கள் மட்டுமின்றி பொது மக்களாகிய நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய நாள் இது.

கொண்டாடப்படுவது ஏன்:




தேசிய சட்ட தினக் கொண்டாட்டம் என்பது கூடிக் குலாவி கூட்டம் போட்டு விருந்துண்டு பிரிந்து செல்வதற்கு அல்ல. ஆண்டு முழுவதும் நினைவில் வைத்து கொண்டாடப்படும் நாள். சட்டங்கள் படிக்க மட்டுமல்ல. அவை நடைமுறைப்படுத்துவதற்கே. சட்டங்களே நம்மை காக்கும் கவசங்கள். கவசங்களை அணிய மறந்தால் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். நீதித்துறையின் தனித்தன்மையை காக்கவும், சட்டங்களை உண்மையாக கடைபிடிக்கவும் இத்தினம் கொண்டாடப்படுவது அவசியம்.மனு நீதி, விதுர நீதி, நன்னூல், அர்த்த சாஸ்திரம் முதலிய பாரம்பரிய நீதிகளும், ஊர், கிராம, கோயில், நாட்டு பஞ்சாயத்து முதலிய சிறிய அளவிலான நீதிமுறைகள் நம் நாட்டில் இருந்தன. இன்னும் கிராமங்களிலும், பல ஊர்களிலும் நடைமுறையில் உள்ளன. இவை சிறிய அளவிலும், அந்தந்த பகுதிக்கு ஏற்ப கால சூழ்நிலைகளை பொறுத்தும் கையாளப்படுகின்றன. தேசம் முழுமைக்கும் ஒரே வித நீதிமுறை செயல்பட்டதா என்ற கேள்விக்கு விடையில்லை. பல நூற்றாண்டாக ஆட்சி செய்த பல்வேறு மன்னர்களும் அவர்களுடைய ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் மன்னரின் விருப்பு வெறுப்புகளை பொறுத்து நீதி பரிபாலனம் நடந்தது.

சட்ட முன்னோடிகள்:




சட்டத்தின் வழி தான் ஆட்சி செய்ய வேண்டும். மன்னர் தன் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை குடிமக்களிடம் திணிக்க கூடாது. மக்கள் நலனே பிரதானமாக இருக்க வேண்டும். இயற்றப்படும் சட்டங்கள் சிறந்தனவாகவும், தீர்க்கமாகவும் இருக்க வேண்டும் என கிரேக்க சிந்தனையாளர் பிளாட்டோ கூறினார். ஆரம்பகால நடைமுறை சட்டங்கள் கிரேக்க மொழியில் இருந்தன. பின் மேற்கத்திய நாடுகளுக்கு சென்றன.அரிஸ்டாட்டில் அரசியல் என்ற நூலில், 'சமூகம் என்பது குடும்பங்களின் கூட்டாகும். சுய சார்பு வாழ்க்கைக்கு கட்டுப்பாடுகள் அவசியம். தனி மனித ஒழுக்கம் தான் தன்னையும், சமூகத்தையும் ஒருங்கிணைத்து எல்லா நன்மைகளை பெற ஒரு அடித்தளம் அமைக்கிறது,' என்றார்.ஜெர்மானிய தனி மனித பாதுகாப்பு சட்டங்களே தற்போதைய அடிப்படை உரிமை சட்டங்களுக்கு வழி கோலியது எனவும் ரோமானிய சட்டங்கள் இறையாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தது எனவும் வரலாறுகள் கூறுகின்றன. இந்த இரு முறையும் பல நாடுகளில் நடைமுறையில் உள்ளன. சில நாடுகளில் மட்டும் இறையாண்மை முக்கியமாக உள்ளது.

சட்டத்தின் ஆட்சி:


சட்டத்தின் ஆட்சி என்பது ஆங்கில பொது சட்டம் சொல்லும் அடிப்படையில் உருவானது. அரசனின் அதிகாரம் பெற்ற அதிகாரிகளும், ஊழியர்களும் இங்கிலாந்தில் தங்கள் அதிகாரத்தில் உள்ள பகுதிகளில் நடக்கும் சிறு சிறு குற்றங்களை விசாரித்து தீர்ப்பு வழங்கினர். அதே நேரத்தில் இந்த அதிகாரிகளின் செயல் முறையும், நடத்தையும் மன்னரின் கவனத்தில் கொண்டு செல்லப்பட்டு, கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டது. இந்த நடைமுறை 13ம் நூற்றாண்டு முதல் அமலுக்கு வந்தது. குற்றங்களை விசாரிக்கும் இந்த நடைமுறை பொது அரசு நிர்வாகத்திலிருந்து முற்றிலுமாக பிரித்து செயல்பட்டது. இதை ஜான் மன்னர் என்பவர், கி.பி., 1215ல் மாக்னகார்ட்டா என்ற பிரகடனம் மூலம் இங்கிலாந்தில் அறிவித்தார். இதுவே சட்டத்தின் ஆட்சிக்கு வழிகோலியது.மன்னர்களின் ஆட்சி காலத்தில் அனைத்து வகுப்பினருக்குமான ஒரே மாதிரியான சட்டங்கள், நீதிமுறைகள் இல்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாடு இல்லை. இவர்கள் ஆட்சி காலத்தில் வரி வசூலிக்கும் முறையும் குற்றங்களுக்கு தண்டனை வழங்கும் முறையும் மட்டும் இருந்தன. கி.பி., 1688 முதல் கி.பி., 1753 காலகட்டத்தில் ஆங்லேயர்களால் மேயர்ஸ் கோர்ட், ஆயர்ஸ் கோர்ட், டெர்மினர் கோர்ட் மற்றும் அமைதியான நீதி போன்ற கோர்ட்கள் நகரங்களில் செயல்பட்டன. அவைகள் தற்போதுள்ள கோர்ட் போல செயலாற்றவில்லை. சட்ட அறிவும், பயிற்சியும் பெற்றவர்களால் நடத்தப்படவில்லை.

ஆங்கிலேயர் ஆதிக்கம் :




1772-1857 கால கட்டத்தில் கிழக்கிந்திய கம்பெனி பல கோர்ட்களை இந்தியாவில் துவக்கியது. வியாபார விஷயங்கள், வர்த்தக நடைமுறைகள், ஒப்பந்தங்கள், கொடுக்கல் வாங்கல், கடல் கொள்ளை போன்ற விஷயங்களை கையாண்டன. வாரன் ேஹஸ்டிங்ஸ் முதல் முதலாக இந்தியாவை நிர்வாகம் செய்ய இங்கிலாந்தால் நியமிக்கப்பட்டார். அவர் வருவாய் மாவட்டங்களையும், கோர்ட்களையும் துவக்கினார். ஒரே நபர் இரண்டிலும் தலைவராக இருந்தார். முறையான சட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை.1773ல் கொல்கட்டாவில் முதன் முறையாக சுப்ரீம் கோர்ட் துவங்கப்பட்டது. இது கிங்ஸ் கோர்ட் போல செயல்பட்டது. அதன் நடைமுறைகள் இங்கிலாந்தில் உள்ளது போல அல்லாமல் மாறுபாடுகள் நிறைந்ததாக இருந்தன. அதனால் இந்தியாவில் செயல்பட்ட கம்பெனி கோர்ட்களுக்கும், சிவில் கோர்ட்களுக்கும் மோதல்கள் உருவாகின. வாரன் ேஹஸ்டிங்ஸ் உதவியால் சுப்ரீம் கோர்ட் குறைகள் சரி செய்யப்பட்டன. லார்டு காரன்வாலிஸ் அடுத்து கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்டு, பல சட்ட சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். லார்டு வில்லியம் பென்டிங் காலத்தில் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளை ஒரே நீதிபதியே விசாரிக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது. இந்திய தண்டனை சட்டம், உரிமையியல் மற்றும் குற்றவியல் நடைமுறைகள் அமலுக்கு வந்தன.லார்டு டல் ஹவுசி காலத்தில் நீதிபதிகளுக்கான தகுதிகள் வரையறுக்கப்பட்டன. முதன் முதலாக சட்ட கமிஷன் அமைக்கப்பட்டது. சட்டங்கள் நெறிமுறைப்படுத்தப்பட்டன. 1857 வரை ஆங்கிலேயர்கள் பல சட்டங்களை வகுத்து சட்ட மற்றும் கோர்ட் முறைகளை இந்தியாவில் செயல்படுத்தினர். நாடு சுதந்திரமடையும் வரை பல புதிய சட்டங்கள் இங்கு அமல்படுத்தப்பட்டு, இன்றளவும் உள்ளன.

சட்ட முகவுரை:




பின் இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக காரணமாக இருந்த வரைவு கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்ட அம்பேத்கர், மற்றவர்களுடன் சேர்ந்து அதை தயாரித்தார். இந்திய அரசியலமைப்பு சட்ட முகவுரையை அவரே எழுதினார்.1949 நவ., 26ல் எழுதபட்டாலும், 1950 ஜன., 26ல் சட்டம் அமலுக்கு வந்தது. சட்டப்பிரிவு 226 மூலம் ஐகோர்ட்டிலும், 32 மூலம் சுப்ரீம்கோர்ட்டிலும் முறையீடு செய்யலாம். இந்திய அரசியல் சாசன சட்டம் எழுத்து வடிவில் உள்ளது. உலகில் உள்ள சட்டங்களில் நீளமானது. 395 பிரிவுகளை கொண்டது. 12 பட்டியல்களை கொண்டது. 100 தடவைக்கு மேல் திருத்தப்பட்டது.நாகரிக உலகில் மனித சமுதாயம் துன்பம் இன்றி வாழ சட்டம் நமக்கு துணை புரிவதுடன், தனி மனித பாதுகாப்பையும் சமூக நீதியையும் வழங்குகிறது. சட்டம் சார்ந்த சமூகத்தில் அரசுடன் மக்கள் இணக்கமாக, அமைதியாக வாழ முடிகிறது. சட்டமும் நீதியும் சமுதாயம் மேம்பட உதவும் சாதனங்களே. எனவே சட்டங்களை மதிப்போம். உலகில் சரிநிகர் சமானமாய் வாழ்ந்து சிறப்பு எய்துவோம்.
-மா.தச.பூர்ணாச்சாரி,
வக்கீல்,

No comments:

Post a Comment