பள்ளிகளில் காலை, மாலையில் குழந்தைகளின் வருகையை சரிபார்க்க வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, November 26, 2014

பள்ளிகளில் காலை, மாலையில் குழந்தைகளின் வருகையை சரிபார்க்க வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு

வேலூர், பள்ளிகளில் காலை மற்றும் மாலையில் குழந்தைகளின் வருகையை சரிபார்க்க வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் நந்தகோபால் பேசினார்.
ஆலோசனை கூட்டம்
           பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, வணிக ரீதியாக கடத்தல் மற்றும் பாலியல் சுரண்டலில் இருந்து தடுத்தல் குறித்து மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில்
நடந்தது. கலெக்டர் நந்தகோபால் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலெக்டர் நந்தகோபால் பேசியதாவது:–
குழந்தைகள் இணையதள வசதியுடன் கூடிய செல்போன்களை பயன்படுத்தினால் ஏற்படும் இடர்பாடுகள் குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். டி.வி.யில் நாடகங்கள் பார்ப்பதை தவிர்க்க பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
வீட்டு முகவரி
         குழந்தைகளுக்கு வீட்டு முகவரியும், தொலைபேசி எண்ணையும் கட்டாயம் கற்றுத்தர வேண்டும்.
                பெண்கள் மற்றும் குழந்தைகள் வணிக ரீதியாக கடத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தலில் இருந்து தடுக்க அனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையே இருக்கும் இடைவெளியை குறைத்து, தினமும் நடக்கும் நிகழ்வுகளை பரிமாறிக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். 
         அனைத்து பள்ளிகளிலும் ஒழுக்கநெறி கல்வி ஒரு பாடமாக குழந்தைகளுக்கு கற்பிக்க கல்வித்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களில் குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். குழந்தை திருமணம் தடுத்த பின்னர் குழந்தையின் கல்வி நிலை குறித்து தொடர் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
பள்ளிக்கு வருகை
         அனைத்து பள்ளிகளிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் குழந்தைகளின் வருகையை சரிபார்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களான பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் வழிதவறி வரும் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும்.
      குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்தாமல் இருப்பதை பெற்றோர்கள் கவனமுடன் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட சமூக நல அலுவலர் பாகிதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன், துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் உள்பட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment