6 முதல் 8 ஆம் வகுப்பு வரை சம்ஸ்கிருதம் 3ஆவது பாடமொழி: மத்திய அரசு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, November 28, 2014

6 முதல் 8 ஆம் வகுப்பு வரை சம்ஸ்கிருதம் 3ஆவது பாடமொழி: மத்திய அரசு

கேந்த்ரிய வித்யாலயப் பள்ளிகளில், 6 முதல் 8 ஆம் வகுப்புகள் வரை சம்ஸ்கிருதம் 3-ஆவது பாட மொழியாக இருக்கும் என்று, உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆஜராகி, கேந்த்ரிய வித்யாலயப் பள்ளிகளில், ஜெர்மன் மொழிக்குப் பதிலாக சம்ஸ்கிருதத்தை 3-ஆவது மொழி
பாடமாக்குவதென்று மத்திய அரசு எடுத்துள்ள முடிவால் சர்ச்சை எழுந்திருப்பது குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அனுமதி கோரினார்.
உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, பிரமாணப் பத்திரத்தை அவர் தாக்கல் செய்தார்.
இதையடுத்து இந்த வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (நவ.28) நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக கேந்த்ரிய வித்யாலயப் பள்ளி மாணவர்களின் பெற்றோர் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பொதுநல மனுவாகக் கருதி அவசர வழக்காக எடுத்து விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த 21ஆம் தேதி ஒப்புக் கொண்டது. இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை வியாழக்கிழமைக்கு (நவ.27) ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம், பொதுநல மனு தொடர்பாக தனது பதிலை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
பின்னணி: தில்லியில் கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையிலான, கேந்த்ரிய வித்யாலயப் பள்ளி ஆளுநர்களின் அமைப்பு கூட்டத்தில், 3ஆவது மொழியாக சம்ஸ்கிருதத்துக்கு மாற்றாக ஜெர்மன் மொழி பயிற்றுவிக்கப்படுவதை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது. மாணவர்களுக்கு கூடுதல் மொழியாக ஜெர்மன் மொழியை பயிற்றுவிப்பது என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த முடிவால், நாடு முழுவதும் உள்ள 500 கேந்த்ரிய வித்யாலயப் பள்ளிகளில், 6 முதல் 8 வரையிலான வகுப்புகளில் பயிலும் 70,000 மாணவர்கள் ஜெர்மன் மொழிக்குப் பதிலாக சம்ஸ்கிருதத்தை 3ஆவது மொழியாக கற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த முடிவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொது நல மனுவில், "எந்த மொழியை தேர்வு செய்து படிக்க வேண்டும் என்று முடிவெடுப்பதை பெற்றோர், மாணவரிடம் விட்டுவிட வேண்டும். மாணவர்கள் மீது கட்டாயப்படுத்தி மொழியை அரசு புகுத்தக் கூடாது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment