தனி மனித ஒழுக்கத்தை வீடுகளில் கொண்டுவர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மது விலக்கு இயக்கத்துக்கு வலு சேர்க்கும் வகையிலான அறிக்கையை நீதிபதி கு.ப.சுப்ரமணியம் சில ஆண்டுகளுக்கு முன்பு தாக்கல் செய்திருந்தார். இந்த அறிக்கையை முழுமையாக கொண்ட புத்தகம் ஈரோட்டில் இன்று வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தை வெளியிட்டு நீதபதி இராமசுப்பிரமணியன் பேசியதாவது:
இந்தியாவில் வெவ்வேறு ஆட்சி காலங்களில் மதுவை குறைக்க அப்தானி சட்டம் இயற்றப்பட்டது. 1937-ல் மதுவிலக்கு சட்டம் கொண்டுவரப்பட்டது. இப்போது மது எதிர்ப்பு சட்டமாக மாறிவிட்டது.
தமிழகத்தில் 2001 ஆம் ஆண்டு மது குடிப்பதற்கு அடிமையாகும் சராசிரி வயது 17 ஆக இருந்தது. 2012 ஆம் ஆண்டில் இது 13 வயதாக குறைந்துவிட்டது. தனி மனித ஒழுக்கம் மிகவும் முக்கியம். எல்லா துன்பங்களுக்கும் காரணம், தனி மனித ஒழுக்க குறைவு தான்.
இதையெல்லாம் பெரிய பிரச்னை இல்லை என்று கூறும் தலைமுறை வாழும் காலத்தில் நாம் இருக்கிறோம். வீடுகளில் ஒழுக்கக்குறைவை அனுமதிக்க தொடங்கிய பின்னர் தான் சமுதாயம் பாதிக்கப்பட்டுள்ளது. ஒழுக்கக் குறைவு கண்டிக்கத்தக்கது.
வீடுகளில் தனி மனித ஒழுக்கத்தை கொண்டுவர வேண்டும். மதுவிலக்கு என்பது அதற்கான முதல் புள்ளியாக இருக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment