திருச்சி மாவடிக்குளம் மயானத்தில் சடலத்தை எரியூட்டுவதற்கு ஆயத்தமாகும் ஆரோக்கியமேரி. | படம்: ஜி.ஞானவேல்முருகன்
சர்வதேச மகளிர் தினம் சிறப்புப் பதிவு
நம் நாட்டில் பெண்கள் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வது தற்போதும் விவாதத்துக்குரியதாக உள்ளது. விதிவிலக்காக சில பெண்கள் மட்டுமே இறந்த உறவின ருக்கு மயானம் வரை சென்று, சடங்கு சம்பிரதாயங்களை செய்கின்றனர்.
இந்தச்சூழலில், திருச்சி பொன் மலைப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியமேரி(55), கடந்த 26 ஆண்டுகளாக மாவடிக்குளம் மயானத்தில் சடலங்களை எரியூட் டும் பணியில் ஈடுபட்டுள்ளார். அதுமட்டுமின்றி, அங்கு கொண்டு வரப்படும் ஆதரவற்ற சடலங் களுக்கு உரிய சடங்குகள் செய்து, அடக்கம் செய்யும் பணியையும் மேற்கொண்டுள்ளார்.
மயானத்தில் வேலைசெய்யும் கணவருக்குத் துணையாக 26 வயதில் இங்கு வந்தவர், தற்போது முழுநேர மயானப் பணியாளராக மாறிவிட்டார்.
மாவடிக்குளம் மயானம் நகர்ப் புறங்களில் இருப்பதுபோன்ற மின் மயானம் அல்ல. பழைய முறை யில் வறட்டி, விறகு உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு எரியூட்டும் வசதிகொண்டது. கிராமச் சூழலில், ஊருக்கு வெளியே இருக்கும் இந்த மயானம், இவரது வீட்டிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது. சில நேரங்களில் மாலை தொடங்கும் எரியூட்டும் பணி நள்ளிரவு வரை நீடிக்கிறது அப்போதும் கூட அசராமல், சடலம் நன்கு எரிக்கப்பட்டதை உறுதி செய்த பின்னரே வீடு திரும்புகிறார் ஆரோக்கியமேரி.
அவர் 'தி இந்து'விடம் கூறியது: திருமணமான புதிதில் என் கணவர் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். “பிணம் எரிக்கும் வேலையில் குடிக் காமல் இருக்க முடியாது” என்று விளக்கம் அளிப்பார்.
எங்களுக்கு 3 குழந்தைகள் பிறந்த பின்னர், வீட்டுச் செலவுக்கு சரிவர பணம் கிடைக்காததால், நானும் கணவருடன் மயானத் துக்குச் சென்றேன். ஆரம்பத்தில் மிகவும் பயமாக இருந்த போதிலும், போகப்போக பழகிவிட்டது. இந்த 26 ஆண்டுகளில் இறந்த குழந்தை முதல் முதியோர் வரை ஆயிரக் கணக்கானோரை பார்த்தாகிவிட் டது. பணத் தேவைக்காக பிணம் எரிக்கும் வேலைக்கு வந்தேன் ஆனால், இறந்தவர்களைப் பார்த்த வுடன், பணம் முக்கியமில்லை என்று தெரிந்து கொண்டேன்.
குடித்தால் மட்டுமே இந்தத் தொழிலை செய்ய முடியும் என்பது பொய். 26 ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ள நான், 1,000 சடலங்களுக்கு மேல் எரியூட்டி உள்ளேன்.
மயானத்தில் இறந்தவரின் உடலைப் பார்த்து ‘வாழ்க்கை என்பது ஒருமுறை தான், இனி பயனுள்ள வகையில் வாழ வேண்டும்’ என்று தத்துவம் பேசும் பலர், மயானத்திலிருந்து வீட்டுக்குச் சென்றவுடன் பழையபடி மாறிவிடுகிறார்கள். இதை நாங்கள் ‘மயான வைராக்கியம்’ என்போம் என்றார் ஆரோக்கியமேரி.
No comments:
Post a Comment