உயர்கல்வியை உலகத்தரத்திற்கு கொண்டு செல்ல அடிப்படை கல்வியின் தரத்தை உயர்த்துவது அவசியம்: ஸ்மிரிதி இரானி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, March 23, 2016

உயர்கல்வியை உலகத்தரத்திற்கு கொண்டு செல்ல அடிப்படை கல்வியின் தரத்தை உயர்த்துவது அவசியம்: ஸ்மிரிதி இரானி

இந்திய கல்வி வளர்ச்சி சங்கம், கர்நாடகத்தில் செயல்பட்டு வரும் காமட்கே மற்றும் கே.யூ.பி.இ.சி.ஏ. அமைப்புகளுடன் சேர்ந்து ‘இந்தியாவில் உலக தரத்திலான உயர்கல்வி மையம்’ என்ற தலைப்பில் தேசிய மாநாட்டை நேற்று நடத்தியது.

இந்த மாநாட்டிற்கு வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் வேந்தரும், இந்திய கல்வி வளர்ச்சி சங்கத்தின் தலைவருமான டாக்டர்.ஜி.விஸ்வநாதன் தலைமை வகித்தார். மாநாட்டை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மாநாட்டில் அவர் பேசியதாவது:-

“இந்தியாவில் உயர்கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு நகரங்களில் வாழும் மக்களை போல், கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கும் தரமான கல்வி சென்று சேர வேண்டும். கிராம மக்களுக்கும் தொழிற்கல்விகள் சென்று அடைய வேண்டும். அப்போது தான் உலகளவில் இந்தியாவின் கல்வித்தரம் உயரும். கிராமப்புற மாணவர்களுக்கும் தொழிற்கல்விகள் சென்றடைய தனியார் பல்கலைக்கழகங்கள் முயற்சிக்க வேண்டும்.கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் கல்வித்தரம் உயர்ந்துள்ளது. இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களை தேடிவந்து வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். இதனால் நம்நாட்டு மாணவர்களும், வெளிநாட்டு மாணவர்களும் சேர்ந்து பழகும் சூழல் ஏற்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்துள்ள ‘மேக் இன் இந்தியா‘ திட்டத்தின் கீழ் உயர்கல்வியை உலக தரத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு அடிப்படை கல்வியின் தரத்தை உயர்த்துவது அவசியமானதாக இருக்கிறது.

இந்தியாவில் அடிமட்ட மக்கள் வரை தரமான கல்வியை கொண்டு சேர்ப்பது மற்றும் உயர்கல்வியின் தரத்தை உயர்த்துவது தொடர்பான ஆலோசனை கூட்டத்தை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அடுத்த மாதத்தில் (ஏப்ரல்) அனைத்து மாநில கல்வித்துறை மந்திரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தை தொடர்ந்து ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கல்வி நிறுவனங்களின் முதல்வர்களுக்கான ஆலோசனை கூட்டமும் நடைபெற உள்ளது.

இந்தியாவின் புதிய கல்விக் கொள்கையின் மூலம் நாட்டிலுள்ள 2 லட்சத்து 30 ஆயிரம் பள்ளிகளில் கிராம கல்விக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 5,500 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 14,000 நகராட்சி அமைப்புகளின் மூலமாக கல்வி வளர்ச்சி சம்பந்தமாக ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைகள் மூலம் பள்ளி கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தனியார் கல்லூரிகளின் நிர்வாக முறையிலும், அங்கீகாரம் மற்றும் தன்னாட்சி பெறுவதிலும் உள்ள தடைகளை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை ஏற்று தனியார் கல்லூரிகள் தன்னாட்சி பெறுவதில் உள்ள தடைகளை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. 10 ஆண்டுகளாக சிறப்பாக செயல்படும் தனியார் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.“

இவ்வாறு மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி பேசினார்.

இந்த மாநாட்டில், கர்நாடக மாநில உயர்கல்வித்துறை மந்திரி டி.பி.ஜெயச்சந்திரா, மருத்துவ கல்வித்துறை மந்திரி சரணபிரகாஷ் பட்டீல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment