பெரும்பான்மை ஓட்டுகள், 'நோட்டா'வுக்கு கிடைத்தால், தேர்தலை ரத்து செய்யும் வகையில், புதிய விதிகள் வகுக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை, மந்தைவெளியை சேர்ந்த, வழக்கறிஞர் துரை வாசு என்பவர் தாக்கல் செய்த மனு:
எந்த வேட்பாளருக்கும் ஓட்டு இல்லை எனும், 'நோட்டா'வுக்கு, விழும் ஓட்டுகளின் நிலை குறித்து, எந்த விதிமுறையும் இல்லை. நோட்டாவுக்கு கிடைக்கும் ஓட்டுகள், எதற்காகவும் பரிசீலிக்கப்படுவதில்லை. பெரும்பான்மை பெறும் வேட்பாளர், வெற்றி பெறுவதாக அறிவிக்கப்படுவார்.
பெரும்பான்மை ஓட்டுகள், நோட்டாவுக்கு கிடைத்தாலும் கூட, வேட்பாளர் வெற்றிக்கு, எந்த பாதிப்பும் இல்லை. நோட்டாவுக்கு பெரும்பான்மை கிடைத்தால், அந்த தொகுதியில் நடந்த தேர்தல் செல்லாது என
அறிவித்து, புதிதாக தேர்தல் நடத்த வேண்டும். அதற்காக, தேர்தல் ஆணையம் விதிமுறைகளை வகுக்க வேண்டும்.
மேலும், அந்த தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள், மீண்டும் போட்டியிட, குறிப்பிட்ட கால இடைவெளி வரை, தடை விதிக்க வேண்டும். எவ்வளவு காலம் என்பதை, தேர்தல் ஆணையம் தீர்மானிக்க வேண்டும்.
இந்த பரிந்துரைகளை, தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டால், நோட்டாவுக்கு வாக்களிப்பவர்கள், தங்கள் உரிமையை நிலைநாட்ட வருவர். இல்லையென்றால், நோட்டாவுக்கு ஓட்டு அளிப்பதன் மூலம், எந்த மாற்றமும் வரப் போவதில்லை என கருதி, ஓட்டு சாவடிக்கு வர மாட்டார்கள். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை, நீதிபதிகள் கிருபாகரன், முரளிதரன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. மனுவுக்கு பதிலளிக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு 'நோட்டீஸ்' அனுப்ப, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டது.
No comments:
Post a Comment