எவ்வளவு செலவு செய்யுது தேர்தல் ஆணையம்... தேர்தல் அதிகாரிகளை மட்டும் கண்டுகொள்ளாமல் பாரபட்சம் ஏனோ?
தேர்தல்களை சுமூகமாக பலத்த பாதுகாப்புடன் நடத்துவது; 100% வாக்குப் பதிவை எட்டுவது என விழுந்து விழுந்து பிரசாரம் செய்வதில் அக்கறையாக இருக்கும் தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகள் முழுமையடைவதில் முதுகெலும்பாக இருக்கும் தேர்தல் பணியாளர்களைப் பற்றி கிஞ்சித்தும் சிந்திப்பது இல்லை என்பதுதான் வேதனைக்குரியது. தேர்தல் பணிகளில் பெரும்பாலும் ஆசிரியர்கள்தான் அதிகம் ஈடுபடுத்தப்படுகின்றனர்... அதுவும் தேர்தல் ஒழுங்காக பாபரட்சம் நடத்தப்பட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு வெவ்வேறு ஒன்றியங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் முன்பின் தெரியாத ஊர்களுக்கு 'டூட்டி' போடப்படுகின்றனர்... உதாரணமாக திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு ஒன்றியத்தைச் சேர்ந்த ஆசிரியர்களை, அதே மாவட்டத்தின் வேடசந்தூர் ஒன்றியத்துக்கு தூக்கி போடுவார்கள்... வேடசந்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள் இன்னொரு பகுதிக்கு தூக்கியடிக்கப்படுவார்கள்... சரி அரசுப் பணிதானே இவர்கள் கடமையை செய்துதானே ஆக வேண்டும் என்கிற கேள்வி எழலாம்... இன்று திங்கள்கிழமை வாக்குப் பதிவு என்றால் இவர்கள் எந்த பகுதிக்கு போகிறோம் என்பது ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரை கூட தெரியாது... ஞாயிற்றுக்கிழமையன்று எந்த பகுதியில் தேர்தல் பணி என்பதை தெரிந்து கொள்வதற்காக காலையிலேயே துணிமணி என மூட்டை முடிச்சை கட்டிக் கொண்டு தேர்தல் அதிகாரிகளின் அறிவிப்புக்காக காத்திருக்க வேண்டும். அவர்கள் எந்த பகுதிக்கு போக சொல்கிறார்களோ இரவோடு இரவாக அங்கே போக வேண்டும். அவர்களுக்கான தங்குமிடம் பெரும்பாலும் பள்ளிக்கூடங்கள்தான்... பெரும்பாலான தேர்தல் ஊழியர்கள் ஆசிரியையகள்... அவர்களுக்கான அந்த பள்ளிக்கூடங்கள் பாதுகாப்பானதாக, கழிவறை வசதிகளுடன் கூடியதாக இருக்கிறதா? இல்லையா? என தெரியாமலே போய் ஆடுமாடு மந்தைகளை போல இறக்கிவிடப்படுவர்கள்... அங்கே போய் பேந்த பேந்த முழிக்கும் இவர்களுக்கான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதி பற்றி அரசோ தேர்தல் ஆணையமோ கவலைப்படுவது கிடையாது... இப்படி கண்ணைகட்டி காட்டில்விடப்பட்டவர்களாக இருக்கும் இவர்கள் அந்த இரவு முதல் மறுநாள் இரவு ஒவ்வொரு வேளை சாப்பாடுக்கும் அத்தியாவசிய தேவைகளுக்கும் என்ன செய்வது என கை பிசைந்து கொண்டுதான் இந்தியாவின் ஆகப் பெரிய 'ஜனநாயக' கடமையை நிறைவேற்ற தங்களையே 'அர்ப்பணித்துக்' கொண்டிருக்கிறார்கள்... சில ஊர்களில் ஏற்கனவே இத்தகைய ஜனநாயகக் கடமைக்குப் போய் "அனுபவம்" பெற்ற அரசு ஊழியர்கள் இருப்பார்கள்...அவர்கள்தான் இவர்களை கரிசனத்துடன் அரவணைத்துக் கொள்வகிறார்கள்... ஆனால் ஒவ்வொரு தேவைக்கும் இப்படி போய் அவர்களிடம் நிற்பதும் தேர்தல் பணியாளர்களால் இயலாத காரியம்தான்... இப்படித்தான் அவ்வளவு மனப்புழுக்கத்துடன் வேதனையுடன்தான் இந்த தேசத்தின் ஆகப் பெரும் ஜனநாயகக் கடமையை செய்து தருகிறார்கள்... மிகப் பெரிய ஜனநாயகக் கடமைக்கு அடித்தளமாக இருக்கும் இந்த தேர்தல் பணியாளர்கள் எனும் அரசு ஊழியர்களை அடிப்படையில் தேர்தல் காலங்களில் மனிதர்களாக நடத்தி அவர்களுக்காக அடிப்படை தேவைகளையாவது செய்து தர தேர்தல் ஆணையம் முன்வரட்டும்... அப்புறம் நீங்கள் என்ன பிரசாரம் செய்வது? அவர்களே பிரசார பீரங்கிகளாக மாறி உங்களுக்கான 100% வாக்குப் பதிவை எட்ட வைப்பார்கள்... தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளுமா?
ஆசிரியர் : அருண்.
No comments:
Post a Comment