கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகள் என்ன படிக்கலாம்? (பகுதி II) - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, May 17, 2016

கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகள் என்ன படிக்கலாம்? (பகுதி II)

மருத்துவமும் துணைமருத்துவக் கல்வியும்

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் பிரபலம். அத்துடன் சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி ஆகியவற்றுக்கும் தனித்தனிப் படிப்புகள் உள்ளன. மருந்தாளுகை, இயல்மருத்துவம், தொழில்சார்ந்த பிணி மருத்துவம் ஆகியவற்றுக்கும் பிபார்ம், பிபிடி(பிசியோதெரபி), பிஓடி என்ற பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.

செவிலியர் எனப்படும் நர்சிங் பணிக்கு பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள் உள்ளன. பிஎஸ்சி பட்டப்படிப்பின் கீழேயே விபத்து மற்றும் அவசர சிகிச்சை, மருத்துவ உதவியாளர் எனத் தொடங்கி 18 பிரிவுகளில் சிறப்புக் கல்வி அளிக்கப்படுகிறது.

பட்டயப்படிப்பில் நர்ஸிங் உதவியாளர், பல் மருத்துவத் துணைப்பணியாளர் எனத் தொடங்கி ஒன்பது பிரிவுகளில் கல்வி வழங்கப்படுகிறது.

கால்நடை மருத்துவத்துக்கான பட்டப் படிப்பு பிவிஎஸ்சி ஐந்தாண்டுகளைக் கொண்டது. அரசு வேலைவாய்ப்புகள் சமீபத்தில் இந்தப் படிப்புக்கு அதிகமாகியுள்ளன. இதுதவிர ஃபுட் புரொடக்ஷன் டெக்னாலஜி, பவுல்ட்ரி புரொடக்ஷன் டெக்னாலஜி ஆகியவற்றிலும் பிடெக் படிப்புகள் உள்ளன.

சட்டம் படித்தால்

பிளஸ் டூவுக்குப் பிறகு பயிலக்கூடிய ஒருங்கிணைந்த 5 ஆண்டு சட்டப் படிப்பும், பட்டம் பெற்ற பிறகு பயிலும் மூன்றாண்டு சட்டப் படிப்பும் இத்துறையில் உண்டு. எம்எல் என்னும் முதுகலைப் படிப்பும் உண்டு. சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூர் ஆகிய இடங்களில் அரசுக் கல்லூரிகள் இருக்கின்றன.

வணிக ஜாம்பவான் ஆகலாம்

பிகாம் படிப்பில் பொது, ஆக்சுவேரியல் மேலாண்மை, வங்கி மேலாண்மையும் காப்புரிமையும், கணினிப் பயன்பாடு, இ-காமர்ஸ் எனத் தொடங்கி 17-க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகள் உள்ளன. வணிகவியலைச் சார்ந்த மற்ற முக்கியப் படிப்புகள் சிஏ (சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்), ஏசிஎஸ் (அசோசியேட் கம்பெனி செக்ரட்டரி புரோகிராம்), சிஎப்ஏ (சார்ட்டர்ட் பினான்சியல் அனலிஸ்ட்) ஆகியவற்றையும் பிகாம் படிக்கும்போதே இணையாக படிக்கலாம்.

கலை, அறிவியல், பொதுப்பாடங்கள்

வரலாறு, அரசியல், பொருளாதாரம், ஆங்கிலம், தமிழ் இலக்கியம் இவற்றோடு சுற்றுலா, இதழியல், கவின்கலை, வரலாறு, தத்துவம், உளவியல், மானுடவியல் என பல பிரிவுகளில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.

இதேபோல், பிஎஸ்சி பட்டப்படிப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல், உயிரித்தொழில்நுட்பம், கணிதம், புள்ளியியல், புவியியல், உளவியல், மனையியல் ஆகிய அடிப்படை மற்றும் கிளைப் பிரிவுகளில் கல்வி வழங்கப்படுகிறது.

ஊடகத்தில் தடம் பதிக்க

விஷுவல் கம்யூனிகேஷன், அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபக்ட்ஸ், பப்ளிக் ரிலேஷன்ஸ், ஈவன்ட் மேனேஜ்மெண்ட், எலெக்ட்ரானிக் மீடியா, பிலிம் அண்ட் டிவி புரொடக்‌ஷன், மல்டி மீடியா, வெப்டெக் மீடியா மேனேஜ்மெண்ட் முதலிய பல பிரிவுகளில் இளங்கலைப் பட்டப் படிப்புகள் உள்ளன.

இனி என்ன? உங்களுக்கு வேண்டியதை உங்களிடமே கேளுங்கள், பிறகு உலகத்தில் தேடுங்கள்.

கட்டுரையாளர்:

முன்னாள் இயக்குநர், நுழைவுத் தேர்வுகள் மற்றும் மாணவர் சேர்க்கை அமைப்பு, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை

No comments:

Post a Comment