வானிலை முன்னறிவிப்பு: சென்னை, திருவள்ளூர், காஞ்சியில் இரு நாட்களுக்கு மிக கனமழை வாய்ப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, May 17, 2016

வானிலை முன்னறிவிப்பு: சென்னை, திருவள்ளூர், காஞ்சியில் இரு நாட்களுக்கு மிக கனமழை வாய்ப்பு

சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கன மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், "தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை மற்றும் மன்னார் வளைகுடா அருகில் நிலைகொண்டிருந்த தீவிர குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது இன்று காலை (செவ்வாய்க்கிழமை)வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தென் மேற்கு வங்கக்கடலில் சென்னைக்கு கிழக்கே 240 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.

இது அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று வடமேற்கு மற்றும் வடக்கு திசையில் நகர்ந்து வட தமிழக கடற்கரை மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரை ஓரமாகச் செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும்.

தென் தமிழகத்தை பொருத்தவரையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 14 செ.மீ மழை பெய்துள்ளது.

மீனவர்கள் தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரைக்கு 48 மணிநேரத்துக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். சென்னை மற்றும் புறநகரில் தொடர் மழையாக பெய்யும் சில நேரங்களில் கனமழை பெயும். தரைக்காற்று அதிகமாக வீசும்" என்றார்.

No comments:

Post a Comment