தென் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய
அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், கேரளாவில் மழை பெய்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் அவ்வளவாக மழை பெய்யவில்லை. தற்போது ராமநாதபுரம் மாவட்டம் தோண்டி வரை தென்மேற்கு பருவக் காற்று வீசுகிறது. தென் மாவட்டங்களில் பல பகுதிகளில் இன்னும் தென்மேற்கு பருவமழை தீவிரமடையவில்லை. அடுத்த 3 அல்லது 4 நாட்களில் தென் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வெப்பநிலையைப் பொறுத்தவரை, ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச வெயில் அளவின்படி, வேலூரில் 107.24, திருத்தணியில் 107.06, கடலூரில் 104.54, நாகப்பட்டினம், மதுரையில் 104, கரூர் பரமத்தியில் 103.28, திருச்சியில் 103.1, சென்னையில் 102.92, புதுச்சேரியில் 102.2, பாளையங்கோட்டையில் 101.3, தூத்துக்குடி, காரைக்காலில் 101.12, டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment