டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் குறித்து இனிமேல் இணையதளத்தில் மட்டுமே விரிவான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும், நாளிதழ்களில் மிகவும் சுருக்கமான விளம்பர அறிவிப்பு மட்டுமே வெளியிடப்படும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலர் எஸ்.சுவர்ணா வெளியிட்டுள்ள ஓர் அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழக அரசின் பல்வேறு துறைகளில் ஊழியர்களையும், அலுவலர்களையும் நேரடியாகத் தேர்வு செய்வது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) முதன்மையான பணி ஆகும்.
டிஎன்பிஎஸ்சி விதிமுறைகளின்படி, அரசு பணி நேரடி நியமனம் தொடர்பான அறிவிப்பு விளம்பரம் ஒன்று அல்லது 2 தமிழ் நாளிதழ்களிலும் மற்றும் ஏதேனும் ஓர் ஆங்கில நாளிதழிலும் வெளியிடப்படும்.
தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு ஆன்லைன் விண்ணப்ப முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதால், தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் இதுகுறித்து நன்கு அறிந்துள்ளனர். எனவே, நேரடி நியமனம் தொடர்பான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தனது இணையதளத்தில் (www.tnpsc.gov.in) விரிவாக வெளியிடவும், அந்த அறிவிப்பு தொடர்பாக நாளிதழ்களில் மிகவும் சுருக்கமாக அறிவிப்பு வெளியிட்டால் போதும்.
அந்த சுருக்க அறிவிப்பு விளம்பரத்தில், எந்தெந்த பிரிவு (குரூப்-1, குரூப்-2, குரூப்-4 போன்றவை), என்ன பதவி, என்ன துறை ஆகிய விவரங்களை மட்டும் தெரிவிக்க வேண்டும். கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வுமுறை, தேர்வுக்கட்டணம் உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் இருந்து அறிந்துகொள்ளலாம் என்பதை அதில் குறிப்பிட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment