இணையதளத்தில் பிரச்னை: ஆசிரியர்கள் புதிய ஊதியம் பெறுவதில் சிக்கல்
இணையதள சம்பளப் பட்டியல் ("வெப் பே ரோல்') வெளியிடப்படாததால் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் (உயர்நிலை), இடைநிலை ஆசிரியர்கள், துப்புரவாளர்கள் புதிய ஊதியம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இப்பிரச்னைக்கு தமிழக அரசு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என தமிழ்நாடு அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் சாமி. சத்தியமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 2,999 துப்புரவுப் பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு மாதத்துக்கு ரூ.3,000 மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது புதிய ஊதியக் குழுவில் இவர்களுக்கு ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அனைத்து அரசு ஊழியர்களும் அக்டோபர் மாத நிலுவைத் தொகை பெற்று வரும் நிலையில், துப்புரவுப் பணியாளர்களுக்கு ஆன்-லைன் முறை மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சம்பள ("வெப் பே ரோல்') பட்டியல் வெளியிடப்படவில்லை.
மாநில அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்குச் சம்பளம், செலவுத் தொகைகள் கருவூலத் துறை மூலமே வழங்கப்படுகின்றன. ஊழியர்களின் சம்பளப் பட்டியல் விவரத்தை ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதிக்குள் அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகள் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் தற்போது வரை இணையதளத்தில் புதிய சம்பளப் பட்டியல் வெளியாகாததால் இந்தப் பிரிவினருக்கு அக்டோபர் மாதத்துக்குரிய நிலுவைத் தொகை மற்றும் நவம்பர் மாத ஊதியம் ஆகியவை குறித்த விவரங்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து அதை கருவூலத்துக்கு சமர்ப்பிக்க முடியவில்லை.
இதேபோன்று அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் ரூ.2,000 மற்றும் அதற்குரிய அகவிலைப்படி மற்றும் பிற சலுகைகள் பெறுவதற்கு வழக்கமான விதிமுறைகள் பின்பற்றப்படாததால், அக்டோபர் மாத புதிய ஊதிய நிலுவை மற்றும் நவம்பர் மாத ஊதியம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே துப்புரவாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உரிய காலத்தில் புதிய ஊதியம் பெறும் வகையில் தமிழக அரசின் நிதித் துறை மற்றும் கருவூல கணக்குத் துறையினர் ஆவன செய்ய வேண்டும் என அதில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment