பாரம்பரிய அடையாளம் தேடும் ஆசிரியர்
விசலூரில் மணிகண்டன் கண்டெடுத்த கோயில் சிற்பங்களை மீட்கச் சென்ற அதிகாரிகள்.
ப
ள்ளிகளில் மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கும் அதற்காகத் தங்களைத் தயார் செய்வதற்குமே பெரும்பாலான ஆசிரியர்களுக்கு நேரம் சரியாக இருக்கும். ஆனால், எல்லோரும் இப்படி ஒரே விஷயத்துக்குள் அடைபட்டுவிடுவார்கள் என்று சொல்ல முடியாது. சிலருக்கு ஆசிரியப் பணியைத் தாண்டி ஏதாவது செய்ய வேண்டும் என்ற துடிப்பு இருக்கும். அப்படியான துடிப்பு கொண்டவர்தான் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தாவரவியல் துறைப் பட்டதாரி ஆசிரியர் ஆ.மணிகண்டன். அவர் தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாட்டு அடையாளங்கள் குறித்த இடைவிடாத தேடலில் ஈடுபட்டுவருகிறார் .
உலகமெங்கும் ஒரே மொழி பேசப்பட்டதற்கான சான்றுகள் ராமசாமிபுரம், மங்கலநாடு பகுதிகளிலும் உள்ளன என்று கூறும் இவர் குடுமியான்மலை அருகே விசலூரில் 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கற்சிலைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்கிறார். முற்காலத்தில் தமிழ் எண்களைக் கொண்டே மைல் கற்கள் இருந்தன என்பதையும் கல்வெட்டுகள் எவ்வாறு பொறிக்கப்பட வேண்டும் என்பதற்கான சான்றுகள்கூடப் புதுக்கோட்டை மாவட்டத்தில் கிடைத்துள்ளன என்பதையும் பெருமிதத்துடன் தெரிவிக்கிறார் இவர்.
அறிவைத் தீட்டும் அடையாளம்
இயல்பிலேயே தனக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் உண்டு என்று கூறும் மணிகண்டன் தனது வாசிப்பு எல்லையைப் பாடப்புத்தகங்களுடன் நிறுத்திக்கொள்ளவில்லை. “பாடங்களைத் தவிர பிற நூல்களை வாசித்தபோது, நம் மூதாதையர்கள் கட்டியெழுப்பிய கோயில்கள், கட்டுமானங்கள், நிறுவிய கல்வெட்டுகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றைப் பற்றி அறிந்துகொண்டேன். அந்த அறிதல் தந்த ஆச்சரியம் காரணமாகப் பாரம்பரிய அடையாளங்களைத் தேடிப் பயணிக்கத் தொடங்கினேன்” என்கிறார் மணிகண்டன். ஆய்வாளர்கள் கண்டுபிடித்து ஆவணமாக்கிய பாரம்பரிய அடையாளங்களும் புதுக்கோட்டை அருங்காட்சியமும்தான் தனது தேடலைக் கூர்மைப்படுத்தியதாகத் தெரிவிக்கிறார் இவர்.
பொதுவாக இதுபோன்ற ஆய்வுகளை அதற்கெனக் கற்ற ஆய்வாளர்கள் எளிதாக மேற்கொள்ள முடியும். சிலருக்கு அதுவே வேலையாக அமைந்துவிடும். ஆனால், மணிகண்டனோ தாவரவியல் படிப்பை முடித்தவர். அவருக்கு இது எப்படிச் சாத்தியமாயிற்று? தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் பாரம்பரிய அடையாளங்களைத் தேடிக் கண்டுகொண்டால்தான் எதிர்காலத்தில் மொழியையும் பண்பாட்டையும் பாதுகாக்க முடியும் என்பதில் மணிகண்டன் கொண்டிருக்கும் நம்பிக்கைதான் இதைச் சாத்தியப்படுத்தியுள்ளது.
‘தாவரங்களைக் கொண்டு வண்ணம் தீட்டலாம்’ என்னும் பாடத்தை அப்படியே சொல்லிக்கொடுப்பதைவிடப் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்கள் ரசாயனக் கலவையே இல்லாமல் சித்தன்னவாசலில் ஓவியம் தீட்டினார்கள் என்பதைச் சொல்லும்போது மாணவர்கள் பாடத்தை எளிதில் விளங்கிக்கொள்வார்கள் தானே என்று நம்மிடம் கேட்கிறார் மணிகண்டன். சரிதான் என்று தோன்றியது.
அது மட்டுமல்ல; நமது பாரம்பரியம் பற்றிய செய்தியும் மாணவர்களிடம் சென்றுசேரும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார் அவர்.
தொல்லியல் ஆய்வுக் கழகம்
உலகமெங்கும் ஒரே மொழி பேசப்பட்டதற்கான சான்றுகள் ராமசாமிபுரம், மங்கலநாடு பகுதிகளிலும் உள்ளன என்று கூறும் இவர் குடுமியான்மலை அருகே விசலூரில் 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கற்சிலைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்கிறார். முற்காலத்தில் தமிழ் எண்களைக் கொண்டே மைல் கற்கள் இருந்தன என்பதையும் கல்வெட்டுகள் எவ்வாறு பொறிக்கப்பட வேண்டும் என்பதற்கான சான்றுகள்கூடப் புதுக்கோட்டை மாவட்டத்தில் கிடைத்துள்ளன என்பதையும் பெருமிதத்துடன் தெரிவிக்கிறார் இவர்.
1,100 ஆண்டுகளுக்கு முன்பே தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டுமென்பதற்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டதற்கான சான்றுபோல பல்வேறு சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன என்று சொல்லும் மணிகண்டன் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்ட ஏராளமான கல்வெட்டுகளும் கட்டுமானங்களும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன என்கிறார்.
வரலாற்றுத் தேடல்களின் அடிப்படையில் வகுப்பறையில் பாடம் நடத்துவதால் மாணவர்களிடமும் தேடல் தூண்டப்பட வாய்ப்பு உள்ளது என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் அவர். மாணவர்கள் மூலமும் சில கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். பல்வேறு கண்டுபிடிப்புகள் ஆய்வு நிலையிலேயே உள்ளன என்று சொல்லும் மணிகண்டன், விடுமுறை நாட்களில் இதுதான் தனது பிரதான பணி என்கிறார்.
இப்பணிகளை மேற்கொள்ளவும், இதை அடுத்தடுத்த நிலைகளுக்குக் கொண்டு செல்லவும் கல்வெட்டு ஆய்வாளர் கரு.ராஜேந்திரன், ஆசிரியர்கள், இயற்கை ஆர்வலர்களைக் கொண்டு ‘தொல்லியல் ஆய்வுக் கழகம்’ என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளார்கள். தமிழ் மொழி, கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் உள்ளிட்டவை பாதுகாக்கப்பட வேண்டும்.
எதிர்காலத்தில் சிறு கீறலும் இல்லாமல் தமிழ் மொழி நிலைத்திருக்க வேண்டும் என்பதுதான் தனது தேடலின் நோக்கம் என்கிறார் மணிகண்டன். தமிழகம் எங்கும் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட பண்பாட்டு அடையாளங்களை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துவதோடு நின்றுவிடாமல் தானே தேடும் படலத்தில் இறங்கிய புதிய ஆசிரியனுக்கு வாழ்த்துகள்!
No comments:
Post a Comment