அனைத்திற்கும் ஆன்லைனா? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, November 16, 2017

அனைத்திற்கும் ஆன்லைனா?

அனைத்திற்கும் ஆன்லைனா?



எப்பொருள் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
’கூகுள்’ சொல்வதறிவு, என்பது தான் இன்றைய நிலை!
எங்கே சாப்பிடலாம், எங்கே தங்கலாம், எப்படி ஓர் ஊருக்கு போகலாம் என எந்த தகவல் வேண்டும் என்றாலும், இக்கால இணைய தலைமுறை உடனே மடிக்கணினி அல்லது கைபேசியை திறந்து பார்க்கத் தொடங்கி விடுகிறார்கள்!
ஆடை, காலணி உட்பட  எந்த ஒரு பொருளின் விலை, கிடைக்குமிடம் என அனைத்து தகவல்களையும் அறிந்துகொள்வதோடு மட்டுமல்லாமல், இணையத்தின் மூலமே அனைத்து பொருட்களையும் ‘ஆர்டர்’ செய்கிறார்கள். சில பொருட்கள் தொட்டுப் பார்த்து, சில பொருட்கள் போட்டுப் பார்த்து, வாங்கிட வேண்டமா?
கண்ணால் காண்பதும், பிறர்சொல்வதும் கூட தவறுதான்! நாமே கண்டு, உணர்ந்து, திருப்தி மனப்பாங்கோடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் இன்றைய இளைஞர்களிடம் இல்லை! கேட்டால் ‘ரிட்டர்ன் பாலிசி இருக்கிறது, கவலைப்பட ஒன்றும் இல்லை’, என்கிறார்கள். நேர விரயம் பற்றி யாரும் யோசிப்பதில்லை!
கல்விப் பாடங்களில் சந்தேகம் என்றால் இணையத்தில் நிச்சயம் விடை இருக்கும் தான். ஆனால், ஒன்றுக்கு நூறு கூட கிடைக்கும். அவற்றில் எது சரி? எது நாம் தேடுகிற ஒன்று என்ற புரிதல் இங்கே தேடுவோரிடம் இருக்கிறதா? என்பதே பிரதான கேள்வி. புள்ளி விவரங்கள் பெரும்பாலும் அண்மையில் சொல்லப்படும் ஒன்றாக இருக்காது. அதுவும் யார் சொன்னது, எப்போது எங்கே சொன்னது என்ற தகவல்கள் முழுமையாக இருக்காது!
இணையத்தில் நாம் காணுகின்ற ஒவ்வொரு விஷயமும் யாரோ, எங்கோ, எப்போதோ, தேடிப் பிடித்து பதிவு செய்தது தான். அதன் உண்மைத்தன்மை அங்கே எவரும் உறுதி செய்வது இல்லை. கிடைப்பது எல்லாம் சரியாய் இருக்குமா? என்று சொல்வது கடினம்.
இன்று ‘இணைய’ தலைமுறையிடம் பெரும்பாலும் காணுகின்ற ஒரு முக்கிய விஷயம், அவர்கள் உடல் ரீதியான நோய் குறித்து தேடிப் பிடித்து தெரிந்துகொள்கிறார்கள்! நிச்சயம் அந்த விஷயம் நமக்கு முற்றிலும் பொருந்துமா? என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. ஒரு மருத்துவரிடம் சென்று நமது உடலில் ஏற்படும் உபாதை குறித்து முழுமையாக எடுத்துச்சொல்லி, அதனை அவர்கள் அனுபவத்தில் என்ன நோய் அல்லது அது நோய் தானா என்று கண்டறிந்து உரிய வைத்தியம் சொல்லுவார்கள். ஆனால், இணையத்தில் நாமே கண்டறிந்து, புரிந்துகொண்டு அதற்கு சொந்த வைத்தியமும் செய்துகொண்டால் அது மிகவும் ஆபத்தானது!
தெளிவு ஏற்படுவதை விட குழப்பங்கள் ஏற்படும் சாத்தியம் இன்று அதிகம்! அதேபோல ஒரு கேள்விக்கு விடை தேடும்போது விடைக்கு பதில் மேலும் பல கேள்விகளே எழுகிற வாய்ப்பும் அதிகம். ஒரு நிபுணரை நேரில் சந்தித்து பெறுகிற தகவல் பெரும்பாலும் உறுதியான, நம்பகமான ஒன்றாக இருக்கும். ஆனால், இணையம் தருகிற தகவல்கள் அப்படி அல்ல!
ஆகவே, இளைய ‘இணைய’ தலைமுறையினர் ‘ஸ்மார்ட்’ ஆக இருந்தாலும், எல்லா விஷயங்களையும் அப்படியே நம்பமால், சாதுரியமும், சாமர்த்தியமும் மிக்கவர்களாகவும் வளர வேண்டும். அதற்கு, இணையத்தை சரியாக பயன்படுத்தும் விதத்தை புரிந்துகொள்தல் அவசியம்!
-முனைவர் பாலசாண்டில்யன்

No comments:

Post a Comment