தேனி: வாக்காளர் விபரங்களை சேகரிக்கும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு
ரூ.4,000 மதிப்புள்ள 'ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்' இலவசமாக வழங்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
மாநிலம் முழுவதும் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் தொடர்ச்சியாக, வாக்காளர் விபரங்கள் செம்மைப்படுத்தப்பட்ட பட்டியல் தயாரிக்கும் பணியில் தேர்தல் கமிஷன் ஈடுபட்டுள்ளது.
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களாக (பி.எல்.ஓ.,) கிராம நிர்வாக அலுவலர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், சத்துணவு ஒருங்கிணைப்பாளர்கள் பணியில் உள்ளனர்.
அலைபேசி செயலி அறிமுகம்
அவர்கள் பயன்படுத்தும் வகையில் புதிய அலைபேசி செயலி (மென்பொருள் செயலியை) 'பிஎல்ஓ., நெட்' என்ற பெயரில் தேர்தல் கமிஷன் அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும் ஆன்ட்ராய்டு போன் வாங்க விருப்பமுள்ள ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மாவட்ட தேர்தல் பிரிவு தாசில்தார்களிடம் தங்களின் முழு விபரங்களை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதே நேரம் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தெரியாத ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பட்டியலை வைத்துக் கொண்டு, வீடு வீடாக சென்று விபரங்களை சேகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி கலெக்டர் வெங்கடாசலம் கூறியதாவது:
வாக்காளர்களின் முழுமையான விபரங்களை வீடுகளுக்கே சென்று சேகரிக்கும் பணி நாளை (நவ.,15) முதல் நவ., 30 வரை நடக்க உள்ளது. இதில் ஈடுபடும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ரூ.4,000 மதிப்புள்ள ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன் இலவசமாக வழங்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இப்பணியில் இணைய செலவுக்காக தலா ரூ.250 வழங்கப்படும். அந்த அலுவலர்களின் விருப்பத்தின் படியும், அவர்களுக்கு பயன்படுத்தும் முறைகள் குறித்து தெரிந்திருந்தால் மட்டுமே ஸ்மார்ட் போன் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது, என்றார்.
No comments:
Post a Comment