பொதுத் தேர்வு, அதிக அளவிலான பாடச்சுமையால் பிளஸ் 1 அறிவியல் பாடப்பிரிவை தவிர்க்கும் மாணவர்கள் ஆண்டுதோறும் சேர்க்கை எண்ணிக்கை சரிவதால் கல்வியாளர்கள் கவலை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, January 24, 2019

பொதுத் தேர்வு, அதிக அளவிலான பாடச்சுமையால் பிளஸ் 1 அறிவியல் பாடப்பிரிவை தவிர்க்கும் மாணவர்கள் ஆண்டுதோறும் சேர்க்கை எண்ணிக்கை சரிவதால் கல்வியாளர்கள் கவலை

பிளஸ் 1 அறிவியல் பாடப்பிரிவை தேர்வு செய்யும் மாணவர் எண்ணிக்கை குறைந்து வருவது ஆசிரியர்கள், கல்வியாளர்களை கவலைகொள்ளச் செய்துள்ளது. எதிர்காலத் தில் அறிவியல் அறிஞர்கள், ஆசிரியர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

தமிழக பள்ளிக்கல்வியின் சமச்சீர் கல்வி முறையில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு மார்ச்சில் பொதுத்தேர்வு நடக்க உள்ளது. தேர்வு எழுதும் மாணவர் பட்டியலை இறுதி செய்து ஹால்டிக்கெட் தயாரிக்கும் பணியில் தேர்வுத்துறை ஈடுபட்டுள்ளது. அப்போது பிளஸ் 1 அறிவியல் பாடப்பிரிவில் கடந்த ஆண்டைவிட தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை 30% குறைந்துள்ளது தெரிந்தது. இதுதொடர்பாக தேர்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கான தேர்வை ஆண்டுதோறும் சராசரியாக 9 லட்சம் பேர் எழுதுவார்கள். கடந்த ஆண்டு பிளஸ் 1 பொதுத் தேர்வானதால் இந்த எண்ணிக்கை 8.64 லட்சமாக குறைந்தது.

தொடர்ந்து இந்த ஆண்டும் பிளஸ் 1 தேர்வு எழுத இருப்பவர்கள் எண்ணிக்கை 8.02 லட்சமாக சரிந்தது. அதாவது கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால் மாணவர் எண்ணிக்கை 62 ஆயிரமாக குறைந்துள்ளது. குறிப்பாக அறிவியல் பாடப்பிரிவில் (கணிதம் - உயிரியல்) மட்டும் தேர்வு எழுதுபவர்கள் எண்ணிக்கை 30% வரை குறைந்துள்ளது. 2017-18 கல்வியாண்டில் பிளஸ் 1 அறிவியல் பிரிவில் 2.60 லட்சம் பேர் இருந்தனர். இந்த ஆண்டு 2 லட்சம் பேர்தான் உள்ளனர். இதேபோல, கணிதம் - கணினி அறிவியல் பாடப்பிரிவிலும் 10% மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. மறுபுறம் வணிகப் பிரிவில் மாணவர்கள் எண்ணிக்கை 14% அதிகரித்து, கடந்த ஆண்டு 1.33 லட்சம் பேராக இருந்த எண்ணிக்கை இந்த ஆண்டு 1.51 லட்சமாக உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து கல்வியாளர்கள் சிலர் கூறியதாவது: முதுநிலை ஆசிரியர் தண்டாயுதபாணி: நீட் தேர்வு, பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு, கடினமான பாடத்திட்டம் ஆகியவைதான் மாணவர் எண்ணிக்கை குறைய காரணம். நீட் உட்பட போட்டித் தேர்வுகளை மனதில் வைத்து பாடத்திட்டம், தேர்வு முறைகளை அரசு மாற்றியுள்ளது. இதற்கு முன்பு தேர்வில் பாடத்தின் பின்பகுதியில் உள்ள கேள்விகளில் இருந்து 95% கேட்கப்படும். புதிய முறை வினாத்தாளில், இப்போது புத்தகத்தின் உட்பகுதியில் இருந்தே கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதிலும் 60% வினாக்கள் நுண்ணறிவை சோதிக்கும் வகையில் உள்ளன. புதிய பாடத்திட்டத்தின் படி கணிதம், உயிரியல், வேதியியல் உட்பட அறிவியல் பாடப் புத்தகங்கள் 700 பக்கங்களை கொண்டுள்ளன. அதிக பாடச்சுமையை தாங்க முடியாமல் கலைப்பிரிவுக்கு மாணவர்கள் மாறுகின்றனர். இதை தவிர்க்க பாடத்திட்டத்தை குறைத்து, எளிமைப்படுத்த அரசு முன்வர வேண்டும். பிரின்ஸ் கஜேந்திர பாபு: அறிவியல் பாடப்பிரிவை படிக்கும் மாணவர்கள் பெரும் பாலும் மருத்துவத் துறை சார்ந்த பணிகளுக்கு தான் செல்ல விரும்புவார்கள். அதற்கு நீட் என்ற சமநிலையற்ற போட்டித் தேர்வு வந்துவிட்டதால் ஏழை, நடுத்தர மாணவர் களுக்கு அது எட்டாக்கனியாகியுள்ளது. வசதி படைத்தவர்கள் ‘கோச்சிங்’ வகுப்புக்கு அனுப்பி படிக்க வைக்கின்றனர். எளிய மக்களுக்கு பொருளாதார சிக்கல்கள் உள்ளன. பொறியியல் துறைகளிலும் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் இல்லை.

எனவே, போட்டியை எதிர்கொள்ள முடியாமல் மாற்று பிரிவுகளை தேர்வு செய்கின்றனர். வயதுக்கு ஏற்ற பாடச்சுமை இல்லாமல், மருத்துவக் கல்லுாரியில் படிக்கவேண்டிய அளவுக்கு 11, 12-ம் வகுப்பு பாடத்திட்டங்கள் உள்ளன. இந்நிலை நீடித்தால் எதிர்காலத்தில் சிறந்த அறிவியல் அறிஞர்கள், ஆசிரியர்களுக்கு தட்டுப்பாடு போன்ற பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். இயற்பியல் ஆசிரியர் ராஜேந்திரன்: பிளஸ் 1 பாடத்திட்டம் ஆசிரியர்களுக்கே சவாலாக இருக்கிறது. சில நாட்கள் மட்டும் பயிற்சி வழங்கிவிட்டு அரசு ஒதுங்கிவிட்டது. பட்டப் படிப்புகளுக்கு நிகரான புதிய பாடத் திட்ட புத்தகங்கள் 700-க்கும் அதிகமான பக்கங்களுடன் உள்ளன. கடினமாக இருப்ப தால் மாணவர்களுக்கு புரியவைத்து நடத்து வதற்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. மொத்தம் 4,500 பக்கங்கள் கொண்ட புத்தகத்தில் உள்ள எல்லா விஷயங்களையும் உள்வாங்கிக் கொண்டு பொதுத்தேர்வு எழுத மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

தேர்வு முறையும் கடினமாக இருப்பதால் பாடத்திட்டத்தை குறைக்க அரசுக்கு கோரினோம். ஆனால், பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும் என்று அறிவித்து அரசு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் பெரும்பாலான பள்ளிகளில் பிளஸ் 1 பாடத்திட்டம் முழுவதும் நடத்தி முடிக்கப்படவில்லை. பல அரசுப் பள்ளி களில் 70 சதவீதம் பாடத்தை மட்டுமே நடத்தி முடித்துள்ளனர்.
பாடத்திட்டமும், தேர்வுமுறை யும் அச்சுறுத்தும் வகையில் இருப்பதால் மாணவர்கள் வேறு வழியின்றி கலைப் பிரிவுகளை நோக்கி சென்றுவிடுகின்றனர். புதிதாக தயாரிக்கப்படும் பிளஸ் 2 பாடத்திட்டத்தில் கடினமாக பகுதிகள் குறைக்கப்பட்டு வருகின்றன. அதுபோல, பிளஸ் 1 பாடச்சுமையையும் குறைக்க அரசு முன்வர வேண்டும்.

No comments:

Post a Comment