மிகவும் கீழ்நிலை வேலையாக இருந்தாலும், அரசாங்க
வேலையே சிறப்பானது மற்றும் பாதுகாப்பானது என்று மக்கள் நினைப்பதற்குக் காரணம், அரசு ஊழியர்கள் ஓய்வுபெற்ற பின் அவர்களுக்கு அரசு வழங்கிய ஓய்வூதியமும், அவர்கள் இறப்புக்குப் பின் அவர்களின் வாழ்க்கைத் துணைக்கு இறப்பு வரை வழங்கிய குடும்ப ஓய்வூதியமும்தான்.
‘ஓய்வூதியம் என்பது அரசு ஊழியர்களின் வாழ்வுரிமை என்றும், அவர்கள் செய்த பணியின் பொருட்டு அளிக்கப்படுவது என்றும், இதை ‘இனாம்’ என்று கருத முடியாது’ என்றும் உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் கூறியுள்ளது. ஆனால், 01.04.2003 முதல் தமிழக அரசுப் பணியில் சேருபவர்களுக்கு ஓய்வூதியம் இல்லை என அரசு அறிவித்துள்ளது.
இப்போது நடக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்தின் மையப் பிரச்சினை, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதே. இந்த நேரத்தில், போராடுபவர்கள் பணியை ஒழுங்காகச் செய்தனரா, இந்த அரசு குறையற்ற அரசா என்பது போன்ற பிரச்சினைகளுக்குள் செல்வது, எதிர்கொள்ளும் பிரச்சினையைத் திசை திருப்புவதாகும்.
தேர்தல் வாக்குறுதி
ஓய்வூதியத்தை மீட்பதற்காக இவர்கள் பல முறை போராடி வந்ததை ஒட்டி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2016-ம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தலின்போது, அவர் ஆட்சிக்கு மீண்டும் வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவருவதாக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றச் சொல்லியே இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால், சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் உண்டு. சட்ட மன்றம் ஐந்து ஆண்டுகள் செயல்படாமல், ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் மட்டுமே செயல்பட்டுக் கலைக்கப்பட்டாலும், அப்போது சட்ட மன்ற உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கும் ஓய்வூதியம் உண்டு.
ஓய்வூதியம் வேண்டும் எனப் போராடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு, உடனடியாக வேலைக்குத் திரும்ப வேண்டும் என உத்தரவிடும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் ஓய்வூதியம் உண்டு. அவர்கள் 01.01.2016 முதல் திருத்தப்பட்டு, உயர்த்தப்பட்ட ஊதிய நிலுவைத் தொகையையும், ஓய்வூதியம் பெற்றவர்கள் ஓய்வூதிய நிலுவைத் தொகையையும் பெற்றுக்கொண்டார்கள்.
அரசின் கருவியல்ல நீதிமன்றம்
அரசு ஊழியர்களோ, ஆசிரியர்களோ, மருத்துவர்களோ, போக்குவரத்துத் தொழிலாளர்களோ என எந்தப் பகுதி போராடினாலும், அப்போதெல்லாம் நீதிமன்றங்கள் அவர்களின் போராட்டத்தை, வேலைநிறுத்தத்தை நிறுத்திக்கொள்ளும்படி உத்தரவிடுவது, அரசுக்கு ஆதரவான நிலையை நீதிமன்றம் எடுப்பதாகாதா? வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு உடனே வேலைக்குத் திரும்ப வேண்டும் என்று உத்தரவிடும் நீதிமன்றங்கள், பறிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை உடனே அளிக்க வேண்டும் என்று ஏன் அரசுக்கு எந்த உத்தரவும் இடவில்லை?
போராடும் ஊழியர்களை எதிர்கொள்ள அரசுக்குப் போதுமான சட்டங்கள் இருக்கும்போது, அவற்றைப் பயன்படுத்தினால் மக்கள் மத்தியில் - குறிப்பாக போராடும் மக்கள் மத்தியில் - அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் என்பதாலும், அது எதிர்காலத் தேர்தலில் அரசுக்கு எதிராகப் போகும் என்பதாலும், அரசு பல தரப்பு நபர்கள் மூலம் வழக்குகளைப் போட்டு, நீதிமன்றத்தின் மூலம் அப்போராட்டங்களை எதிர்கொள்ள நினைக்கிறதோ என்கின்ற வலுவான ஐயம் எழுகிறது.
2003-ல் போராடிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல லட்சம் பேரை மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ‘அத்தியாவசியப் பணி பராமரிப்புச் சட்ட’த்தின் கீழ் வேலைநீக்கம் செய்தது போன்ற பல அதிகாரங்கள் அரசிடம் இருக்கும்போது, போராட்டத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குப் போடுவதை ஏற்க முடியாது என்ற நிலைப்பாட்டை நீதிமன்றங்கள் எடுக்க வேண்டும். கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுத்தால், அதில் தலையிடுமாறு போராடும் ஊழியர்கள் கோரினாலும், அதில் தலையிட நீதிமன்றங்கள் மறுத்து நடுநிலை வகிக்க வேண்டும்.
இது தொழிலாளர் பிரச்சினை
2003-ல் வேலைநீக்கம் செய்யப்பட்டவர்கள் அனைவருக்கும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீண்டும் பணித் தொடர்ச்சியுடன் வேலை கொடுத்தது மட்டுமன்றி, வேலை நிறுத்த நாட்களுக்கு ஊதியமும் கொடுத்துள்ளார். எனவே, இது முழுக்க முழுக்க அரசுக்கும் அரசு ஊழியர்களுக்கும் இடையே உள்ள பிரச்சினை என்பதும், அதில் எந்தத் தரப்பும் நீதிமன்றத்தைத் தனக்கு ஆதரவாகப் பயன்படுத்த நினைத்தால், அதை ஏற்க முடியாது என்பதும், இம்மாதிரி தருணங்களில் நடுநிலை வகிப்பதே நீதிமன்றங்கள் செய்ய வேண்டியது என்பதும் சரியான நிலையாக இருக்கும்.
ஊழியர்கள் வன்முறையில் ஈடுபட்டாலொழிய ஊழியர்களின் போராட்டத்தில் தலையிடுவதை நீதிமன்றங்கள் தவிர்க்க வேண்டும். அப்படியின்றி வேலைநிறுத்தத்தில் தலையீடு செய்யமுற்பட்டால், நடுநிலையுடன் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு நீதிமன்றங்கள் உள்ளாகும்.
போராட்டங்களை எதிர்த்துப் போடப்படும் மிகப் பெரும்பான்மையான வழக்குகள் அரசியல் சார்பு கொண்டவை. அரசுப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன், கல்வி பாதிக்கப்படுவதாக வழக்கு போடுவதற்குப் பின்னால் உள்ள அரசியலைக் காணாமல் இருக்க முடியாது. ஒரு நீதிபதியிடம் போராட்டத்துக்கு எதிரான உத்தரவைப் பெற முடியவில்லை என்றால், மற்றொரு நீதிபதி முன் வேறொரு வழக்கைக் கொண்டுவருவது போன்ற முறைகளுக்குப் பின்னால் உள்ள அரசியலும் மிக மோசமானது.
போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் முதல்வர் உடனே காலதாமதமின்றிப் பேச்சுவார்த்தை நடத்தி, சுமுகமான முடிவை உண்டாக்குவதே சரியான தீர்வாகும்.
- து.அரிபரந்தாமன், நீதிபதி (ஓய்வு),
சென்னை உயர் நீதிமன்றம்
No comments:
Post a Comment