கல்வித்துறையில் ஆவணங்கள் தயாரிப்பது அதிகரித்து வருவதால், கற்பித்தலுக்கு செலவிடும் நேரம் குறைந்து விட்டது
கல்வித்துறையில் ஆவணங்கள் (ரெக்கார்டு) தயாரிப்பது அதிகரித்து வருவதால், கற்பித்தலுக்கு செலவிடும் நேரம் குறைந்து விட்டது என ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பள்ளிக் கல்வியில் பல நிர்வாக மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இதற்கு பெரும்பாலும் வரவேற்பு இருந்தாலும் ஆசிரியரின் தகுதிக்கான நிலையில் இருந்து அவர்களை கீழ் வகுப்பிற்கு பயிற்றுவிக்க செய்வது, இடைநிலை ஆசிரியரை அங்கன்வாடிக்கு அனுப்பும்உத்தரவு போன்றவற்றால் அவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
இதுதவிர பள்ளிகளில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாதோர் பணி பதிவேடு, மாணவர் பதிவேடு, சம்பள பதிவேடு, தற்செயல் விடுப்பு பதிவேடு என 50 வகை ரெக்கார்டுகளை தினமும் தலைமையாசிரியர் தயாரிக்க வேண்டியுள்ளது. இதற்கும் ஆசிரியரே உதவுகின்றனர்.இது தவிர 'எமிஸ்' விவரம், தேர்வு விவரம், இலவச நலத் திட்டங்கள், கல்வி உதவி தொகை, பொது தேர்வு மையங்கள் விவரம் உள்ளிட்ட பதிவேற்ற பணிகளாலும் பணிச்சுமை அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் கழகம் நிர்வாகிகள் அனந்தராமன், கந்தசாமி, கிறிஸ்டோபர் ஜெயசீலன் கூறியதாவது:
கற்பித்தலைவிட 'ரெக்கார்டு' தயாரித்து ஒப்படைக்கவே அதிகாரிகள் கெடுபிடி காட்டுகின்றனர். அவர்களுக்கு தேவை 'கடந்தாண்டை விட இந்தாண்டு தேர்ச்சி அதிகரிப்பு' என்ற 'புள்ளி விவரம்' மட்டுமே.அதிகாரி கேட்கும் பள்ளி, ஆசிரியர், மாணவர், நலத் திட்டங்கள் உள்ளிட்ட விவரத்தை தினமும் அனுப்புவது பெரும் சவாலாக உள்ளது. இதை தவிர்க்க கல்வி மாவட்டம் வாரியாக தகவல் மையம் அல்லது சி.இ.ஓ., அலுவலகங்களில் சிறப்பு தகவல் பிரிவு துவங்கலாம் என்றனர்.
No comments:
Post a Comment