எதை நோக்கிப் போகிறது தமிழ்நாட்டின் உயர் கல்வி? 100 இடங்களில் தமிழ்நாட்டின் 35 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றிருக்கின்றன - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, June 10, 2023

எதை நோக்கிப் போகிறது தமிழ்நாட்டின் உயர் கல்வி? 100 இடங்களில் தமிழ்நாட்டின் 35 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றிருக்கின்றன

    
எதை நோக்கிப் போகிறது தமிழ்நாட்டின் உயர் கல்வி? தேசிய அளவில் சிறந்த உயர் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாட்டின் மூன்று கல்லூரிகள் முதல் பத்து இடங்களுக்குள் வந்திருக்கின்றன. 100 இடங்களில் தமிழ்நாட்டின் 35 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றிருக்கின்றன. 
 
            பெருமிதம் தரும் இந்தச் செய்திகளுக்கு நடுவே, ஏழைகளின் கரங்கள் எட்டும் உயரத்திலிருந்து உயர் கல்வி விலகிச் செல்லும் அவலம் குறித்தும் பேச வேண்டியிருக்கிறது. மாறாத காட்சி: சென்னையின் குடிசைப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் கண்ணகி நகரிலும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் வசிக்கிறார்கள். அவர்களைப் போன்ற ஏழைகளின் குழந்தைகள் குறைந்த கட்டணத்தில்தான் படிக்க முடியும். துரைப்பாக்கத்தில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரிதான் இத்தகையோரின் கல்விக்குப் பெரும் பங்காற்றியது. 
 
        ஆனால், முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் சட்ட விதிகளை மீறி அதைச் சுயநிதிக் கல்லூரியாக மாற்றுவதற்கான முயற்சியைக் கல்லூரி நிர்வாகம் மேற்கொண்டது. இதனை இடதுசாரி அமைப்புகளும் அக்கல்லூரியின் முன்னாள் பேராசிரியர்களும் கடுமையாக எதிர்த்துப் போராட்டங்களில் இறங்கினர். ஆட்சி மாறியதும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டார். ‘தனியார் கல்லூரி ஒழுங்காற்றுச் சட்ட விதி’களைப் பயன்படுத்தி, கல்லூரி நிர்வாகத்தை அரசுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தனி அலுவலரும் நியமிக்கப்பட்டார். 
 
            இதைப் போலவே, மதுரையிலும் ஓர் அரசு உதவிபெறும் கல்லூரியின் நிர்வாகிகள் சிலர், கல்லூரியைத் தங்கள் வசமாக்க முயன்றனர். ஆசிரியர் சங்கம் அரசுக்கு நெருக்கடி கொடுத்ததால் அரசு அங்கும் தனி அலுவலரை நியமித்தது. இதற்கிடையே துரைப்பாக்கம் கல்லூரி நிர்வாகம் உயர் நீதிமன்றத்தை அணுகி, தனி அலுவலர் செயல்படத் தற்காலிகத் தடை பெற்றது. இந்தக் கல்லூரியில் அரசு உதவிபெறும் பிரிவில் மாணவர்களின் சேர்க்கை 2022-23ஆம் ஆண்டு நடைபெறவில்லை என்று இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் முன்னாள் ஆசிரியர்களும் குற்றம்சாட்டுகின்றனர். இது தொடர்பான வழக்கு தேங்கி நிற்பதாகவும், அதைப் பயன்படுத்தி 2023-24 கல்வியாண்டிலும் அரசு உதவிபெறும் பிரிவில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. 
 
            அதேபோல் மதுரையில் உள்ள கல்லூரியை அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்தபோதும், அரசு அதிகாரிகளின் உதவியுடன் இன்னும் அன்றாட நிகழ்வுகளில் பழைய நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் தலையிடுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. சுயநிதிக் கல்லூரிகளின் அத்துமீறல்: அரசு உதவிபெறும் கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட மாணவர்களிடமிருந்து பல மடங்குக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார்கள் உண்டு. இதில் அரசு உரிய கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை. கூடவே, இந்த ஆட்சியிலும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் நிரந்தர ஆசிரியர் நியமனங்களுக்குப் பல லட்ச ரூபாய் பெற்றுக்கொண்டுதான் பெரும்பாலான நிறுவனங்கள் ஆசிரியர்களைப் பணியில் அமர்த்துவதாகத் தொடர்ந்து குற்றம்சாட்டப்படுகிறது. சமூக நீதிக் கொள்கைகளுக்கு எதிரான இந்த அவலம், கட்சி வேறுபாடின்றி இந்த ஆட்சியிலும் தொடர்கிறது. சென்னைப் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் கலை அறிவியல் கல்லூரியில் ஆறு மணி நேரமாக இருந்த தமிழ்ப் பாடவேளைகளை (Lesson Periods) நான்கு பாடவேளைகளாக மாற்றி 2021இல் ஆணை ஒன்றைப் பல்கலைக்கழகம் அனுப்பியது. உடனடியாக சுயநிதிக் கல்லூரிகள் இதைப் பயன்படுத்தி எண்ணிக்கை மிகுதி என்று காரணம் காட்டி, தமிழ்த் துறைப் பேராசிரியர்களைப் பணியிலிருந்து நீக்கமுயன்றன. சுயநிதிக் கல்லூரி ஆசிரியர் சங்கம் இதை உயர் கல்வித் துறைச் செயலரின் கவனத்துக்கு எடுத்துச் சென்றது. உயர் கல்வித் துறையின் தலையீட்டினால் அந்த ஆணை திரும்பப் பெறப்பட்டது. இந்த ஒரு பிரச்சினையில், அரசின் தலையீட்டால் சுயநிதிக் கல்லூரி ஆசிரியர்கள் பலரின் பணிகள் பாதுகாக்கப்பட்டது என்னவோ உண்மைதான். ஆனால், கடந்த காலத்தைப் போலவே சுயநிதிக் கல்லூரி ஆசிரியர்களின் முறையற்ற பணிநீக்கங்கள் இப்போதும் தொடரவே செய்கின்றன. கட்டணக் கொள்ளை, தரமற்ற கல்வி, நிர்வாகத்தின் ஜனநாயகமற்ற போக்கு ஆகிய அனைத்தும் கடந்த காலத்தைப் போலவே சுயநிதிக் கல்வி நிறுவனங்களில் தொடர்கின்றன. இங்கு ஆசிரியர்கள் நவீன அடிமைகளைப் போலத்தான் செயல்பட வேண்டியிருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் பணியிலிருந்து நீக்கப்படலாம் என்ற அச்சத்துடன் பணிபுரியும் ஆசிரியர்கள் எப்படி மாணவர்களுக்குத் தரமான கல்வியைப் போதிக்க முடியும்? தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 2,657 கல்லூரிகளில், சுயநிதிக் கல்லூரிகள் 2,020 ஆகும். 12.79 லட்சம் மாணவர்கள் இக்கல்லூரிகளில் பயில்கின்றனர். இக்கல்லூரிகளின் ஜனநாயகமற்ற போக்கு இந்த மாணவர்களின் நலனை கடுமையாகப் பாதிக்கிறது. கட்டுப்பாடற்ற தனியார்மயம்: சுயநிதிக் கல்லூரிகளைக் கட்டுப்படுத்தவும் இந்நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தவும் கேரளம் தனிச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதைப் போன்று சுயநிதிக் கல்லூரி / பிரிவுகளுக்கு என்று தனிச் சட்டத்தைத் தமிழ்நாடு இயற்ற வேண்டியது உடனடித் தேவையாகும். தமிழ்நாட்டில், ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைகளில் ஒன்றாகக் கல்வி வளர்ச்சி பார்க்கப்படுகிறது. ஆனால், கட்டுப்பாடற்ற தனியார்மயத்தை உயர் கல்வியில் ஊக்குவித்ததன் விளைவாக அதனுடைய அடித்தளமே ஆட்டம் காணும் அளவுக்குநிலைமை மோசமாக உள்ளது. இதைச் சீர்செய்வதுதான் தமிழ்நாட்டின் நீண்ட கால நலனுக்கு நல்லது. தமிழ்நாடு அரசு உருவாக்கும் மாநில கல்விக் கொள்கையில் இதற்கான வழிவகைகளைச் செய்வதும் அவசியம். 
 
            அரசு செய்ய வேண்டியவை: பல ஆண்டுகளாக அரசுக் கல்லூரிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. முந்தைய ஆட்சியின் இறுதிப் பகுதியில் இதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டு, பிறகு அது வழக்கின் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டது. இதனால், பணிப் பாதுகாப்பற்ற சூழலில் பணியாற்றிக்கொண்டிருக்கும் சுயநிதிக் கல்லூரி ஆசிரியர்களும் அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களும் கடும் அதிருப்திக்கு ஆளானார்கள். திமுக அரசு பதவியேற்றவுடன் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்கிற எதிர்பார்ப்பும் அதிகரித்தது. 
 
            ஆனால், ஏதோ காரணங்களுக்காக இது தாமதமாகிறது. அதேபோல் அரசுக் கல்லூரிகளில் கெளரவ விரிவுரையாளர் நிலையும் கடந்த காலத்தைப் போலவே தொடர்கிறது. குறைந்த சம்பளத்தை 11 மாதங்கள் மட்டுமே பெற்றுக்கொண்டு தொடர்ந்து பணியாற்ற வேண்டிய நிலையில் இவர்கள் இருக்கிறார்கள். கேரளத்தின் கெளரவ விரிவுரையாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.43,000 தரப்படுகிறது. அதே அளவுக்கு இங்கும் சம்பளம் உயர்த்தப்பட வேண்டும். இது அரசுக் கல்லூரியில் பயிலும் 4,65,148 மாணவர்களின் நலனுடன் தொடர்புடையது என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும். ‘நான் முதல்வன்’ திட்டத்தின் அடிப்படை நோக்கம் திறன் மேம்பாடு ஆகும். திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் வேலையின்மைப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையாது எனப் பல பொருளாதார அறிஞர்கள் சுட்டிகாட்டியுள்ளனர். இதையும் அரசு தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். 
 
        அரசுக் கல்லூரிகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினாலே, அது மாணவர்கள் தங்களுக்கான அடிப்படைக் கல்வியைத் தரமாகப் பெறுவதற்கு வழியமைத்துக் கொடுக்கும். ‘நான் முதல்வன்’ திட்டத்தின் நோக்கத்தை அதன் மூலமே அடைய முடியும். ஆசிரியர் சங்கங்களும் மாணவர் அமைப்புகளும் கல்வியாளர்களும் தமிழ்நாடு அரசைத் தொடர்ந்து வலியுறுத்துவதன் மூலம்தான் மேலே சொல்லப்பட்ட பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும்! அரசுக் கல்லூரிகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினாலே, அது மாணவர்கள் தங்களுக்கான அடிப்படைக் கல்வியைத் தரமாகப் பெறுவதற்கு வழியமைத்துக் கொடுக்கும். தொடர்புக்கு: arunkannandrf@gmail.com

No comments:

Post a Comment