2 ஆண்டுகள் பயிற்சி முடித்தும் எட்டாக்கனியாக மாறிய ஆசிரியர் பணி! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, June 27, 2023

2 ஆண்டுகள் பயிற்சி முடித்தும் எட்டாக்கனியாக மாறிய ஆசிரியர் பணி!

2 ஆண்டுகள் பயிற்சி முடித்தும் எட்டாக்கனியாக மாறிய ஆசிரியர் பணி!             சிறப்பு இடைநிலை ஆசிரியர் பட்டயம் பெற்றவர்கள் அரசு பள்ளிகளில் சேர முடியாமல் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கின்றனர். ஓய்வு பெறும் வயதை எட்டியுள்ள இவர்களுக்கு அரசு பணி கிடைக்குமா? என காத்திருக்கின்றனர். 
 
             தமிழகத்தில், ஆசிரியர் பட்டயப்பயிற்சி மற்றும் மழலையர் பயிற்சி மூலம் அரசு பள்ளிகளில் பணியாற்றும் வகையில் ‘பிரி ஸ்கூல் டீச்சர் டிரைனிங்’ (பி.எஸ்.டி.டி) என்ற பயிற்சி மையம் கடந்த 1988-89-ம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டது. இதன் மூலம் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு இடைநிலை ஆசிரியர் பயிற்சியும், தேர்ச்சி பெறாதவர்களுக்கு மழலையர் பயிற்சியும் இந்த பயிற்சி மையத்தில் 2 ஆண்டுகள் வரை அளிக் கப்பட்டது. 
 
        இந்த பயிற்சி மையங்கள் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் சேர்க்காடு, விண்ணம்பள்ளி, கொடைக்கல், சோளிங்கர் மற்றும் குடியாத்தம் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டன. அன்றைய காலகட்டத்தில் ‘ஹையர் கிரேடு’ ஆசிரியர் பயிற்சி என்ற அளவில் இந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 
 
            இந்த பயிற்சி முடித்தவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கின்றனர். இதுவரை ஆசிரியர் பணி என்பது இவர்களுக்கு எட்டாக் கனியாகவே உள்ளதாக பாதிக்கப் பட்டவர்கள் தெரிவித்தனர். 
 
            இது குறித்து இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் கூறியதாவது, ‘‘அரசுப்பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு பாடம் நடத்தக்கூடிய பயிற்சிகள் ‘பிரி ஸ்கூல் டீச்சர் டிரைனிங்’ மையத்தில் அளிக்கப்பட்டது. 1990-91-ம் ஆண்டில் சேர்க்காடு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற எங்களுக்கும், எங்களுக்கு முன்னர் பயிற்சி முடித்தவர்களுக்கும் இதுவரை அரசு வேலை கிடைக்கவில்லை. 
 
            இதனிடையில், ‘பிரி ஸ்கூல் டீச்சர் டிரைனிங்' பயிற்சி மையம் மூடப்பட்டது. இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத விண்ணப்பித்தோம். அதற்காக தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு பெற்ற நிலையில், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், ஆசிரியர் தகுதி தேர்வு எழுத தகுதியற்றவர்கள் என அரசு தரப்பில் கூறப்பட்டது. 
 
                இப்படி பல சிக்கல்கள் தொடர்வதால், ஆசிரியர் பணி என்பது எங்களுக்கு வெறும் கனவாகவே மாறிவிட்டது. ‘பிரி ஸ்கூல் டீச்சர் டிரைனிங்' மையத்தில் 2 ஆண்டுகள் வரை ஆசிரியர் பயிற்சி முடித்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், 30 ஆண்டுகளாக காத்திருந்து, தற்போது ஓய்வு பெறும் வயதை எட்டிவிட்டோம். அன்றைய காலகட்டத்திலேயே இடை நிலை ஆசிரியர் பயிற்சிக்காக ரூ.1 லட்சம் வரை செலவழித்தும், அரசு பணி கிடைக்காமல் நாங்கள் அதிக பாதிப்புக் குள்ளாகியுள்ளோம். 
 
             படிப்புக்காக நாங்கள் வாங்கிய கடன் தொகையை செலுத்த முடியாமல் தவிக்கிறோம். மேலும், படித்த படிப்புக்கு தொடர்பு இல்லாத வேலைகளை செய்து வருகிறோம். தற்போதைய சூழ்நிலையில், பல அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன. எங்களுக்கு அந்த பள்ளிகளில் பணியாற்ற அரசு வாய்ப்பு வழங்க வேண்டும். மேலும், தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி மூலம் நாங்கள் படித்த படிப்புக்கு ஏற்ற வேலையை அரசாங்கம் வழங்க முன் வரவேண்டும். 
 
            அதேபோல, ஆசிரியர் தகுதி தேர்வு (டெட்) எழுத எங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்’’ என்றனர். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதி காரிகளிடம் கேட்டபோது, "ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சிபெற்றால் மட்டுமே ஆசிரியர் பணியானது வழங் கப்படும். 
 
        ஏற்கெனவே, தேர்வு எழுதி தேர்ச்சிப்பெற்ற பலர் வேலை கிடைக்காமல் உள்ளனர். அரசின் கொள்கை முடிவுக்கு எதிராக எதையும் செய்ய வாய்ப்பில்லை’’ என்றனர்.

No comments:

Post a Comment