அரசு பள்ளிகளில் சேர்ந்த 2.8 லட்சம் மாணவர்கள்: பள்ளிக்கல்வித் துறை தகவல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, March 27, 2024

அரசு பள்ளிகளில் சேர்ந்த 2.8 லட்சம் மாணவர்கள்: பள்ளிக்கல்வித் துறை தகவல்

அரசு பள்ளிகளில் சேர்ந்த 2.8 லட்சம் மாணவர்கள்: பள்ளிக்கல்வித் துறை தகவல்

         அரசுப் பள்ளிகளில் இதுவரை 2.8 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 37,576 அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில் சுமார் 53 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 

        இதில் 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதற்கிடையே வரும் கல்வியாண்டில் (2024-25) அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து வழக்கத்தைவிட முன்னதாக இந்த ஆண்டு சேர்க்கைப் பணிகள் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் தொடங்கப்பட்டன. அதனுடன் மாணவர் சேர்க்கையை முன்வைத்து பல்வேறு விளம்பரப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

            இதையடுத்து மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் பெற்றோர் பலர்தங்கள் குழந்தைகளை ஆர்வமுடன் சேர்த்து வருகின்றனர். இதன்படி இதுவரை 2.8 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 19 ஆயிரம் குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். 

             இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘தேர்வு மற்றும் தேர்தல் பணிகள் முழுமையாக முடிந்தபின் மாணவர் சேர்க்கை பணிகள் இன்னும் தீவிரப்படுத்தப்பட உள்ளன. அங்கன்வாடி மையங்களில் படித்த 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளும் அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இந்தாண்டு 5 லட்சம்பேர் வரை பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள்’’ என்றனர்.

No comments:

Post a Comment