மத்திய அரசு நிதி கொடுத்தும் தமிழகத்தில் 6000 பள்ளியில் கழிப்பறை வசதி இல்லை: கல்வித்துறையின் அவலம் அம்பலம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, October 29, 2014

மத்திய அரசு நிதி கொடுத்தும் தமிழகத்தில் 6000 பள்ளியில் கழிப்பறை வசதி இல்லை: கல்வித்துறையின் அவலம் அம்பலம்

 தமிழகத்தில் 6152 பள்ளிகளில் கழிப்பறைகளே இல்லை என்று  மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அதிகாரப் பூர்வமாக  அறிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள, தமிழக பள்ளிக்  கல்வித்துறை அவசரம் அவசரமாக பணிகளை தொடங்கி
உள்ளது.  மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் அனைத்து  கல்வி வாரியங்களும் வருகின்றன. அதில் பள்ளிக் கல்வியும் வருவதால்  நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் செயல்படும் பள்ளிகளில்  முழுமையாக கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதா என்று கடந்த மாதம்  ஆய்வு நடத்தியது. அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் நாடு  முழுவதும் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் கிடைத்த புள்ளிவிவரங்களை  பெற்று மத்திய மனித வள மேம்பாட்டுத்  துறை அமைச்சகம் தனது  இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. மாநிலம் வாரியாக வெளியிடப்பட்டுள்ள அந்த பட்டியலில், ஒவ்வொரு  மாநிலத்திலும் எத்தனை பள்ளிகள் கழிப்பறை இல்லாமல் இயங்கி  வருகின்றன என்ற விவரங்கள் இடம் பெற்றுள்ளன. அதில்  குறிப்பிட்டுள்ளபடி மேற்கு வங்கம், பீகார், உத்தரபிரதேசம் உள்பட 5  மாநிலங்களில் தலா 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் கழிப்பறை  தேவை உள்ளதாக தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் 49  பள்ளிகளிலும், கேரளாவில் 212 பள்ளிகளிலும், குஜராத்தில் 940  பள்ளிகளிலும் கழிப்பறைகள் இல்லை என்று தெரிவித்துள்ளதுடன்,  தமிழகத்தில் 6152 பள்ளிகளில் கழிப்பறைகள் இல்லை என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாநில அரசுகள், கழிப்பறை கட்டாமல் விட்டது தொடர்பாகவும் மத்திய  மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் சுட்டிக் காட்டியதுடன்,  மத்திய அரசின் மூலம் பெறுகின்ற நிதியை எதற்காக  செலவிட்டுள்ளார்கள், என்ற கணக்கையும் கேட்டுள்ளது. இந்த பட்டியல்  வெளியானதை அடுத்து தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை அடுத்தகட்ட  நடவடிக்கையில் இறங்கியுள்ளது. சட்டப் பேரவையில் வெளியிடப்பட்ட  அறிவிப்புகளின் படி தமிழகத்தில் 2057 பள்ளிகளில் தான் கழிப்பறை  இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதற்காக ரூ.160 கோடியே 77  லட்சம் நிதியும் ஒதுக்குவதாக அறிவித்தனர். இந்நிலையில், மத்திய  மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தமிழகத்தில் 6152  பள்ளிகளில் கழிப்பறை இல்லை என்று அறிவித்துள்ளது அதிர்ச்சியாக  உள்ளது. 

இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் நேற்று அவசரம் அவசரமாக  பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தலைமையில் கல்வி அதிகாரிகளின்  கூட்டம் நடந்தது. அதில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் 9 மாவட்ட கல்வி  அதிகாரிகளை அழைத்து அந்த மாவட்டங்களில் பள்ளிகளில் கழிப்பறை  நிலைமைகள் குறித்து கேட்டறிந்தனர். அடுத்து மற்ற  மாவட்டங்களுக்கும் நடக்க உள்ளது. வீடியோ கான்பரன்ஸ் மூலம்  தகவல்கள் பெறப்பட்ட பிறகு பள்ளிகளில் கழிப்பறைகள் ஏற்படுத்த முடிவு  செய்துள்ளனர். இதன்படி, ஊரக வளர்ச்சி, எம்எல்ஏ, எம்பிக்கள் நிதி,  பள்ளிக் கல்வித்துறையின் நிதி, ஆகியவற்றை பயன்படுத்துவது அல்லது  எந்த திட்டத்தின் கீழ் கழிப்பறை கட்டுவது என்றும் முடிவு செய்ய  உள்ளனர்.  இதையடுத்து, வரும் மார்ச் 31ம் தேதிக்குள் கழிப்பறைகள்  கட்டி முடிக்கவும் திட்டமிட்டுள்ளனர். 

No comments:

Post a Comment