உலகெங்கிலும் துவக்கப்பள்ளி ஆசிரியர் பற்றாக்குறை: யுனெஸ்கோ - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, October 30, 2014

உலகெங்கிலும் துவக்கப்பள்ளி ஆசிரியர் பற்றாக்குறை: யுனெஸ்கோ

உலகம் முழுவதும் தற்போது, 2 கோடியே 90 லட்சம் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். வரும் 2015ம் ஆண்டில், உலகளாவிய ஆரம்பக் கல்வி என்ற நிலையை அடைய வேண்டுமெனில், இன்னும் கூடுதலாக 40 லட்சம் ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள் என்று யுனெஸ்கோ அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அந்த இலக்கை 2030ம் ஆண்டில் அடைவது என்று வைத்துக்கொண்டால், அதன்பொருட்டு, மொத்தம் 2 கோடியே 70 லட்சம்
தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள்.
உலகளவில், மொத்தம் 65 கோடி குழந்தைகள், பள்ளி செல்லும் வயதில் உள்ளனர். ஆசிரியர் பற்றாக்குறையின் காரணமாக, அவர்களில், 25 கோடி பேர் அடிப்படைக் கல்வியை முறையாக கற்பதில்லை. பல நாடுகளில், துவக்கப் பள்ளிகளுக்கு, சரியான பயிற்சி பெறாத ஆசிரியர்கள், பல்வேறு காரணங்களால் நியமிக்கப்பட்டு விடுகிறார்கள்.
மூன்றில் ஒரு பங்கு நாடுகளில், 75%க்கும் குறைவான ஆசிரியர்களே, பயிற்சி பெற்றவர்கள். ஆகையால், துவக்கக் கல்வியின் தரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 93 நாடுகளில், கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது.
2015ம் ஆண்டில், Universal primary education என்ற இலக்கை அடைய, இந்தியாவிற்கு மட்டும், குறைந்தபட்சம் 30 லட்சம் ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். ஆப்ரிக்காவின் சஹாரா பிராந்திய நாடுகளில், கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது.
போதுமான பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் இல்லாத நாடுகளில் வாழும் குழந்தைகளுக்கு, தரம் வாய்ந்த சர்வதேச துவக்க கல்வி என்பது ஒரு தொலைதூரக் கனவாகவே உள்ளது. பயிற்சிபெற்ற புதிய ஆசிரியர்களை நியமித்தல் மற்றும் இருக்கும் ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சியை அளிப்பதன் மூலமே, துவக்கப் பள்ளி குழந்தைகளுக்கான சிறந்த கல்வியை அளிக்க முடியும்.
2015ம் ஆண்டில், 15 லட்சம் ஆசிரியர்கள் பாகிஸ்தானுக்கும், 3 லட்சம் ஆசிரியர்கள் பங்களாதேஷ் நாட்டிற்கும் தேவைப்படுகிறார்கள். ஒவ்வொரு நாட்டிலும், நியமிக்கப்படும் புதிய ஆசிரியர்கள், குறைந்தபட்சம் பள்ளி மேல்நிலைப் படிப்பை முடித்தவர்களா? என்பதை உறுதிசெய்ய வேண்டியது அவசியம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment