கல்வித்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு சீருடையை கழற்றி வீசி மாணவர்கள் போராட்டம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, November 13, 2014

கல்வித்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு சீருடையை கழற்றி வீசி மாணவர்கள் போராட்டம்


கல்வித்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு தரமற்ற சீருடையை கழற்றி வீசி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலைமறியல்

புதுவை அரசு சார்பில் மாணவர்களுக்கு வண்ண சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த சீருடைகள் தரமற்று இருப்பதாக மாணவர்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது. தரமற்ற சீருடைகள் வழங்கியதை கண்டித்து நாவலர் நெடுஞ்செழியன், ஜவகர்லால்நேரு தொழில்நுட்ப பள்ளி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்தனர்.

அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக வந்து மடுவுபேட் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து லாஸ்பேட்டை போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.

சீருடையை கழற்றி வீசி...

மறியலை கைவிட்ட மாணவர்கள் நேராக கல்வித்துறை அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு மாணவர்கள் கூட்டமைப்பு தலைவர் சாமிநாதன் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர் களில் சிலர் தங்களது மேல்சட்டையை (பள்ளி சீருடை) கழற்றி வீசினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு இயக்குனர் குமார் அழைத்தார். அவருடன் மாணவர் கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது மாற்று சீருடை வழங்கிட நடவடிக்கை எடுப்பதாக இயக்குனர் குமார் உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பாரதியார் பல்கலைக்கூடம்

அரியாங்குப்பத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கூடத்தில் முதல்வர் பதவி காலியாக இருப்பதை கண்டித்து மாணவர்கள் தொடர்ந்து வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது போராட்டம் நேற்று 4-வது நாளாக நீடித்தது

No comments:

Post a Comment