சென்னை பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல் துறை சார்பில் திருவள்ளுவரின் படம் வரையப்பட்ட பொன்விழா ஆண்டை முன்னிட்டு திருக்குறளின் தொடர்பியல் பரிமாணங்கள் குறித்த கருத்தரங்கம் பல்கலை பேரவை இல்லத்தில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு பல்கலைக்கழக துணைவேந்தர் தாண்டவன் தலைமை தாங்கினார். மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது: திருக்குறள் தமிழகத்திற்கானது மட்டுமல்ல அது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் தேவையானது. இந்தியாவை உலகளவில் அறிமுகப்படுத்த திருக்குறளை முன்வைக்க வேண்டும்.
திருக்குறளின் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு கருத்து உள்ளது. திருக்குறளை இந்தியாவில் இருக்கும் எல்லா பள்ளிகளிலும் கற்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய ஆட்சி பணி அதிகாரிகள் திருக்குறளையும் அதன் கருத்துக்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். இது குறித்து நான் பாராளுமன்ற கூட்டத்தில் பேசுவேன். மத்திய கலாசாரதுறை மந்திரியை சந்தித்து, இந்த பொன்விழா ஆண்டை இந்தியா முழுவதும் கொண்டாட வேண்டும். உலகம் முழுவதும் இருக்கும் இந்திய தூதரகங்களிலும் விழா எடுக்க வேண்டும். அப்போது தான் நமது கலாசாரம் உலக நாடுகளுக்கு தெரியவரும் என கோரிக்கை வைப்பேன். நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த மகாத்மா காந்தி தேச தந்தையானார். ஆனால், உண்மையான தேச தந்தை திருவள்ளுவர் தான். இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment