தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் கட்டடம் இல்லை: இடப்பற்றாக்குறையால் தேர்ச்சி குறையும் அபாயம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, December 28, 2014

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் கட்டடம் இல்லை: இடப்பற்றாக்குறையால் தேர்ச்சி குறையும் அபாயம்

தமிழகத்தில், நான்கு ஆண்டுகளாக தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிகளுக்கு, கட்டடம் உள்ளிட்ட வசதி வாய்ப்பு ஏற்படுத்தித்தராததால், ஆசிரியர்கள் விரக்தியடைந்துள்ளனர். இதனால், தேர்ச்சி விகிதம் சரியவும் வாய்ப்பிருப்பதாக, அச்சம் தெரிவித்துள்ளனர்.
             தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின், கடந்த, 2009 - 10ம் ஆண்டில், 200 நடுநிலைப்பள்ளிகளும், 2010 - 11ல், 344 நடுநிலைப்பள்ளிகளும், 2011 - 12ம் ஆண்டில், 710 நடுநிலைப்பள்ளிகளும் தரம் உயர்த்தப்பட்டன.

ஒதுக்கீடு:
            இதில், 2009 - 10ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்ட, 200 பள்ளிகளுக்கும், தலா நான்கு வகுப்பறை, ஒரு சயின்ஸ் லேப், ஒரு நூலக அறை, ஒரு கம்ப்யூட்டர் அறை, ஒரு தலைமை ஆசிரியர் அறை, ஒரு ஆர்ட் அண்டு கிராப்ட் அறை உட்பட, 9 அறைகளும், மாணவ, மாணவியருக்கு தனியாக டாய்லெட் கட்ட, 58.12 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதி போதுமானதாக இல்லாததால், இக்கட்டடம் கட்டி முடிப்பதில் சிக்கல் உருவானது. கட்டடங்கள் கட்டாததால், அடுத்தடுத்த கல்வியாண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட, 344 மற்றும், 710 பள்ளிகளுக்கும், கட்டடத்துக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் என, மாநில அரசு வலியுறுத்தியதும், தாமதத்துக்கு காரணமாக அமைந்துவிட்டது. இதனால், கடந்த, 2010 - 11ம் கல்வியாண்டிலிருந்து, அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்ககத்திலிருந்து தரம் உயர்த்தப்பட்ட, 1,054 பள்ளிகளுக்கும், தமிழக அரசு சார்பில் தரம் உயர்த்தப்பட்ட, 150 பள்ளிகளுக்கும், வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வில்லை.
அவதி:
            இதனால், மிகக்குறைந்த வகுப்பறைக்குள், மாணவர்களை அடைத்து வைத்தும், மாணவர்கள் சேர்க்கையை கூடுதலாக்க முடியாமலும், ஆசிரியர்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
                 இதுகுறித்து அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, செயல்பட்டு வந்த நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படும்போது, ஒன்று முதல் ஐந்து வரையிலான துவக்கப்பள்ளி தனியாக பிரிக்கப்படும். மீதமுள்ள வகுப்பறையில், ஆறு முதல், 10ம் வகுப்பு வரையில் நடத்த வேண்டும். மிகக்குறைந்த அளவே, வகுப்பறை இருப்பதால், ஒரு வகுப்புக்கு, ஒரு அறை என்பதே அரிதாக இருக்கும். ஒரு சில பள்ளி களில், 6, 7 வகுப்புகளுக்கும் ஒரே அறை என்ற நிலை உள்ளது. ஒரு சில தலைமை ஆசிரியர்கள், எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., நிதி உள்ளிட்ட வைகளால், ஒரு சில வகுப்பறை ஏற்படுத்தினாலும், அவை போதுமானதாக இருப்பதில்லை.
பிரச்னை:
                 வகுப்பறைக்கும் அதிகமாக, மாணவர்களை சேர்த்தால், பிரச்னை உருவாகும் என்பதால், மாணவர் சேர்க்கை சமயத்திலும், பல மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பு மறுக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், அறிவியல் ஆய்வகம் அமைக்க, 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்படுகிறது. ஆனால், அவற்றை வைத்து பயன்படுத்த அறை வசதியில்லாததால், அவை பார்சல் கூட பிரிக்கப்படாமல், வைக்கப்பட்டுள்ளது. போதிய இட வசதியின்மை, லேப் உபகரணம் இருந்தும் அவற்றை பயன்படுத்த முடியாத நிலை உள்ளிட்டவைகளால், புதிதாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் சரியும் நிலை உருவாகியுள்ளது. உடனடியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளி களில், கூடுதல் வகுப்பறைகளை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment