கோவையில் அனுமதி பெறாத 115 நர்சரி பள்ளிகள் மூடல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, February 6, 2015

கோவையில் அனுமதி பெறாத 115 நர்சரி பள்ளிகள் மூடல்

அரசின் அனுமதி பெறாமல் இயங்கி வரும் நர்சரி, தொடக்க பள்ளி மற்றும் விளையாட்டு பள்ளிகளை மூட ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டு முதன்மை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய முதலாவது பெஞ்ச் கடந்த ஆகஸ்டு மாதம் மாநிலம் முழுவதும் அனுமதி பெறாமல் இயங்கி வரும் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்க தொடக்க கல்வி இயக்குனரகத்துக்கு உத்தரவிட்டது.
அதனடிப்படையில் அனுமதி பெறாமல் இயங்கும் பள்ளிகள் குறித்த பட்டியல் ஐகோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பள்ளிகளுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 14–ந் தேதி முதல் கட்ட நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது.
அதையடுத்து சம்மந்தப்பட்ட பள்ளிகள் அக்டோபர் 15–ந் தேதிக்குள் நோட்டீசுக்கு விளக்கம் அளித்தன. அதனடிப்படையில் அந்த பள்ளிகளில் தொடக்க கல்வி அதிகாரிகள் நவம்பர் 30–ந் தேதி வரை நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த நிலையில் உரிய கால அவகாசம் வழங்கியும் அனுமதி பெறாத பள்ளிகளை மூட ஐகோர்ட்டு ஜனவரி 31–ந் தேதி இறுதிநாளாக கெடு விதித்து உத்தரவிட்டது. ஆனால் நாட்கள் கடந்துவிட்ட நிலையில் கோவையில் இன்னும் அந்த பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளுக்கு மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் சார்பில் 3–ம் கட்ட நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி காந்திமதியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–
கோவை மாவட்டத்தில் தொடக்க கல்வி அதிகாரி அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் 1,142 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இது தவிர ஆண்டுதோறும் புதிய நர்சரி பள்ளிகள் தொடங்கப்படுகின்றன. நர்சரி பள்ளிகளுக்கு என்று பல்வேறு விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
அனுமதி பெற தீயணைப்பு நிலைய அதிகாரிகளின் சான்றிதழ், சுகாதார துறையின் ஆட்சேபனையின்மை சான்றிதழ், கட்டிட உறுதி தன்மை சான்றிதழ், என்ஜினீயரின் கிளீயரிங் சான்றிதழ் உள்ளிட்டவை மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
அவற்றை சரிபார்த்து பள்ளிகளில் மாவட்ட உதவி தொடக்க கல்வி அதிகாரியின் தலைமையிலான ஆய்வு கமிட்டி பள்ளியில் போதுமான அளவுக்கு உள்கட்டமைப்பு வசதி உள்ளதா? என ஆய்வு செய்த பின்னர் அனுமதி வழங்கப்படும்.
இதனடிப்படையில் மாவட்டத்தில் ஆய்வு நடத்திய போது மாவட்டத்தில் உரிய அனுமதி பெறாமல் 319 தனியார் நர்சரி பள்ளிகள் இயங்கி வருவது கண்டறியப்பட்டது. இவற்றில் 30 பள்ளிகள் தங்களது அங்கீகாரத்தை புதுப்பிக்காமல் இயங்கி வந்தன.
இந்த பள்ளிகளுக்கு முதல்கட்ட எச்சரிக்கை நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து உரிய அனுமதி பெற தேவையான விண்ணப்பங்களை 200 பள்ளிகள் தொடக்க கல்வி அலுவலகத்தில் சமர்பித்தன.
இதையடுத்து உரிய விளக்கம் அளிக்காத 119 பள்ளிகளுக்கு 2–ம் கட்ட நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு இறுதி காலக்கெடுவும் விதிக்கப்பட்டது.
இந்த காலகட்டத்தில் பிப்ரவரி 1–ந் தேதி 4 நர்சரி பள்ளி நிர்வாகம் தாங்களாகவே முன் வந்து தங்களது பள்ளிகளை மூடிவிட்டனர். இந்த பள்ளிகள் தவிர 115 பள்ளிகள் அங்கீகாரம் பெறுவதற்கான எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இதையடுத்து பள்ளிகளை ஏன் அரசு மூடக்கூடாது? என்று கேட்டு 3–வது கட்ட நோட்டீசும் வினியோகிக்கப்பட்டுவிட்டது.
உரிய அனுமதி பெற சென்னை ஐகோர்ட்டு விதித்திருந்த காலக்கெடு முடிவடைந்தது. எனவே அனுமதி பெறாத பள்ளிகள் அனைத்தும் மூடப்பட உள்ளன. அந்த நடவடிக்கையை இன்னும் 1 வார காலத்துக்குள் நடைபெறும்.
அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி 115 நர்சரி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பட்டியல் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அந்த மாணவர்களை அருகில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் ஆலோசிக்க உள்ளோம்.
அதன் பின்னர் இயக்குனகரத்துக்கு அறிக்கை சமர்பித்து உரிய அனுமதி பெற உள்ளோம். இறுதியாக மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற்று பட்டியலில் உள்ள பள்ளிகளை மூட நடவடிக்கை எடுப்போம் என்றார்.

No comments:

Post a Comment